மேடைக்கு மேடை சனாதான எதிர்ப்பு பற்றி பேசி வருகிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன். ஆனால், அவரது கட்சிக்குள்ளே சனாதானம் இருப்பதாக அக்கட்சியின் மகளிர் அணி நிர்வாகி பேசி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், எந்த மேடையில் ஏறினாலும் சனாதனத்தை வேரறுப்போம் என்று முழங்கி வருகிறார். அதேபோல, சனாதனத்துக்கு எதிராக போராட்டங்களையும் நடத்தினார். சமீபத்தில் கூட மனுஸ்ம்ருதியை அச்சிட்டு வெளியிட்டார். ஆனால் பாவம், அவரது கட்சிக்குள்ளேயே சனாதனம் இருக்கிறது என்பதை கவனிக்கத் தவறிவிட்டார். இந்த சூழலில்தான், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குள் சனாதனம் இருக்கிறது என்று அக்கட்சியைச் சேர்ந்த மகளிர் அணி நிர்வாகி ஒருவர், திருமாவளவன் முன்னிலையிலேயே போட்டு உடைத்திருக்கிறார்.
விஷயம் இதுதான்…
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் மணிவிழா சமீபத்தில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அக்கட்சியின் மகளிர் விடுதலை இயக்கம் ஒருங்கிணைப்பில் மணிவிழாவுக்கான தங்கம் வழங்கும் நிகழ்ச்சி சென்னை தியாகராய நகரிலுள்ள சர்.பி.டி. தியாகராய அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருமாவளவனும் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய மகளிர் விடுதலை இயக்கத்தின் மாநிலச் செயலாளர் நற்சோனை, “மாவட்டங்களில் திருமாவளவன் பெயரைச் சொல்லி நன்கொடைகள் வசூலிக்கப்படுகிறது. மாவட்ட நிர்வாகிகள் பெண்களை மிகவும் கேவலமாக திட்டுகின்றனர். நான் எல்லாவற்றையும் ரெக்கார்டு செய்து வைத்திருக்கிறேன். அதையெல்லாம் காட்டுகிறேன்.
ஆண் சமூகம் இன்னும் திருந்தவில்லை. அவர்கள் திருந்த வேண்டும். நாங்கள் சனாதனத்தை எதிர்க்கின்றோம். ஆனால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குள்ளேயே சனாதனம் இருக்கிறது. அதுவும் மேல்மட்டம் முதல் கீழ்மட்டம் வரை இருக்கிறது” என்று பேசிக்கொண்டே இருந்தார். இவரது பேச்சைக் கேட்டு மகளிர் அணியினர் கைதட்டி ஆரவாரம் செய்து வரவேற்றனர். இதனால், திருமாவளவனின் முகத்தில் ஈயாடவில்லை. உடனே, தனக்குப் பின்னால் அமர்ந்திருந்த நிர்வாகி ஒருவரை அழைத்து, நற்சோனையை பேச்சை முடித்துக் கொள்ளும்படி கூறுமாறும், இல்லாவிட்டால் மைக்கை அனைத்து விடுமாறும் கூறியிருக்கிறார்.
அந்த ஆண் நிர்வாகியும் நற்சோனை அருகே சென்று பேச்சை முடித்துக் கொள்ளுமாறு கூறுகிறார். ஆனால், அவர் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார். உடனே, அந்த நிர்வாகி மைக்கை ஆஃப் செய்து விட்டார். இதனால், ஆத்திரமடைந்த நற்சோனை, அந்த நிர்வாகியின் கையை தட்டி விடுகிறார். அப்போது, நற்சோனைக்கு ஆதரவாக அரங்கில் அமர்ந்திருந்த மகளிர் அணியினர் எழுந்து நின்று கூச்சலிட்டனர். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர், நற்சோனையை சமாதானப்படுத்தி அமர வைத்தனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த பலரும் திருமாவளவன் ஊருக்குத்தான் உபதேசம் செய்வார் போல என்று கேலி கிண்டல் செய்து வருகின்றனர்.