90 சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட சத்தீஸ்கர் சட்டப்பேரவை தேர்தலில், பாஜக 54 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
பழங்குடி வகுப்பைச் சேர்ந்த விஷ்ணு தியோ சாய் கடந்த 13-ம் தேதி முதல்வராகப் பதவியேற்றார். அதேநோளில், அவருடன் அருண் சாவோ, விஜய் ஷர்மா ஆகியோர் துணை முதல்வர்களாகப் பதவியேற்றனர். மூவருக்கும் ஆளுநர் பிஸ்வபூஷன் ஹரிசந்தன் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். இந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், சத்தீஸ்கர் அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. ஒரு பெண் உள்பட 9 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். 8 முறை எம்எல்ஏவான பிரிஜ்மோகன் அகர்வால், முன்னாள் அமைச்சர்கள் ராம்விசார் நேதம், கேதார் காஷ்யபீ், தயால்தாஸ் பெகல் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். ஐஏஎஸ் அதிகாரியாக இருந்து அரசியலுக்கு வந்த ஓ.பி. சவுத்ரி, தாங் ராம் வெர்மா, லக்ஷ்மி ராஜ்வதே ஆகிய முதல்முறை எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
இரண்டு முறை எம்எல்ஏவாக தேர்வான ஷியாம் பிகாரி ஜெய்ஷ்வால், லக்கன்லால் தவான்கன் ஆகியோரும் அமைச்சர்களாகப் பதவியேற்றுக்கொண்டனர்.
பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் 6 பேர், பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த 3 பேர், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், பொதுப் பிரிவைச் சேர்ந்த இருவர் ஆகியோர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்திற்கு முதல்வர் உள்பட 13 பேர் வரை அமைச்சர்களாக நியமிக்கப்படலாம் எனும் நிலையில், 12 பேர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அமைச்சர்களுக்கான இலாகாக்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.