போதையில் பிடிபட்ட நபர்களை விடுவிக்குமாறு கூறி, இளம்பெண் ஒருவர் காவல் உதவி ஆய்வாளரை தாக்கியதோடு, காவலரை ஆபாச வார்த்தைகளால் திட்டி ரகளையில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விவகாரத்தில் இளம்பெண், அவரது கணவர் மற்றும் நண்பரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை சூளைமேடு போலீஸ் எஸ்.ஐ. லோகிதக்சன் தலைமையிலான போலீஸார், நெல்சன் மாணிக்கம் சாலை சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த 2 வாலிபர்களை பிடித்து சோதனை செய்தனர். இதில், இருவரும் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, வாகனத்தை ஓட்டி வந்தவர் மீது வழக்குப் பதிவு செய்வதற்காக, போலீஸ்காரர் வெள்ளைத்துரை ஆவணங்களை கேட்டிருக்கிறார். உடனே, அந்த வாலிபர்களில் ஒருவர் செல்போனில் யாரையோ தொடர்பு கொண்டு, போலீஸார் தங்களை பிடித்து விட்டதாகவும், உடனடியாக சம்பவ இடத்திற்கு வருமாறும் கூறியிருக்கிறார்.
இதன் பிறகு, சிறிது நேரத்தில் அங்கு வந்த இளம்பெண் ஒருவர், போலீஸ்காரர் வெள்ளைத்துரை மற்றும் எஸ்.ஐ. லோகிதக்சன் ஆகியோரிடம் சென்று பிடிபட்ட நபர்களை விடுவிக்குமாறு கூறி ரகளையில் ஈடுபட்டார். இதற்கு போலீஸார் மறுக்கவே, அங்கிருந்த ஒரு பொருளை எடுத்து எஸ்.ஐ. மீது தூக்கி வீசினார். மேலும், ஆபாச வார்த்தைகளால் போலீஸ்காரர் வெள்ளத்துறையை திட்டினார். அதோடு, குடித்துவிட்டு வண்டியை ஓட்டத்தான் கூடாது, தள்ளிக்கொண்டு வந்தால் அபராதம் போடக் கூடாது. அப்படி எதுவும் விதி இருக்கா, காட்டுங்க. போலீஸ்காரங்க எல்லாருமே பிராடுதான் என்று எஸ்.ஐ.யிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பின்னர், சக போலீஸார் சம்மந்தப்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தியபோது, மது போதையில் வாகனத்தை ஓட்டி வந்த நபர்கள் சூளைமேடு பகுதியைச் சேர்ந்த சத்யராஜ் மற்றும் அவரது நண்பர் வினோத்குமார் என்பதும், போலீஸாரை தாக்கி வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் சத்யராஜின் மனைவி அக்ஷயா என்பதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, மதுபோதையில் ஓட்டி வந்த வாகனத்தை பறிமுதல் செய்த சூளைமேடு போலீஸார், போலீஸ்காரர் வெள்ளைத்துரை அளித்த புகாரின் பேரில் அக்ஷயா, சத்யராஜ் மற்றும் வினோத்குமார் மீது வழக்குப் பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.
அக்ஷயா போலீஸாரிடம் ரகளையில் ஈடுபட்ட வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதைப் பார்த்த பலரும், ஈரோடு வெ.ராமசாமி மட்டும் இல்லையென்றால், இதெல்லாம் சாத்தியமாகி இருக்காது என்று வம்புகிழுத்து வருகின்றனர்.