கருணாநிதி சமாதியில் திடீரென முளைத்த ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயில் கோபுரத்தால், தி.மு.க.வினர் அதிர்ச்சியடைந்திருக்கும் நிலையில், நெட்டிசன்களோ இதுதான் தி.மு.க.வினரின் பகுத்தறிவா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சமாதி சென்னை மெரீனா கடற்கரையில் அமைந்திருக்கிறது. கடவுள் மறுப்புக் கொள்கையும், பகுத்தறிவு கருத்துக்களையும் கொண்ட கருணாநிதியின் சமாதியில், அவரது எண்ணங்களுக்கு நேர்மாறாக செயல்பட்டு வருகின்றனர் தி.மு.க.வினர். உதாரணமாக, கருணாநிதி சமாதியில் அவருக்குப் பிடித்தமான தயிர் வடையை படையல் செய்வது, பட்ஜெட் தாக்கல் செய்யும்போது, அவரது சமாதியில் வைத்து ஆசி வாங்கி எடுத்துச் செல்வது என பகுத்தறிவை பதம் பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில்தான், கருணாநிதி சமாதியில் திடீரென ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயில் கோபுரம் அலங்காரம் செய்யப்பட்டிருக்கிறது. இதைக் கண்ட தி.மு.க.வினர் பகுத்தறிவு பகலவனின் சமாதியில் கோயில் கோபுரமா என்று அதிர்ச்சி அடைந்தனர். அதேசமயம் நெட்டிசன்களோ, இந்த பகுத்தறிவு தி.மு.க.வினரிடம் படாதபாடு பட்டு வருகிறது. சமாதியில் தயிர் வடையை படையல் செய்கிறார்கள். நாளிதழ்களை வைக்கிறார்கள். வேட்பாளர்களின் பட்டியலை வைக்கிறார்கள். பட்ஜெட்டை வைத்து ஆசி வாங்குகிறார்கள் என்று கிண்டலடித்து வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, கருணாநிதி சமாதியில் திடீரென ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயில் கோபுரம் முளைத்தது தொடர்பாக விசாரித்தோம். அதற்கு, சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரைத் தொடர்ந்து, மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் தற்போது நடந்து வருகிறது. அந்த வகையில், இன்று இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடக்கிறது. இதற்காக, அத்துறையின் அமைச்சர் சேகர் பாபு, தமிழக அரசு முத்திரையில் இடம்பெற்றிருக்கும் ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயில் கோபுரத்தை கருணாநிதி சமாதியில் அலங்காரம் செய்திருக்கிறார் என்றார்கள்.
என்னடா இது தி.மு.க.வுக்கு வந்த சோதனை!