சத்ரபதி சிவாஜி மகாராஜா

சத்ரபதி சிவாஜி மகாராஜா

Share it if you like it

சத்ரபதி சிவாஜி மகாராஜா


நம் பாரத வரலாற்றில் போற்றக்கூடிய பல அரசர்களில் மிக முக்கியமானவர் சத்திரபதி சிவாஜி மகாராஜா ஆவார். அந்நிய சக்திகளின் படையெடுப்பகளால் பாரதம் சின்னாப்பின்னமாகி கொண்டிருந்த சமயத்தில் இந்து சாம்ராஜ்ஜியத்தை நிறுவி இந்துக்களுக்கு புத்துயிர் ஊட்டியவர். பரந்த இந்து தேசத்திற்கான கனவை கண்டவர்.
சிவாஜி தனது வீரம் மற்றும் சிறந்த நிர்வாகத் திறமையால், சிறந்த சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கினார். தனது ஆட்சியில் ஒரு ஒழுக்கமான ராணுவ மற்றும் நன்கு நிறுவப்பட்ட முற்போக்கான நிர்வாகத்தை செயல்படுத்தினார். குறிப்பாக சிவாஜி மகாராஜா தனது சக்திவாய்ந்த எதிரிகளைத் தோற்கடிக்க மரபு சாரா முறைகளை மையமாகக் கொண்ட புதுமையான ராணுவ தந்திரங்களுக்கு பேர் போனவர். இன்றும் அவரது வீர கதைகள் நாட்டுப்புறக் கதைகளின் ஒரு பகுதியாக விவரிக்கப்படுகின்றன.


ஆரம்பக்கால வாழ்க்கை:


சிவாஜி போஸ்லே பிப்ரவரி 19, 1630ம் ஆண்டு புனே மாவட்டத்தின் ஜுன்னார் நகருக்கு அருகிலுள்ள ஷிவ்னேரி கோட்டையில் ஷாஹாஜி போஸ்லே மற்றும் ஜிஜாபாய் ஆகியோருக்குப் பிறந்தார். சிவாஜியின் தந்தை ஷாஹாஜி, பீஜாபுரி சுல்தானின் சேவையில் இருந்தார்.


சிவாஜி தனது தாயார் ஜீஜாபாயுடன் மிகவும் நெருக்கமாக இருந்தார். ஜிஜாபாய் தன் மகனுக்கு சிறந்த வழிக்காட்டியாக இருந்தார். சிவாஜி சிறு வயதிலிருந்தே சிறந்த தலைவராக விளங்கினார். அவருக்கு 15 வயதாக இருந்தபோதே மாவல் பகுதியில் இருந்து விசுவாசமுள்ள வீரர்களின் குழுவை அமைத்தார். இந்த குழுவினர் பிற்காலத்தில் சிவாஜி மகாராஜாவின் ஆரம்ப கால வெற்றிகளுக்கு உதவினர்.


1645ம் ஆண்டு பீஜப்பூர் சுல்தான் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பல முக்கியமான பகுதிகளை சிவாஜி கைப்பற்றினார். அவரது வெற்றியைத் தொடர்ந்து, அவர் 1648 இல் தன் தந்தை ஷாஹாஜியை சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்த முகமது அடில் ஷாவுக்கு அச்சுறுத்தலாக உருவெடுத்தார். 1665 இல் ஷாஹாஜியின் மரணத்திற்குப் பிறகு, பிஜபூர் ஜெய்கிர்தார் சந்திரராவ் மோரே என்பவரிடமிருந்து ஜாவலி பள்ளத்தாக்கைக் கைப்பற்றி சிவாஜி தனது வெற்றிகளை மீண்டும் தொடங்கினார். முகமது அடில் ஷா சிவாஜியை அடிபணியச் செய்வதற்காக தனது பணியில் இருந்த சக்திவாய்ந்த தளபதியான அப்சல் கானை அனுப்பினார்.


இருவரும் நவம்பர் 10, 1659 அன்று பேச்சுவார்த்தையின் விதிமுறைகளைப் பற்றி விவாதிக்க ஒரு தனிப்பட்ட சந்திப்பில் சந்தித்தனர். இது ஒரு சதி என்று எச்சரிக்கை அடைந்த சிவாஜி மகாராஜா தன் கவசத்தை அணிந்து ஒரு உலோக புலி நகத்தை மறைத்து தயாராக வந்தார்.


