சென்னை – கோவை இடையேயான வந்தே பாரத் ரயில் தொடக்க விழா, விமான நிலைய முனையம் திறப்பு மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைப்பதற்காக நேற்று ஒருநாள் பயணமாக சென்னை வந்திருந்தார் பாரத பிரதமர் மோடி. அப்போது, சென்னை விமான நிலையத்துக்கு உள்ளேயும், வெளியேயும் பிரதமர் மோடி சென்று வருவதற்கு, பிரத்யேக பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய சிறப்பு நுழைவு வாயில் அமைக்கப்பட்டிருந்தது. அதேசமயம், அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், இதர வி.வி.ஐ.பி.க்கள் செல்வதற்கு மாற்று நுழைவு வாயில் அமைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், பிரதமரை வழியனுப்புவதற்காக அரசியல் கட்சித் தலைவர்களும், வி.வி.ஐ.பி.க்களும், தமிழக அமைச்சர்களும் சென்னை விமான நிலையத்துக்கு வந்தனர். அப்போது, இதர அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நுழைவு வாயில் வழியாக உள்ளே சென்ற நிலையில், அமைச்சர்கள் பொன்முடியும், ஐ.பெரியசாமியும் பிரதமரின் சிறப்பு நுழைவு வாயில் வழியாகச் செல்ல முயன்றனர். ஆனால், அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த தமிழக போலீஸார் அனுமதி மறுக்கவே, அமைச்சர்களும், அவர்களது உதவியாளர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சிறிது நேரம் வாக்குவாதம் நீடித்த நிலையில், வேறு வழியின்றி அமைச்சர்கள் இருவரும் பிரதமர் செல்லும் சிறப்பு நுழைவு வாயில் வழியாக அனுமதிக்கப்பட்டனர். பின்னர், அந்த சிறப்பு நுழைவு வாயிலை போலீஸார் அடைத்து விட்டனர். பிரதமருக்கென்று சிறப்பு நுழைவு வாயில் அமைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், அமைச்சர் பொன்முடியின் அராஜகத்தால் அந்த வழியாக அனுமதிக்கப்பட்ட சம்பவம் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும், பிரதமர் செல்லும் நுழைவு வாயிலில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டிருந்தால் பொன்முடி பதில் சொல்வாரா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. அதேசமயம், பொதுமக்களை மிகவும் ஏளனமாகப் பேசுவதோடு, பிரதமரின் பாதுகாப்பு விஷயத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முயன்ற பொன்முடியின் அராஜகத்துக்கு முடிவு கட்டுவது யார் என்று நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். பொன்முடியை கொட்டத்தை முதல்வர் அடக்குவாரா?