ரவுடிகள் சாம்ராஜ்ஜியத்துக்கு முடிவு கட்டிய முதல்வர் யோகி ஆதித்தியநாத்

ரவுடிகள் சாம்ராஜ்ஜியத்துக்கு முடிவு கட்டிய முதல்வர் யோகி ஆதித்தியநாத்

Share it if you like it

ரவுடிகள் சாம்ராஜ்ஜியத்துக்கு முடிவு கட்டிய முதல்வர் யோகி ஆதித்தியநாத்

உத்தரபிரதேச மாநிலத்தில் பல தசாப்தங்களாக ஆதிக்கம் செலுத்தி வந்த பிரபல தாதாவும் அரசியல்வாதியுமான அதிக் அகமது கடந்த 15ம் தேதி போலீசாரால் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து செல்லப்படும் போது சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தேசியளவில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிக் அகமதுவின் வாழ்க்கையானது உத்தரபிரதேசத்தின் குற்றவியல் சம்பவங்கள் மற்றும் அரசியல் களத்துடன் பின்னிப்பிணைந்த ஒன்று. உத்தரபிரதேசத்தில் 5 முறை எம்.எல்.ஏவாக இருந்த அதிக் அகமது மீது கொலை, கொள்ளை, கடத்தல், மோசடி உட்பட மொத்தம் 104 கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த 1962-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதி உத்தர பிரதேசத்தின் அலகாபாத்தில் பிறந்த அத்தீக் அகமது, சிறுவயதிலேயே ரயிலில் நிலக்கரி திருட துவங்கினார். தன் 17வது வயதிலேயே தொழிற் போட்டி காரணமாக தன் முதல் கொலையை செய்தார். அதற்காக அவர் கைது செயய்ப்பட்ட போதும் விரைவில் விடுதலை செய்யப்பட்டார்.

அதன்பின் தொடர் குற்றச்செயல்களால் 23வது வயதிலேயே உத்தரபிரதேசத்தில் பிரபல ரவுடியாக மாறினார். அவர் மீது வழக்குகளும் சிறை தண்டனைகளும் பாய்ந்தன. ஆனால் தன் செல்வாக்கால் அதிலிருந்து விரைவில் வெளிவந்தார்.

1989ம் ஆண்டு அரசியலில் கால் பதித்த அதிக் அகமது, கிழக்கு அலகாபாத் தொகுதியில் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்றார். அந்த பகுதியில் அவருக்கு போட்டியாக அப்போது செல்வாக்கான ரவுடியாக அறியப்பட்ட சந்த் பாபாவை எதிர்கொண்டார். ஆனால் சந்த் பாபாவால் அதிக் அகமதுவை தோற்கடிக்க முடியவில்லை. எம்.எல்.ஏவாக பதவி ஏற்ற சில நாட்களிலேயே ரவுடி சந்த் பாபா பட்டப்பகலில் வெட்டிக்கொல்லப்பட்டார். அதிக் அகமதுவின் ஆட்கள் தான் அதை செய்ததாக நம்பப்படுகிறது.

அதன்பின் 1991 மற்றும் 1993 ஆகிய ஆண்டுகளிலும் அதிக் அகமது சுயேட்சையாக களமிறங்கி வெற்றி பெற்றார். இந்த சமயத்தில் சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ், முஸ்லிம்களின் வாக்குகளை பெற அதிக் அகமதுவை 1996ம் ஆண்டு சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார். அதே ஆண்டு சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிட்ட அதிக் அகமது எம்.எல்.ஏவாக வெற்றி பெற்றார்.

இவ்வாறு தொடர்ந்து 5 முறை எம்.எல்.ஏவாக வெற்றி பெற்றார். 2 முறை சமாஜ்வாதி கட்சி வேட்பாளராக களமிறங்கிய அதிக் கடைசியாக அப்னா தால் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மேலும் 1999 முதல் 2003ம் ஆண்டு வரை அப்னா தால் கட்சி தலைவராகவும் அதிக் அகமது பொறுப்பேற்றார். அதிக் அகமதுவின் தொடர் வெற்றிகள் மூலம் உத்தரபிரதேச மாநிலத்தில் ரவுடி அரசியல் தன் உச்சத்தை அடைய துவங்கியது.