அஃப்சல் கான் சிவாஜியைக் கத்தியால் தாக்கியபோது, அவரது கவசத்தால் அவர் காப்பாற்றப்பட்டார். மேலும் சிவாஜி புலியின் நகத்தால் அப்சல் கானைத் தாக்கி அவருக்குப் பதிலடி கொடுத்தார். பின்னர் தலைவரில்லாத பீஜபூர் படைகள் மீது தாக்குதல் நடத்தும்படி அவர் தனது படைகளுக்கு உத்தரவிட்டார். மராட்டியப் படைகளால் சுமார் 3000 பீஜபுரி வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த போரில் சிவாஜி எளிதாக வெற்றிப்பெற்றார்.


முகமது அடில் ஷா அடுத்ததாக கோலாப்பூர் போரில் சிவாஜியை எதிர்கொண்ட தளபதி ருஸ்தம் ஜமானின் தலைமையில் ஒரு பெரிய படையை அனுப்பினார். சிவாஜி தன் திறமையான போர் தந்திரங்களால் எதிரிகளின் படையை வெற்றி கொண்டார்.


முகலாயர்களுடன் மோதல்கள்:


பீஜபூர் சுல்தானுடனான சிவாஜி மகாராஜாவின் மோதல்களும் தொடர் வெற்றிகளும் அவரை முகலாய பேரரசர் ஔரங்கசீப்பின் கவனத்திற்கு கொண்டுவந்தது. ஔரங்கசீப் தனது பேரரசுக்கான அச்சுறுத்தலாக சிவாஜியை பார்த்தார்.அவரை ஒழித்துக்கட்ட பல முயற்சிகளை மேற்கொண்டார்.
1657 ஆம் ஆண்டு சிவாஜியின் தளபதிகள் அகமதுநகர் மற்றும் ஜுன்னார் அருகே முகலாயப் பிரதேசங்களைத் தாக்கி சூறையாடியதன் மூலம் இருதரப்புக்கான மோதல் துவங்கியது. ஆனால் அப்போது மழைக்காலம் மற்றும் டில்லியில் ஏற்பட்ட வாரிசு போர் காரணமாக ஔரங்கசீப்பால் சிவாஜிக்கு பதிலடி கொடுக்க முடியவில்லை.
பின்னர் ஔரங்கசீப், அவரது தாய்மாமனும் தக்காணத்தின் ஆளுநராகவும் இருந்த ஷாயிஸ்தா கானிடம் சிவாஜியை அடிபணியச் செய்யுமாறு பணித்தார். ஷாயிஸ்தா கான் சிவாஜிக்கு எதிராக ஒரு பெரிய தாக்குதலைத் தொடங்கினார். சிவாஜியின் கட்டுப்பாட்டில் இருந்த பல கோட்டைகளையும் அவரது தலைநகரான பூனாவையும் கைப்பற்றினார்.


இதற்கு பதிலடியாக ஷாயிஸ்தா கான் மீது ஒரு தந்திரமான தாக்குதலைத் தொடுத்து, இறுதியில் அவரை காயப்படுத்தி, பூனாவிலிருந்து சிவாஜி அவரை வெளியேற்றினார்.


அதைத் தொடர்ந்து ஷாயிஸ்தா கான் பின்னர் சிவாஜி மீது பல தாக்குதல்களை நடத்தினார். கொங்கன் பகுதியில் அவரது கோட்டைகளை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார்.


அடுத்தடுத்த தாக்குதலால் தீர்ந்து போன தனது கருவூலத்தை நிரப்ப, சிவாஜி ஒரு முக்கியமான முகலாய வர்த்தக மையமான சூரத்தை தாக்கி முகலாய செல்வத்தை கொள்ளையடித்தார். இதனால் கோபமடைந்த ஔரங்கசீப் 1,50,000 போர் வீரர்களுடன் தனது தலைமை தளபதி ஜெய் சிங்கை அனுப்பினார்.
ஜெய்சிங் தலைமையிலான படைகள் சிவாஜி கட்டுப்பாட்டில் இருந்த கோட்டைகளை தாக்கி கடும் சேதத்தை ஏற்படுத்தினர். வீரர்களை கொன்று குவித்தனர். இந்த உயிர்சேதத்தை தடுக்க ஔரங்கசீப்புடன் அமைதி உடன்படிக்கை செய்துக்கொள்ள சிவாஜி சம்மதித்தார்.


அதன்படி சிவாஜிக்கும் ஜெய்சிங்குக்கும் இடையே ஜூன் 11, 1665 அன்று புரந்தர் ஒப்பந்தம் கையெழுத்தானது. சிவாஜி 23 கோட்டைகளை ஒப்படைக்கவும் முகலாயருக்கு இழப்பீடாக 4,00000 லட்சத்தை செலுத்தவும் ஒப்புக்கொண்டார்.


