கிறிஸ்தவ பெண் மத போதகர் கைது!

கிறிஸ்தவ பெண் மத போதகர் கைது!

Share it if you like it

இந்தியாவில் கடந்த 6 ஆண்டுகளாக சட்டவிரோதமாகத் தங்கி இருந்ததோடு, பாதிரியார்களை குறிவைத்து சீட்டிங் செய்து வந்த இலங்கையைச் சேர்ந்த கிறிஸ்தவ பெண் மதபோதகரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

இலங்கையைச் சேர்ந்தவர் மானுவேல் மரியா செல்வம். கிறிஸ்தவ பெண் மத போதகரான இவர், கடந்த 2016-ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்திருக்கிறார். பின்னர், சென்னை அண்ணா நகரில் வாடகைக்கு வீடு எடுத்து குடியேறியவர், இங்கும் மத போதகராக செயல்பட்டு வந்தார். இந்த சூழலில், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பேராயர் காட்ஃப்ரே வாஷிங்டன் நோபுள், பெண் மத போதகர் மானுவேல் மரியா செல்வம் மீது சமீபத்தில் சென்னை பெரியமேடு போலீஸில் புகார் அளித்தார். அப்புகாரில், “இலங்கையைச் சேர்ந்த சிஸ்டர் மரியா, எனது மகனுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 8.50 லட்சம் ரூபாயை மரியா ஏமாற்றி விட்டார். பணத்தை திருப்பி கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுத்தார். இதேபோல பல பாதிரியார்களை ஏமாற்றி இருக்கிறார்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இப்புகாரின் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்காததால், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இப்புகார் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீஸார் மரியாவிடம் விசாரணை மேற்கொண்டனர். மரியா, இலங்கையைச் சேர்ந்தவர் என்பதால் அவரது குடியுரிமை ஆவணங்களை போலீஸார் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அவரிடம் இந்திய முகவரியுடன் கூடிய இந்திய பாஸ்போர்ட் இருப்பது தெரியவந்தது. எனவே, குடியுரிமை அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டனர். இதில், மானுவேல் மரியா செல்வம் கடந்த 6 ஆண்டுகளாக போலி பாஸ்போர்ட் வைத்து இந்தியாவில் தங்கி இருப்பது தெரியவந்தது.

இதனிடையே, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவன் குடியேற்றத்துறை அதிகாரி நிபின் ஜோசப், மானுவேல் மரியா செல்வம் மீது கடந்த 16-ம் தேதி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அப்புகாரில், ‘‘சென்னை அண்ணாநகர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த மானுவேல் மரிய செல்வம் என்பவர், 2016 செப்டம்பர் 8-ம் தேதி இந்திய பாஸ்போர்ட்டுக்கு பதிவு செய்தார். இதற்காக அவர் கொடுத்த ஆவணங்களை ஆய்வு செய்தபோது, அனைத்தும் போலி என்பது தெரிந்தது. எனவே, அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர். இதில், மரியா இலங்கையில் இருந்து போலி பாஸ்போர்ட்டில் சென்னைக்கு வந்து மத போதகரானதும், அண்ணா நகர் கிழக்கு பகுதியில் 6 ஆண்டுகளாக குடியிருந்து வருவதாகக் கூறி போலி ஆதார் அட்டை மற்றும் வங்கிக் கணக்குகள் தொடங்கி, நுங்கம்பாக்கத்தில் உள்ள பாஸ்போர்ட் நிறுவனத்தில் இந்திய குடியியுரிமை பெற்று, பாஸ்போர்ட் பெற்றதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, போலி ஆவணங்கள் மூலம் இந்திய பாஸ்போர்ட் பெற்று மோசடி செய்த மத போதகர் மானுவேல் மரியா செல்வத்தை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.


Share it if you like it