சென்னை கொரட்டூர், ஊரப்பாக்கம் உட்பட தமிழகம் முழுவதும் 45 இடங்களில் நடந்த ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பில் மொத்தம் 33,748 பேர் கலந்துகொண்டனர்.
நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமியன்று ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடந்து வருகிறது. ஆனால், தமிழகத்தில் மட்டும் திராவிடக் கட்சிகள் அனுமதி மறுத்து வருகின்றன. இதனால், நீதிமன்றத்தை நாடி, ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பை நடத்தி வருகிறது. வழக்கம்போல, கடந்த விஜயதசமி தினத்தன்றும் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு தி.மு.க. அரசு தடை விதித்தது. இதை எதிர்த்து நீதிமன்றத்தை நாடிய நிலையில், அணிவகுப்பை நடத்திக் கொள்ள கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி, கடந்த ஏப்ரல் 16-ம் தேதி சென்னை கொரட்டூர் மற்றும் ஊரப்பாக்கம் உட்பட தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடந்தது. இதில், சீருடை அணிந்து 20,529 பேரும், சீருடை அணியாமல் 13,219 பேரும் என மொத்தம் 33,748 பேர் கலந்து கொண்டனர்.
இந்த சூழலில், ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு எதற்காக நடத்தப்படுகிறது என்பது குறித்து, அவ்வமைப்பின் மாநில ஊடகத்துறை செயலாளர் நரசிம்மன் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், “ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தின் அணிவகுப்பு ஊர்வலம் என்பது சங்கத்தின் அன்றாட பயிற்சியின் ஓர் அங்கமாகும். ராணுவ அணிவகுப்பு பயிற்சியைப் போலவே, ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பிலும் சிறப்பான பயிற்சி பெற்ற பேண்ட் வாத்திய குழு இடம்பெறும். இந்த பேண்ட் இசையானது, நமது பாரம்பரிய கர்நாடக சங்கீதம் மற்றும் ஹிந்துஸ்தானி சங்கீதத்தால் உருவாக்கப்பட்டது. சாதாரண கூலித் தொழிலாளர்கள், மாணவர்கள், உயர் பதவியில் இருப்பவர்கள், தொழிற்சாலை மற்றும் அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் என பலதரப்பட்ட பிரிவினரும் சங்கத்தில் நன்கு பயிற்சி பெற்ற ஸ்வயம் சேவகர்களாக (தொண்டர்கள்) உள்ளனர். அவர்கள் அனைவரும் இந்த அணிவகுப்பு ஊர்வலத்தில் பங்கேற்றார்கள்.
சங்கத்தின் சீருடை அணிந்து ராணுவக் கட்டுப்பாட்டுடன் ஸ்வயம் சேவகர்கள் அணிவகுத்து செல்வதைக் கண்டு ஒட்டுமொத்த மக்களும் உற்சாகமடைந்து, ஊர்வலத்தில் கொண்டு செல்லப்படும் காவிக்கொடி மற்றும் பாரதமாதா படத்தின் மீது மலர்களை தூவி வரவேற்றார்கள். சாதாரண மக்களையும் கட்டுப்பாடுடைய குடிமகன்களாக சங்கம் உருவாக்கியுள்ளதை எடுத்துக்காட்டும் விதமாக இந்த அணிவகுப்பு ஊர்வலம் அமைந்துள்ளது. பொதுமக்கள் மற்றும் ஹிந்து சமுதாயத்திற்கு நம்பிக்கையை ஏற்படுத்தவும், ஒற்றுமையாகவும், சுய ஒழுக்கத்துடனும், நேரம் தவறாமையை கடைப்பிடிக்கவும் அணிவகுப்பு ஊர்வலத்தை ஆர்.எஸ்.எஸ் நடத்துகிறது. ஹிந்து சமுதாயத்தினர் ஒற்றுமையாகவும், கட்டுக்கோப்பாகவும், சீராகவும் அணிவகுத்துச் செல்ல முடியும் என்ற நம்பிக்கையை மக்கள் மத்தியில் விதைக்கும் ஒரு நிகழ்வாக ஆர்.எஸ்.எஸ் பேரணி அமைகிறது. ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தொடங்கி நூற்றாண்டை நெருங்கும் இந்தத் தருணத்தில் எல்லா மண்டல் / வார்டுகளிலும் சங்கத்தின் கிளையைத் தொடங்க முயற்சி செய்து வருகிறோம்” என்று கூறியிருக்கிறார்.