ஆப்கானிஸ்தானில் முகலாயப் பேரரசுகளை ஒருங்கிணைக்க அவரது ராணுவ வலிமையைப் பயன்படுத்துவதற்கான நோக்கத்துடன் ஔரங்கசீப் சிவாஜியை ஆக்ராவுக்கு அழைத்தார். சிவாஜி தனது எட்டு வயது மகன் சம்பாஜியுடன் ஆக்ராவுக்குச் சென்றார். ஆனால் அங்கு ஔரங்கசீப் அவரை தவறாக நடத்தியதால் கோபமடைந்து சபையை விட்டு வெளியேறினார்.


கோபமடைந்த ஔரங்கசீப் சிவாஜி மற்றும் அவரது மகனை வீட்டுக் காவலில் வைத்தார். ஆனால் சிவாஜி மகாராஜா மீண்டும் தனது புத்திசாலித்தனத்தால் தந்திரமாக சிறையில் இருந்து தப்பித்தார். 1666 ஆகஸ்ட் 17, அன்று தன் தாயார் உடல் நலம் தேற வேண்டும் என்ற பிராத்தனைக்காக காணிக்கையாக கோயில்களுக்கு அனுப்பிய பிரசாத கூடையில் தன் மகனை மறைத்து மாறுவேடமிட்டு சிவாஜி தப்பித்து சென்றார். அவர் டில்லியை விட்டு வெளியேறிய பிறகு தான் சிவாஜி தப்பி சென்ற விஷயம் ஔரங்கசீபுக்கு தெரிய வந்தது.


இதன் பின் முகலாய சர்தார் ஜஸ்வந்த் சிங் மூலம் நடந்த தொடர்ச்சியான சமரச பேச்சுவார்த்தைகளால் முகலாயர்கள் மற்றும் மாராட்டியர்கள் இடையே இருந்த விரோதங்கள் சிறிது சமாதானத்துக்கு வந்தன. இந்த அமைதி 1670 வரை நீடித்தது. அதன்பிறகு சிவாஜி முகலாயர்களுக்கு எதிராக ஒரு முழுமையான தாக்குதலை தொடங்கினார். முகலாயர்களால் முற்றுகையிடப்பட்ட தனது பெரும்பாலான பிரதேசங்களை நான்கு மாதங்களுக்குள் மீட்டெடுத்தார்.


ஆங்கிலேயர்களுடனான உறவு


ஆரம்பத்தில் சிவாஜி மகாராஜாவ்ஆங்கிலேயர்களுடன் சுமூகமான உறவு கொண்டிருந்தார். ஆனால் அவர் 1660ல் பன்ஹாலா கோட்டையைக் கைப்பற்றிய போது அதற்கு ஆங்கிலேயர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அன்று முதல் சிவாஜி மகாராஜா மற்றும் ஆங்கிலேயர்களுக்கு இடையே மோதல் வெடித்தது. ஆங்கிலேயர்களுக்கு எதிராக சிவாஜி பல நடவடிக்கைகளை மேற்கொண்டார். இரு தரப்பினருக்கும் இடையில் பல பேச்சுவார்த்தைகள் நடந்தும் தோல்வியடைந்தன. இறுதி வரை ஆங்கிலேயர்களுக்கு சிவாஜி மகாராஜா அடிப்பணியவில்லை.

முடிசூட்டு விழா


முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த பூனா மற்றும் கொங்கனை ஒட்டிய பகுதிகளை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பிறகு, இந்துக்களின் இறையாண்மையை நிறுவ சிவாஜி ஒரு அரசராக பட்டமேற்க முடிவு செய்தார்.


அதைத் தொடர்ந்து 1674 ஆம் ஆண்டு ஜூன் 6 ஆம் தேதி ராய்காட்டில் நடந்த ஒரு விரிவான முடிசூட்டு விழாவில் அவர் மராட்டிய மன்னராக முடிசூட்டப்பட்டார். அங்கு கூடியிருந்த சுமார் 50,000 மக்கள் முன்னிலையில் பண்டிட் காகா பட் அவர்களால் முடிசூட்டு விழா நடத்தப்பட்டது.


முடிசூட்டுக்குப் பின், மராட்டியர்கள் சிவாஜியின் வழிகாட்டுதலின் கீழ், பெரும்பாலான தக்காண மாநிலங்களை இந்து இறையாண்மையின் கீழ் ஒருங்கிணைக்க தீவிரமான முயற்சிகளைத் தொடங்கினர்.


