பட்டாக் கத்தியுடன் போதை கும்பல் அட்டூழியம்: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது!

பட்டாக் கத்தியுடன் போதை கும்பல் அட்டூழியம்: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது!

Share it if you like it

சென்னையில் பட்டாக் கத்தியுடன் வலம் வந்து பொதுமக்களை சரமாரியாக வெட்டிய கஞ்சா போதை கும்பலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழகம் முழுவதுமே கொலை, கொள்ளை, பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, சென்னையில் தினமும் ஏதேனும் ஒரு வன்முறை சம்பவம் அரங்கேறி வருகிறது. கடந்த மே மாதம் மட்டும் சென்னையில் 25-க்கும் மேற்பட்ட கொலை சம்பவங்கள் அரங்கேறி இருக்கிற. இதனால், தலைநகரம் கொலைநகரமாகி வருகிறதா என்கிற விமர்சனம் எழுந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், தமிழக முதல்வரும், காவல்துறை தலைமையும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது என்று கூறிவருகின்றனர்.

இந்த நிலையில்தான், சென்னையில் அப்பாவி பொதுமக்களை பட்டாக் கத்தியால் சரமாரியாக வெட்டி அச்சுறுத்தி இருக்கிறது கஞ்சா போதை கும்பல் ஒன்று. சென்னை தாம்பரத்தை அடுத்த சேலையூர் முத்தாலம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி.) எலெக்ட்ரீசியனான வேலைபார்த்து வருகிறார். இவர், நேற்று வழக்கம்போல் பணியை முடித்துவிட்டு வீட்டின் அருகே நின்று தனது நண்பர்களுடன் பேசி கொண்டிருந்தார். அப்போது, 6 இரு சக்கர வாகனங்களில் 12 பேர் கொண்ட கும்பல் பட்டாக் கத்தியுடன் வந்திருக்கிறது. அவர்கள் அனைவரும் கஞ்சா போதையில் இருந்திருக்கிறார்கள்.

அக்கும்பல், கிருஷ்ணமூர்த்தியிடம் போட்டோ ஒன்றைக் காட்டி, இவரை தெரியுமா என்று கேட்டிருக்கிறது. அதற்கு அவர் தெரியாது என்று கூறியிருக்கிறார். உடனே, அக்கும்பல் தாங்கள் மறைத்து வைத்திருந்த பட்டாக் கத்தியை எடுத்து கிருஷ்ணமூர்த்தியை சரமாரியாக வெட்டி இருக்கிறது. இதைக் கண்ட மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்து நாலாபுறமும் சிதறி ஓடியிருக்கிறார்கள். இதில், சிலர் துணிச்சலாக வந்து தட்டிக் கேட்டிருக்கிறார்கள். அவர்களையும் அந்த போதை கும்பல் கண்மூடித்தனமாக தாக்கிவிட்டு, சாலையில் கத்தியை தேய்த்து கொண்டும், பட்டாக்கத்தி சுழற்றிக் கொண்டும் சென்று அராஜாகத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

இதனால் மிரண்டுபோன அப்பகுதி மக்கள் தங்களது வீடுகளுக்குள் சென்று கதவை சாற்றிக் கொண்டனர். மேலும், பலரும் அக்கம்பக்கத்து வீடுகளில் தஞ்சமாடைந்தனர். இதனிடையே, படுகாயமடைந்த கிருஷ்ணமூர்த்தியை அவரது நண்பர்கள் மீட்டு சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். கிருஷ்ணமூர்த்தியின் தலையில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் சேலையூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். பின்னர், போலீஸார் விரைந்து வந்தனர். இதைப் பார்த்த அக்கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.

இது தொடர்பாக, போலீஸார் வழக்கு பதிவு செய்து, பைக்கில் வந்த மர்ம நபர்கள் யார்? யாரை கொலை செய்ய வந்தார்கள்? மேற்கண்ட கும்பல் யார் அனுப்பிய கூலிப்படை? என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும், அப்பகுதியிலுள்ள சி.சி.டி.வி. காட்சிகளை கைப்பற்றி, மர்ம கும்பல் யார் என்பது தொடர்பாகவும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Share it if you like it