அதன்பின் சமாஜ்வாதி கட்சியின் ஆதிக்கம் அதிகரிக்க துவங்கியதைத் தொடர்ந்து 2004ம் ஆண்டு மீண்டும் சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்தார் அதிக் அகமது. அதே வருடம் நேரு குடும்பத்தின் ஆஸ்தான தொகுதியான புல்பூர் தொகுதியில் நடந்த மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று எம்.பியாக பொறுப்பேற்றார்.

அதிக் அகமது எம்.பியாக ஆனதால் அவரது சகோதரர் அஷ்ரஃபை தன் ஆஸ்தான கிழக்கு அலகாபாத் தொகுதியில் போட்டியிட செய்தார். அந்த சமயத்தில் அவருக்கு போட்டியாக ராஜு பால் என்பவர் களமிறங்கினார். ராஜு பாலுக்கும் பல கிரிமினல் குற்றவாளிகளுடன் தொடர்பு இருந்தது.

தன் சகோதரருக்கு எதிராக ராஜு பால் போட்டியிடுவதை அதிக் அகமது விரும்பவில்லை. இந்த சூழ்நிலையில் ராஜு பால் அதிக் அகமதுவின் சகோதரரை தேர்தலில் 4000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.

அதிக் அகமதுவின் சகோதரரை தேர்தலில் வென்ற ராஜு பாலை கொலை செய்ய அடுத்தடுத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன. முதல் 2 முறை தப்பி பிழைத்த ராஜு பால் 2005, ஜனவரி 25ம் தேதி மூன்றாவது முறை நடந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தார். அப்போது அவருக்கு திருமணமாகி 9 நாட்களே ஆகியிருந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அவரது மனைவி பூஜா பால் இடைத்தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் ரவுடிகளின் செல்வாக்குகள் முன் அவரது கண்ணீர் தோற்று போனது.

இவ்வாறு உத்தரபிரதேச மாநிலத்தின் மிக பெரிய தாதாவான அதிக் அகமது நாடாளுமன்ற உறுப்பினராகவும் அவரது கூட்டாளியான சகோதரர் அஷ்ரஃப் எம்.எல்.ஏ ஆகவும் கவுரத்துடன் உலா வந்தனர். அவர்களது செல்வாக்கு காரணமாக மாநிலத்தில் கொலை, கடத்தல், ரவுடிகளின் அட்டகாசங்கள் அதிகரிக்க துவங்கின. மக்கள் இவர்களது அராஜகத்தால் வெறுத்து போனார்கள்.

இதன் பலனாக 2007ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜன் கட்சி வெற்றி பெற்று மாயாவதி முதல்வரானார். அதிக் அகமதுவால் கொல்லப்பட்ட ராஜு பாலின் மனைவி பூஜா பால், கிழக்கு அலகாபாத் தொகுதியில் போட்டியிட்டு அஷ்ரஃபை தோற்கடித்து வெற்றி பெற்றார். அதன்பிறகு 2012ம் ஆண்டு நடந்த தேர்தலிலும் பூஜா பால் வெற்றி பெற்றார்.

பகுஜன் சமாஜன் ஆட்சியில் அதிக் அகமது மற்றும் அவரது கூட்டாளிகள் மீதான நடவடிக்கைகளை முதல்வர் மாயாவதி தீவிரப்படுத்தினார். இதற்கிடையில் ராஜு பாலின் கொலை வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் உமேஷ் பால் என்பவர் முக்கிய சாட்சியாக இருந்தார். இவர் மீதும் பல முறை கொலை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அவர் அதில் சிக்கவில்லை.

