தொழுகை நடத்த சமுதாயக்கூடம் அமைப்பதாகக் கூறி, 40 லட்சம் ரூபாய் வசூலித்து முறைகேடு செய்ததாக, ஜமாத் உறுப்பினர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்திருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 5 பள்ளிவாசல்கள் இருக்கின்றன. இங்கு தொழுகை நடத்தும் இஸ்லாமியர்கள், ஒரே இடத்தில் தொழுகை நடத்தும் வகையில், சமுதாய கூடம் அமைக்க முடிவு செய்தனர். அதேபோல, ஈத்கா பள்ளி வாசலுக்கு 22 சென்ட் இடம் வாங்கவும் திட்டமிட்டனர். இதையடுத்து, கடந்த ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை சுமார் 40 லட்சம் ரூபாய் வரை வசூல் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், இவ்வாறு வசூல் செய்த பணத்துக்கு முறையான ஆவணங்கள் மற்றும் ரசீது கொடுக்கவில்லையாம். எனவே, சிதம்பரம் ஜவகர் தெருவைச் சேர்ந்த ஷாகுல் ஹமீது என்பவர், இதுகுறித்து சிதம்பரம் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார்.
அப்புகாரில், சிதம்பரம் லெப்பை தெரு பள்ளி வாசல் உறுப்பினர் முகமது ஜியாவுதீன் மற்றும் ஜாகீர் உசேன், சலீம் ஆகியோர் முறையான ஆவணங்கள் மற்றும் ரசீது இல்லாமல் பணம் வசூலித்து மோசடி செய்திருப்பதாகக் கூறியிருந்தார். இதன்பேரில், சிதம்பரம் நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதையறிந்த சிதம்பரம் அனைத்து ஜமாத் இஸ்லாமியர்கள் 200-க்கும் மேற்பட்டோர், சிதம்பரம் மேலவீதியிலுள்ள நகர காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, முறையாக விசாரிக்காமல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், அதை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும், மதியம் 2 மணியளவில் போலீஸாருக்கு எதிராக கோஷம் எழுப்பியதோடு, சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
இதனால், கீழ வீதி வழியாக போக்குவரத்து மாற்றி விடப்பட்டது. பின்னர், போலீஸார் ஜமாத்தார்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, வழக்கை ரத்து செய்வதாக போலீஸார் கூறியதைத் தொடர்ந்து, ஜமாத்தார்கள் கலைந்து சென்றனர். இதனால் மேலவீதியில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனிடையே, வழக்கை ரத்து செய்வதாக போலீஸ் கூறியதாக தகவல் வெளியாகவே, புகார் கொடுத்த ஷாகுல்ஹமீது மற்றும் ஜாபர் உள்ளிட்ட எதிர் தரப்பைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர், நேற்று இரவு 8 மணிக்கு சிதம்பரம் நகர காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். அப்போது, நாங்கள் கொடுத்த புகாரில் எந்த மாற்றமும் இல்லை. அவர்கள் மோசடி செய்தது உண்மை. ஆகவே, அவர்களை கைது செய்ய வேண்டும் என்று கூறி, டி.எஸ்.பி. ரமேஷ் ராஜிடம் புகார் மனு அளித்தனர். அவர், நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து இரவு 9 மணியளவில் கலைந்து சென்றனர்.