புதிதாக போடப்பட்ட தார்ச்சாலை லாரி டயரோடு ஒட்டிக்கொண்டு போன அவலம் சென்னையில் அரங்கேறி இருக்கிறது.
சென்னை பூந்தமல்லியில் லட்சுமிபுரம் ரோடு குண்டும் குழியுமாக இருந்து வந்தது. எனவே, இச்சாலையை புதுப்பிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, புதிய தார்ச்சாலை போடப்பட்டது. இதில் கொடுமை என்னவென்றால், குண்டும் குழியுமாக இருந்த சாலையை சரி செய்யாமலும், சரியான விகிதத்தில் தார் கலக்காமலும் சாலை போட்டப்பட்டதுதான். இதனால், லாரி போனதும் அச்சாலையிலிருந்து ஜல்லிக் கற்கள் எல்லாம் லாரியின் டயரோடு ஒட்டிக் கொண்டு போய் விட்டது.
இதைக்கண்ட மக்கள் கடும் ஆவேசம் அடைந்தனர். புதிதாக போடப்பட்ட தார்ச்சாலையை கைகளாலும், கால்களாலும் தேய்த்து பெயர்த்து எடுத்துக் காண்பித்தனர். இந்த வீடியோ வைரலான நிலையில் அப்பகுதி மக்கள் கொந்தளிக்கத் தொடங்கினர். இந்த விவகாரம் ஆளும் கட்சியினருக்குத் தெரியவரவே, கான்ட்ராக்ட்டரை அழைத்து புதிய ரோடு போடும்படி கூறியிருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து, அப்பகுதியில் புதிதாக மீண்டும் ரோடு போடப்பட்டிருக்கிறது.