மாயாவதியின் தீவிர முயற்சிகள் இறுதியில் கைக்கொடுக்கவில்லை. அவர் ஆட்சி முடிவுக்கு வந்தபின் மீண்டும் சமாஜ்வாதி கட்சி செல்வாக்கு செலுத்த துவங்கியது.
இதற்கிடைப்பட்ட காலத்தில் சமாஜ்வாதி கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட அதிக் அகமது, அப்னா தளம் கட்சியில் இணைந்தார். ஆனால் 2014ம் ஆண்டு அதிக் அகமது மீது பல குற்ற வழக்குகள் இருந்தும் முலாயம் சிங் யாதவ் அவரை மீண்டும் சமாஜ்வாதி கட்சியில் சேர்த்து கொண்டார். இதனால் அதிக் அகமதுவின் கொட்டமும் அதிகரிக்க துவங்கியது.

முலாயம் சிங் யாதவின் நடவடிக்கையால் சமாஜ்வாதி கட்சி ரவுடிகளின் கட்சி என பெயரெடுக்க துவங்கியது. அவரது மகன் அகிலேஷ் யாதவ் இதை சரி செய்ய முயற்சிகள் எடுத்தும் எதுவும் பலனளிக்கவில்லை. இதனால் மீண்டும் சமாஜ்வாதி கட்சி தோல்வியை நோக்கி சென்றது. சமாஜ்வாதி கட்சியின் ரவுடி ந்அரசியலால் பாதிக்கப்பட்ட மக்கள் பாஜக மீது தங்கள் நம்பிக்கையை வைத்தனர்.

அதன் பலனாக கடந்த 2017ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு உத்தரபிரதேசத்தில் ஆட்சியை அமைத்தது. அதன்பின் உத்தரபிரதேச மாநிலத்தில் ரவுடிகள் மீது தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பல ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
அதிக் அகமது மற்றும் அவரது ஆட்களுக்கு எதிராகவும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அவர்கள் மீதான வழக்கு விசாரணைகள் தீவரப்படுத்தப்பட்டன. அதிக் அகமதுவின் பல கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டன.

இந்த சமயத்தில் ராஜு பால் கொலை வழக்கின் முக்கிய சாட்சியான உமேஷ் பால் கடந்த பிப்ரவரி 24ம் தேதி பட்டப்பகலில் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனால் முதல்வர் யோகி ஆதித்தியநாத் அதிக் அகமது மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினார். அதன் விளைவாக உமேஷ் பால் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட அதிக் அகமதுவின் 3வது மகன் கடந்த ஏப்ரல் 13ம் தேதி போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அதைத் தொடர்ந்து கடந்த 15ம் தேதி அதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரஃப் ஆகியோர் காவல்துறை பாதுகாப்பில் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து செல்லப்படும் போது 3 பேர் அவரை சுட்டுக்கொன்றனர். இந்த இரு சம்பவங்களும் உத்தரபிரதேசம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தின.
போலீசாரிடம் சரண்டைந்த கொலையாளிகள் 3 பேரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் புகழுக்காக இந்த கொலையை செய்ததாக வாக்குமூலம் அளித்தனர். ஆனால் அதிக் அகமது சமாஜ்வாதி கட்சியின் ரகசியங்களை வெளியிட திட்டமிட்டிருந்ததால் அவர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

எதுவாக இருந்தாலும் முதல்வர் யோகி ஆதித்தியநாத்தின் அதிரடி நடவடிக்கைகளால் பல தசாப்தங்கள் மக்களை துன்புறுத்தி வந்த ஒரு ரவுடி சாம்ராஜ்ஜியம் இன்று முடிவுக்கு வந்துள்ளது. அதிக் அகமது மற்றும் அவரது ஆட்களுக்கு எதிரான முதல்வர் யோகி ஆதித்தியநாத்தின் நடவடிக்கைகளுக்கு சில விமர்சனங்கள் எழுந்தாலும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் இதை வரவேற்கின்றனர். இதேநிலை நீடித்தால் உத்தரபிரதேசத்தில் விரைவில் ரவுடி அரசியல் கலாச்சாரத்துக்கு முடிவு கட்டப்படும் என்பதில் சந்தேகமில்லை.


Share it if you like it