சென்னையிலுள்ள பர்வீன் ஃபாஸ்ட் புட் கடையில் பரிமாறப்பட்ட ஃப்ரைடு ரைஸில் புழு இருந்தது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை சென்ட்ரல் அருகேயுள்ள மின்ட் தெருவில் இயங்கி வருகிறது பர்வீன் ஃபாஸ்ட் புட் மற்றும் பிரியாணிக் கடை. அப்பகுதியில் சற்று பிரபலமான கடை இது என்கிறார்கள். இக்கடைக்கு நேற்று ஒரு வாடிக்கையாளர் நண்பர்களுடன் சாப்பிடச் சென்றிருக்கிறார். இவர்கள் சிக்கன் ஃப்ரைடு ரைஸ் ஆர்டர் செய்திருக்கிறார்கள். சிறிது நேரத்தில் ரைஸ் தயாராகி அவர்களது டேபிளுக்கு வந்திருக்கிறது. சாப்பிடுவதற்காக ஸ்பூனில் சாப்பாட்டை எடுத்தபோது, அதில் புழு இருந்திருக்கிறது. இதனால், அதிர்ச்சியடைந்த அந்த வாடிக்கையாளர், சாப்பாட்டில் புழு இருந்ததை தனது செல்போனில் போட்டோ எடுத்துக் கொண்டார். பின்னர், சாப்பாட்டில் புழு இருப்பதாக கடைக்காரர்களிடம் கூறியிருக்கிறார். இதைக் கண்ட கடையின் கல்லாவில் இருந்த நபர், எங்கே புழுவை கொண்டு வந்து காட்டுங்கள் என்று கேட்டிருக்கிறார்.
இதையடுத்து, அந்த வாடிக்கையாளரும் சென்று காட்டி இருக்கிறார். உடனே, அந்த நபர் அந்தப் புழுவை எடுத்து நசுக்கிப் போட்டுவிட்டு (ஆதாரத்தை அழித்து விட்டாராம்), இது புழு இல்ல சார், ரைஸ்தான், போய் சாப்பிடுங்க என்று கூலாக கூறியிருக்கிறார். ஆனால், அந்த வாடிக்கையாளர் விடாமல் தகராறு செய்திருக்கிறார். உடனே, அக்கடையின் சமையல் மாஸ்டர், சார், இஷ்டம் இருந்தா சாப்பிடுங்க. இல்லன்னா போயிக்கிட்டே இருங்க. வியாபாரத்தை கெடுக்காதீங்க என்று தெனாவெட்டாகக் கூறியிருக்கிறார். இதனால், ஆத்திரமடைந்த அந்த வாடிக்கையாளர், அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடமும், கடைக்கு சாப்பிட வந்தவர்களிடமும் விஷயத்தைக் கூறியிருக்கிறார். இதனால், சாப்பிட வந்தவர்கள், கடைக்கு ஒரு கும்பிடை போட்டுவி்ட்டு, அந்த வாடிக்கையாளருக்கு நன்றியைக் கூறிவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.
இத்தகவல் அரசல் புரசலாக மீடியாக்கள் வரை சென்று விட்டது. இதைத் தொடர்ந்து, கடைக்கு விரைந்த சில நிருபர்கள், மேற்படி வாடிக்கையாளர் எடுத்து வைத்திருந்த போட்டோவை பெற்றுக் கொண்டு செய்தி போட்டுவிட்டார்கள். இதன் பிறகுதான் விவரம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இதனால், பர்வீன் ஃபாஸ்ட் புட் மற்றும் பிரியாணிக் கடையின் பெயர் சந்திசிரிக்கிறது. மேலும், மேற்படி பர்வீன் ஃபாஸ்ட் புட் கடையில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு செய்து, தரமற்ற உணவு வழங்கிய கடைக்கு சீல் வைக்க வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.