சிவாஜி மகாராஜா கந்தேஷ், பிஜாப்பூர், கார்வார், கொல்காபூர், ஜாஞ்சிரா, ராம்நகர் மற்றும் பெல்காம் ஆகியவற்றைக் கைப்பற்றினார். அடில் ஷாஹி ஆட்சியாளர்களால் கட்டுப்படுத்தப்பட்ட வேலூர் மற்றும் செஞ்சியில் உள்ள கோட்டைகளை அவர் கைப்பற்றினார். தஞ்சாவூர் மற்றும் மைசூரில் உள்ள அவரது சொத்துக்கள் தொடர்பாக சிவாஜி மகாராஜ் தனது மாற்றாந்தாய் வெங்கோஜியுடன் ஒரு புரிந்துணர்வுக்கு வந்தார். டெக்கான் மாநிலங்களை ஒரு பூர்வீக இந்து ஆட்சியாளரின் ஆட்சியின் கீழ் ஒருங்கிணைத்து, முஸ்லிம்கள் மற்றும் முகலாயர்கள் போன்ற வெளியாட்களிடமிருந்து அதைப் பாதுகாப்பதே அவர் நோக்கமாக இருந்தது.


நிர்வாகம்


சிவாஜி மகாராஜாவின் ஆட்சியின் கீழ், மராட்டிய நிர்வாகம் நிறுவப்பட்டது. அங்கு சத்ரபதி தலைமை பதவியில் இருந்தார். பல்வேறு கொள்கைகளை முறையாக அமல்படுத்துவதை மேற்பார்வையிட எட்டு அமைச்சர்கள் கொண்ட குழு நியமிக்கப்பட்டது. இந்த எட்டு அமைச்சர்களும் சிவாஜிக்கு நேரடியாக அறிக்கை அளித்தனர். அவர்களுக்கு அரசனால் வகுக்கப்பட்ட கொள்கைகளை நிறைவேற்றுவதில் அதிக அதிகாரம் வழங்கப்பட்டது.


சிவாஜி தனது அரசவையில் பாரசீக மொழிக்குப் பதிலாக மராத்தி மற்றும் சமஸ்கிருதத்தைப் பயன்படுத்துவதைத் தீவிரமாக ஊக்குவித்தார். அவர் தனது கட்டுப்பாட்டில் உள்ள கோட்டைகளின் பெயர்களை சமஸ்கிருத பெயர்களாக மாற்றினார். சிவாஜி மகாராஜா ஒரு இந்துவாக இருந்தபோதிலும், அவர் தனது ஆட்சியின் கீழ் அனைத்து மதங்களையும் சமமாக நடத்தினார். நிர்வாகக் கொள்கைகள் மக்களுக்கு நட்பானதாகவும், மனிதாபிமானதாகவும் இருந்தன. மேலும் அவர் தனது ஆட்சியில் பெண்களின் சுதந்திரத்தை ஊக்குவித்தார். அவர் ஜாதி பாகுபாடுகளை கடுமையாக எதிர்த்தார். அனைத்து சாதியினரையும் தனது அரசவையில் பணியமர்த்தினார். விவசாயிகளுக்கும் மாநிலத்திற்கும் இடையில் இடைத்தரகர்களின் தேவையை நீக்கி உற்பத்தியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாக வருவாயை வசூலிக்கும் ரியோட்வாரி முறையை அவர் அறிமுகப்படுத்தினார்.


மேலும் சிவாஜி மகாராஜா ஒரு வலுவான ராணுவப் படையை பராமரித்து, தனது எல்லைகளை பாதுகாக்க பல கோட்டைகளை கட்டினார். கொங்கன் மற்றும் கோவா கடற்கரையில் வலுவான கடற்படை இருப்பையும் உருவாக்கினார். இதனால் இந்திய கடற்படையின் தந்தை என்றும் சிவாஜி புகழப்படுகிறார்.


மறைவு


சிவாஜி மகாராஜா 1680, ஏப்ரல் 3ம் தேதி தனது 52வது வயதில் ராய்காட் கோட்டையில் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மரணத்திற்குப் பிறகு அவரது வம்சாவளியினர் இந்து சாம்ராஜ்ஜியத்தை பாதுகாக்க முகலாயர்களுடனான மோதல்களை தொடர்ந்தனர்.


சிவாஜி மகாராஜா மறைந்து பல ஆண்டுகள் ஆனப்பின்பும் அவரது புகழ் இன்றளவும் மறையவில்லை. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 19ம் தேதி அவரது பிறந்த தினம், தேசம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. அவர் தன் வாழ்க்கையில் கூறிய பல மேற்கோள்கள் இன்றும் பலருக்கு ஊக்கமளித்து வருகின்றன.
இன்று நாட்டில் உள்ள இந்து விரோத சக்திகள் சிவாஜி மகாராஜாவின் புகழை களங்கப்படுத்த முயற்சிகள் செய்தாலும் மக்கள் அவர் மீது கொண்டிருக்கும் மரியாதையையும் பக்தியையும் ஒருநாளும் அசைக்க முடியாது.


Share it if you like it