மக்களவைத் தேர்தலையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி சென்னை தி. நகரில் பிரம்மாண்ட ‘ரோடு ஷோ’ என்கிற வாகனப் பேரணி நடத்தினார். பொதுமக்கள் சாலையின் இருபுறமும் திரண்டு மலர்தூவி கையசைத்து மோடிக்கு உற்சாக வரவேற்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :-
சென்னை என் மனதை வென்றது !
இந்த ஆற்றல் மிக்க நகரத்தில் இன்றைய ரோட்ஷோ என் நினைவில் என்றும் நிலைத்திருக்கும். மக்கள் சேவையில் தொடர்ந்து கடினமாக உழைக்கவும், நமது தேசத்தை மேலும் வளர்ச்சியடையச் செய்யவும் மக்களின் ஆசிகள் எனக்கு வலுவைத் தருகின்றன. சென்னையில் காணப்படும் இந்த உற்சாகம், தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரிய அளவில் ஆதரவளிக்கத் தயாராக உள்ளது என்பதைக் காட்டுவதாக உள்ளது.
இந்த துடிப்பான நகரத்தின் நலனுக்காக நமது அரசு தொடர்ந்து பாடுபடும் என்று சென்னையைச் சேர்ந்த எனது சகோதரிகள் மற்றும் சகோதரர்களுக்கு நான் உறுதியளிக்கிறேன். கடந்த சில ஆண்டுகளாக, ‘வாழ்வை எளிதாக்கும்’ முக்கிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்கும், திறப்பதற்கும் நான் அடிக்கடி இங்கு வந்துள்ளேன். இதன் அடிநாதமாக இருப்பது இணைப்புகள். சமீபத்தில், சென்னை விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிடம் திறக்கப்பட்டது. வரும் காலங்களில் எழும்பூர் ரயில் நிலையம் உட்பட இங்குள்ள ரயில் நிலையங்கள் புதுப்பிக்கப்படும்.
தமிழ் கலாச்சாரத்திற்கு நமது அரசு மிகுந்த மரியாதை அளிக்கிறது. ஐ.நா.வில் தமிழில் சில வார்த்தைகள் பேசும் வாய்ப்பு கிடைத்ததை எண்ணி பெருமிதம் கொண்டேன் ! உலக அரங்கில் தமிழ் கலாச்சாரத்தையும் மொழியையும் தொடர்ந்து பிரபலப்படுத்துவோம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ் கலாச்சாரத்தின் அம்சங்களை மேலும் பிரபலப்படுத்தும் நோக்கத்தில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், புதுப்பிக்கப்பட்ட தொலைக்காட்சி அலைவரிசை டிடி தமிழ் தொடங்கப்பட்டது, இது இந்த மாநிலத்தின் சிறப்பு மிகு கலாச்சாரத்தைக் கொண்டாடுவதில் தொடர்ந்து உறுதுணையாக இருக்கும்.
பல ஆண்டுகளாக சென்னை மக்களிடம் வாக்குகளை பெற்று நகருக்கு திமுக பெரிதாக எதுவும் செய்யவில்லை. ஊழலையும், குடும்ப ஆட்சியையும் ஊக்குவிப்பதில் திமுக மும்முரமாக உள்ளது. அவர்களின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களை அணுகுவதில்லை, குறிப்பாக சவால்கள் நிறைந்த கடினமான நேரங்களில். கச்சத்தீவை தாரை வார்த்தது குறித்த சமீபகால தகவல்கள், நமது நாட்டின் வியூக நலன்களுக்கும், நமது மீனவர்கள் மற்றும் மீனவப் பெண்களின் நலனுக்கும் தீங்கு விளைவிப்பதில் காங்கிரஸும் திமுகவும் எவ்வாறு உடந்தையாக இருந்தன என்பதைச் சுட்டிக் காட்டுகிறது. இம்முறை திமுகவையும், காங்கிரஸையும் நிராகரிக்க சென்னை தயாராகி இருப்பதில் வியப்பதற்கு எதுவுமில்லை.