தேவாலய சொத்தை விற்க முயன்று, போலீஸ் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒருவர் திருச்சபையின் போதகராக இருக்கக்கூடாது என்று கோரி, திருச்சபை விசுவாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
சென்னை வேளச்சேரியில் அட்வென்ட் கிறிஸ்தவ தேவாலயம் அமைந்திருக்கிறது. 150 ஆண்டுகள் பழமையான இந்த தேவாலயத்தின் போதகராக ஸ்டீபன் சின்னையா என்பவர் இருந்து வருகிறார். இத்திருச்சபைக்குச் சொந்தமாக, தேவாலயத்தின் எதிரிலேயே 3.1 ஏக்கர் நிலம் இருக்கிறது. இதன் இன்றைய மதிப்பு 65 கோடி ரூபாய். இந்த சூழலில், திருச்சபையின் போதகரான ஸ்டீபன் சின்னையா, பேராலய உறுப்பினர்கள் பன்னீர்தாஸ், சாமுவேல் டேவிட் ஆகியோருடன் சேர்ந்து மேற்படி நிலத்தை, திருச்சியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவருக்கு 21 கோடி ரூபாய்க்கு விலை பேசி, 3.80 கோடி ரூபாய் அட்வான்ஸ் தொகையும் வாங்கி இருக்கிறார்கள்.
இந்த விவகாரம் திருச்சபையைச் சேர்ந்த விசுவாசிகளுக்குத் தெரியவந்திருக்கிறது. பின்னர், விசுவாசிகள் சிலர் திருச்சி சத்தியமூர்த்தியிடம் மேற்படி நிலம் திருச்சபைக்குச் சொந்தமானது என்று எடுத்துக் கூறியிருக்கிறார்கள். இதையடுத்து, போதகர் ஸ்டீபன் சின்னையாவை சந்தித்த சத்தியமூர்த்தி, விவரத்தை எடுத்துச் சொல்லி தான் கொடுத்த அட்வான்ஸ் தொகையை திருப்பித் தருமாறு கேட்டிருக்கிறார். ஆனால், போதகர் சின்னையா உள்ளிட்டோர் பணத்தை தர மறுத்து விட்டனராம். எனவே, இதுகுறித்து திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தார் சத்தியமூர்த்தி. இதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், சாமுவேல் டேவிட்டை கைது செய்த நிலையில், தற்போது 3 பேரும் ஜாமீனில் இருந்து வருகின்றனர்.
இதையடுத்து, திருச்சபை விசுவாசிகள் பலர் போதகர் ஸ்டீபன் சின்னையாவுக்கு எதிராக களத்தில் குதித்தனர். மேலும், வழக்கம்போல பேராலயத்துக்கு வந்த போதகர் ஸ்டீபன் சின்னையாவுக்கு எதிராக பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் குதித்ததோடு, வெளியே போ வெளியே போ என்று கோஷம் எழுப்பினர். இதனால், அங்கு பதட்டமான சூழல் நிலவியது. இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், இரு தரப்பினரிடமும் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். எனினும், போதகர் சின்னையா பேராலயத்தை விட்டு வெளியேற வேண்டும் என்பது திருச்சபை விசுவாசிகளில் ஒரு தரப்பினரின் கோரிக்கையாக இருந்து வருகிறது.