தி.மு.க.வின் வாக்குறுதியை நம்பி ஊசியால் கையை கிழித்து… மருத்துவக் கல்லூரி மாணவர்களின் செயலை பார்த்தீர்களா?

தி.மு.க.வின் வாக்குறுதியை நம்பி ஊசியால் கையை கிழித்து… மருத்துவக் கல்லூரி மாணவர்களின் செயலை பார்த்தீர்களா?

Share it if you like it

தேர்தலுக்கு முன்பு தி.மு.க. கொடுத்த வாக்குறுதியை நம்பி போராட்டத்தைக் கைவிட்ட மாணவர்கள், தற்போது ஊசியால் கையை கிழித்து ரத்தத்தில் கோரிக்கையை எழுதி போராடும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பதுதான் வேதனையிலும் வேதனை.

சிதம்பரத்தில் அமைந்திருக்கிறது ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி. 2013-ம் ஆண்டு அரசு நிதியிலிருந்து இக்கல்லூரி இயங்கி வருகிறது. எனினும், மாணவர்களிடம் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்துக்கு இணையாகவே வசூலிக்கப்பட்டு வந்தது. இதனால், கடந்தாண்டு ஜனவரி மாதம் தொடர் போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டனர். அப்போது, தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் அரசுக் கட்டணம் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதோடு, போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு உதயநிதி ஸ்டாலின் நேரடியாக வந்து அமர்ந்திருந்து உறுதியும் அளித்தார்.

இதனிடையே, கல்லூரி காலவரையின்றி இழுத்து மூடப்பட்டது. இதன் பிறகு, இக்கல்லூரி உயர்கல்வித் துறையிலிருந்து சுகாதாரத் துறையின் கீழ் கொண்டு வரப்பட்டது. ஆனாலும், கல்விக் கட்டணம் குறித்து தெளிவாக அறிவிக்கப்படவில்லை. எனவே, மருத்துவக் மாணவர்கள் போராட்டத்தைத் தொடரப்போவதாக அறிவித்தனர். இதையடுத்து, கல்விக் கட்டணம் குறைக்கப்பட்டிருப்பதாகவும், அரசு கல்விக் கட்டணத்தையே மாணவர்கள் செலுத்தினால் போதும் எனவும் அரசுத் தரப்பில் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். ஆனால், கல்விக் கட்டண விஷயத்தில் அ.தி.மு.க. அரசு பொய் சொல்வதாக ஸ்டாலின் குற்றம்சாட்டி இருந்தார்.

இதன் பிறகு, 2021-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. ஆட்சிக்கு வந்து விட்டது. ஆனால், தற்போதுவரை முதலாமாண்டு மாணவர்களுக்கு மட்டுமே கல்விக் கட்டணம் குறைக்கப்பட்டு, 2-ம் ஆண்டு முதல் இறுதியாண்டு மாணவர்கள்வரை தனியார் கல்லூரிக்கு இணையான கட்டணமே வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனை கண்டித்து மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மீண்டும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். 13-வது நாளான நேற்று மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கருப்பு உடை அணிந்து, கையில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாகத்தான், ஊசியால் கை விரலை கிழித்து, அந்த ரத்தத்தில் அரசு கட்டணம் வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் புகைப்படத்திற்கு அருகே  ரத்தத்தால் எழுதி இருக்கிறார்கள். அதாவது, தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் அரசு கட்டணம் வசூலிக்கப்படும் என்று தி.மு.க. தரப்பில் கொடுக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, இப்படி ரத்தத்தில் எழுதி இருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள், இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆகவே, இப்போதாவது அரசு திரும்பிப் பார்க்க வேண்டும் அல்லது போராட்டம் தொடரும் என்று தெரிவித்திருக்கின்றனர்.


Share it if you like it