‘ஓலம்’ சூழ்ச்சி, வீழ்ச்சி, எழுச்சி என்கிற தலைப்பிலான காணொளி வெளியீட்டு விழா, சென்னை அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியில் நேற்று மாலை நடைபெற்றது.
350 ஆண்டுகளுக்கும் மேலாக ஐரோப்பிய ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்துப் போராடிய மன்னர்கள், தியாகிகள், வீரர்களில் அறியப்படாத பலரையும் பற்றிய தகவல்கள் அடங்கிய வரலாற்று தொகுப்புதான் இந்தக் காணொளி. இதில், 12 தலைப்புகளில் 12 பேர் வரலாற்று தகவல்களை தெளிவாக விளக்கிக் கூறியிருக்கிறார்கள். இக்காணொளி வெளியீட்டு விழா நேற்று (ஆகஸ்ட் 7-ம் தேதி) மாலை சென்னை அரும்பாக்கத்திலுள்ள டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியில் நடந்தது.
நிகழ்ச்சியில், மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன், டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தினர் நிறுவனரும், வேந்தருமான ஏ.சி.சண்முகம் எம்.எல்.ஏ., டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி செயலாளர் அசோக்குமார் முந்த்ரா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி, தமிழிசைக் கல்லூரி மாணவிகளின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. சிறப்பு விருந்தினர்கள் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.
தென்னிந்திய ஆய்வு மையத்தின் (Center for south indian studies) தமிழக ஒருங்கிணைப்பாளர் குமரேசன் வரவேற்றார். பாரத அன்னையின் பெருமை பற்றி புல்லாங்குழல் இசையோடு பாடினார் உதயகுமார். ஓலம் காணொளி பற்றி, அதன் இயக்குனரும், மீடியான் குழுவின் நிர்வாக உறுப்பினருமான ஆனந்த் டி பிரசாத் விரிவாக எடுத்துக் கூறினார். பிறகு, ஓலம் காணொளி வெளிவர பேருதவியாக இருந்த தௌலத் ஜெயின், சந்தன்மால் ஜெயின் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். பின்னர், எல்.முருகன் ஓலம் காணொளியை வெளியிட, முதல் பிரதியை ஏ.சி.சண்முகமும், அசோக்குமார் முந்த்ராவும் பெற்றுக் கொண்டனர்.
இதையடுத்து, ஓலம் காணொளியின் முன்னோட்டக் காட்சி ஒளிபரப்பப்பட்டது. மேடையிலுள்ள சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து, ஓலம் காணொளியின் பேச்சாளர்களும், இயக்குனர் மற்றும் பங்களிப்பாளர்களும் கவுரவிக்கப்பட்டனர். ஓலம் காணொளியை தொகுத்து வழங்கிய நடிகர் சசிக்குமார் சுப்பிரமணியன் கவுரவிக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, அசோக்குமார் முந்த்ரா, ஏ.சி.சண்முகம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். தொடர்ந்து, எல்.முருகன் சிறப்புரையாற்றினார். அப்போது, சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவுகூர்ந்தவர், ஓலம் காணொளியை உருவாக்கிய, ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்தார். மேலும், ஆங்கிலேயர்களின் ஆக்கிரமிப்புக்கு முன்பு எப்படி இந்தியர்கள் உலகுக்கே வழிகாட்டியாகவும், முன்னோடியாகவும் இருந்தார்களோ, அதேபோல நாட்டின் 100-வது சுதந்திரமான 2047-ம் ஆண்டு இந்தியா மீண்டும் உலக நாடுகளை வழிநடத்தும் வல்லமையை பெற்றிருக்கும் என்று உறுதிபடத் தெரிவித்தார்.
நிறைவாக, தென்னிந்திய ஆய்வு மையத்தைச் சேர்ந்த தரணி குணசேகரன் நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை துர்கா குமரேசன் தொகுத்து வழங்கினார்.