75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, 2-வது ஆண்டாக சென்னை இலக்கிய விழா நடைபெறவிருக்கிறது.
இந்திய நலன்களுக்காக பாடுபடும் நபர்களை ஒன்றிணைக்க முற்படும் அறிவு இயக்கமான ‘இந்தோ அனாலிடிக்ஸ்’ சார்பில் மாரச் 26, 27-ம் தேதிகளில் சென்னை மயிலாப்பூரிலுள்ள ரசிக ரஞ்சனி சபாவில் இந்த சென்னை இலக்கிய விழா நடைபெறுகிறது. விழாவை, தமிழக பா.ஜ.க. தலைவரும், முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியுமான அண்ணாமலை குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்து சிறப்புரையாற்றுகிறார். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தமிழ் பகுதியின் பங்களிப்பை சிறப்பிக்கும் வகையில், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் இரு பிரிவினர்களும் தனித்தனியாக பேசுகின்றனர்.
ஆங்கிலப் பிரிவில் பிரபல தொலைக்காட்சிக் குழு உறுப்பினர் ரத்தன் ஷர்தா, ஜே.என்.யூ. பேராசிரியர் ஆனந்த் ரங்கநாதன், உள்துறை அமைச்சகத்தின் ஓய்வுபெற்ற துணைச் செயலாளர் ஆர்.வி.எஸ்.மணி, டாக்டர்.ஜானகிராமன் மற்றும் எம்.ஆர் வெங்கடேஷ், பிரபல தொலைக்காட்சி நடிகர் மோகன் ராமன், ஐ.பி. பல்கலைக்கழகத்தின் விஜிதா சிங் அகர்வால், நீனா ராய் மற்றும் சாய் ஸ்வரூப அய்யர் ஆகியோர் பேசுகின்றனர். தமிழ்ப் பிரிவில் சாகித்ய அகாடமி விருது பெற்ற ஜோ.டி.குரூஸ், யூடியூபர் மாரிதாஸ், பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே, எழுத்தாளர் சோ.தர்மன், டாக்டர்.சுப்பிரமணிய பிள்ளை, டாக்டர்.கௌரி, கார்வேந்தன், பிரபல திரைபட நடிகர் கனல் கண்ணன் ஆகியோர் பேசுகின்றனர்.