தமிழகத்திலுள்ள அனைத்து திரையரங்குகளும் ஒரே நபரின் கையில் வந்துவிட்டால், நிலை என்னாகும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் பேசியது தி.மு.க.வினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னையில் ஒரு திரைப்பட இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், “தமிழகத்தைப் பொறுத்தவரை திரைப்படத்துறை மூலம் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது. இனியும் மாற்றங்களை ஏற்படுத்த முடியும். ஆட்சி அதிகாரத்தையே மாற்றுவதில் திரைப்படத்துறை பெரும் பங்கு வகித்திருக்கிறது. திரைப்படத்துறையில் இருந்துதான் அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் முதல்வராக வந்திருக்கிறார்கள். அதேபோல, நடிகர் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராக இருந்திருக்கிறார். இதற்கு காரணம், மக்கள் பலவீனமானர்களா அல்லது திரைத்துறை பலமானதா என்று பார்த்தால், திரைத்துறையில் இருந்தவர்கள் பலமானவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பது புலனாகிறது.
குறிப்பாக, திராவிட அரசியலை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்த பங்கு சினிமாவுக்கு உண்டு. எம்.ஜி.ஆர். சினிமாவில் அழகை மட்டுமே காட்டி ஆட்சியைப் பிடிக்கவில்லை. அரசியல் பேசினார். மேலும், தனது அணுகுமுறைகள் மூலம் மக்களை ஈர்த்தார். மக்களிடம் அவர் காட்டிய அக்கறைதான் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாட காரணமாக இருந்தது. ஆகவே, சமூக மாற்றத்துக்கான ஆயுதமாகவும் சினிமாவை பயன்படுத்தலாம். ஆனால், சமீபகாலமாக திரைத்துறை கார்ப்பரேட் மயமாகி வருகிறது. முதலில் 30 லட்சத்தில் படம் எடுத்து குறைந்த விலைக்கு வினியோகம் செய்தார்கள். தற்போது, 300 கோடியில் படம் எடுக்கிறார்கள். இதனால், இயக்குனர்கள் முதல் தொழிலாளர்கள் வரை பாதிக்கப்படுகிறார்கள். ஆகவே, அதை தடுக்க போராட வேண்டியுள்ளது.
ஒரே நபரின் கையில் திரையரங்குகள் வந்துவிட்டால் நிலைமை என்னாகும்? நான் யாருக்கு எதிராகவும் இதை பேசவில்லை. எனக்கு சமூக பொறுப்பு இருக்கிறது. ஆகவே, சமூக நீதி பேசுவோர் கையில் திரைத்துறை இருக்க வேண்டும்” என்று பேசியிருக்கிறார். திருமாவளவனின் இந்த பேச்சுதான் தி.மு.க.வினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழ் படங்கள் மட்டுமல்லாது தெலுங்கு உள்ளிட்ட பிற மொழி படங்களையும் தயாரிப்பது, வாங்கி வினியோகம் செய்வது போன்ற பணிகளில், முதல்வர் ஸ்டாலின் மகனும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம்தான் செய்து வருகிறது. ஆகவே, திருமாவளவன் வேண்டுமென்றே மறைமுகமாக உதயநிதியை குத்திக்காட்டி பேசி இருக்கிறார் என்று குமுறுகிறார்கள்.
மேலும், கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திருமாவளவன், பா.ஜ.க. மற்றும் சனாதன அமைப்புகளோடு கூட்டணி அமைக்கத் தயார் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால், தி.மு.க. கூட்டணியிலிருந்து விலகி பா.ஜ.க.வுடன் கைகோர்க்கும் மனநிலையில் திருமாவளவன் இருக்கிறார் போல. அதனால்தான், தி.மு.க.வையும், உதயநிதியையும் மறைமுகமாகத் தாக்கிப் பேசியிருக்கிறார் என்று சந்தேகிக்கிறார்கள். ஆகவே, பட்டிமன்றம் நடத்தாத குறையாக விவாதித்து வருகிறார்கள்.