வி.சி.க. பெண் கவுன்சிலர் மீது தி.மு.க. வட்டச் செயலாளர் தாக்குதல்!

வி.சி.க. பெண் கவுன்சிலர் மீது தி.மு.க. வட்டச் செயலாளர் தாக்குதல்!

Share it if you like it

சென்னையில் மழைநீர் வடிகாலை சீர்செய்து, நிவாரணப் பொருட்களை வழங்கிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பெண் கவுன்சிலரை, தி.மு.க. வட்டச் செயலாளர் அடிக்கப் பாய்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னையில் கடந்த சில தினங்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் பலத்த மழை பெய்தது. இதனால், சென்னை மாநகரின் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. குறிப்பாக, முதல்வர் ஸ்டாலின் தொகுதியான கொளத்தூர் மற்றும் புளியந்தோப்பு, கொரட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், இரண்டு நாட்களாக வெள்ளம் வடியவில்லை. இதனால் மக்கள் கடும் அவதிப்பட்டனர். அந்த வகையில், அசோக்நகர் பகுதியில் 3-வது அவென்யூ பகுதியில் தண்ணீர் தேங்கி நின்றது. எனவே, 135-வது வார்டு கவுன்சிலரான வி.சி.க.வைச் சேர்ந்த சாந்தி என்கிற யாழினி, அப்பகுதிக்குச் சென்று மழைநீர் வடிய ஆவன செய்ததோடு, அப்பகுதி மக்களுக்கு நிவாரணப் பொருட்களையும் வழங்கி இருக்கிறார்.

இதையறிந்த அப்பகுதி தி.மு.க. வட்டச் செயலாளர் செல்வக்குமார் வந்து சாந்தியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். நாங்கள் இருக்கும்போது நீ எப்படி நிவாரணப் பொருட்களை வழங்கலாம். எங்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்திக் கொடுத்து நீ நல்ல பெயர் வாங்கலாம் என்று பார்க்கிறாயா? என்று தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, அடிக்கவும் பாய்ந்திருக்கிறார். ஆனால், அப்பகுதி மக்களோ, சாந்திக்கு சப்போர்ட் செய்து, உங்களுக்குத்தான் நிவாரணம் கொடுக்க துப்பில்லை. நிவாரணம் கொடுப்பவரையும் ஏன் தடுக்கிறீர்கள் என்று வட்டச் செயலாளர் செல்வக்குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்பகுதியைச் சேர்ந்த ஒட்டுமொத்த மக்களும் சேர்ந்துகொண்டு எதிர்ப்புத் தெரிவித்ததால், வேறு வழியின்றி அங்கிருந்து சென்றுவிட்டார் செல்வக்குமார்.

இதுகுறித்து சாந்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், “நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது எனக்கு சீட் தராததால், கூட்டணிக் கட்சியினர் சேர்ந்து என்னை கவுன்சிலராக்கினார்கள். இதனால், நான் அவர்களுக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். குறிப்பாக, வட்டச் செயலாளர் செல்வக்குமார், முன்னாள் வட்டச் செயலாளர் கோ.சு.மணி ஆகியோர் மிகவும் டார்ச்சர் செய்கிறார்கள். என்னை மதிப்பதே இல்லை, நான் அவர்களின் கைப்பாவையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். மக்களுக்கு நல்லது செய்யக்கூட கவுன்சிலரான எனக்கு உரிமை இல்லையா?” என்று பரிதாபமாகக் கேட்டார். மேலும், இதுகுறித்து அசோக்நகர் போலீஸிலும் சாந்தி புகார் செய்திருக்கிறார். ஆளுங்கட்சியினர் மீது நமது போலீஸ் நடவடிக்கை எடுத்து விடுமா என்ன? புகார் புகாராக மட்டுமே இருக்கிறது. விரைவில் சமாதானப்படலம் நடைபெறும்.

இந்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

https://twitter.com/Minjursaleem/status/1588066713396219905


Share it if you like it