ஒரு குறிப்பிட்ட வயது வரை வீட்டில் நான்கு சுவர்களுக்குள் வளரும் குழந்தைகள் பள்ளி -விளையாட்டு மைதானம்- விடுதி வாழ்க்கை என்று திடீரென வெளியுலகில் பிரவேசிக்கும் போது அந்த குழந்தை வெளி உலகோடு இணக்கமான புரிதலோடு ஒன்றுவதற்கு நிச்சயம் சில காலம் தேவைப்படும். அந்த கால அவகாசத்தை பெற்றோர் -ஆசிரியர்- கல்வி நிறுவனம் என்று அனைத்து தரப்பினரும் நிச்சயம் வழங்க வேண்டும். இடைப்பட்ட காலத்தில் சில தவறுகள்- மன சங்கடங்கள் எழத்தான் செய்யும். அதை அனைத்து தரப்பினரும் புரிந்து குழந்தைகளின் மனம் புண்படாமல், அதே நேரத்தில் அவர்களின் தவறுகளை உணரும்படி சுமூகமாக கையாள வேண்டும்.
நம் குழந்தைகளின் மீது நமக்கு இருக்கும் பாசம் அவர்களின் தவறுகளை எல்லாம் மூடி மறைக்கும் கண்மூடித்தனமாக இல்லாமல் அவ்வப்போது அவர்களை சுயபரிசோதனைக்கு உட்படுத்தி ,தவறுகளை திருத்தி சரியான பாதையில் இட்டுச் செல்வதாகவே இருக்க வேண்டும். என்ன நடந்திருந்தாலும், யார்? எப்படி? என்ன? சொன்னாலும் அதை எல்லாம் கவனமாக,காதில் வாங்கிக் கொண்டு எதிர் தரப்பிலும் ,நம் குழந்தைகள் தரப்பிலும் முதலில் என்ன நடந்தது? என்பதை தீர விசாரித்து எங்கு தவறு நடந்திருக்கிறது? என்பதை பாரபட்சமின்றி ஏற்றுக்கொண்டு, அது சிறிய அளவில் இருக்கும்போதே சரி செய்து, இனி அது போன்ற தவறுகள் நிகழா வண்ணம் குழந்தைகளுக்கு பக்குவமாக எடுத்துச் சொல்லும் பட்சத்தில் அங்கு எல்லாம் சுமூகமாகும்.
குழந்தைகள் மனதில் எவ்வளவு தான் பணம்- வசதி -கல்வி தரம்- ஆடம்பரம் -செல்வாக்கு படைத்தவர்களாக நாம் இருந்தாலும் கூட, பொதுவெளியில் எந்த ஒரு மனிதரையோ, சக மாணவரையோ மேற்கண்ட எந்த விஷயங்களையும் வைத்து குறைத்தோ, கூடுதலாகவோ மதிப்பிடாமல், என் போல் அவனும் என்று சக தோழனாக, என் வீட்டில் இருக்கும் பெரியவர்களை போல் தான் இவர்கள் எல்லாம் என்று சக மனிதர்களையும் மதித்து நடந்து கொள்ளும் பண்புகளை வளர்த்து விடுங்கள். பெரும்பாலான தவறுகளுக்கு இடமில்லாமலே போய்விடும்.
ஒழுக்கமில்லாத கல்வியும், நேர்மையில்லாத திறமையும் வருங்காலத்தில் பணம் செல்வாக்கு, தரலாம். பண்பட்ட மனிதனை கண்ணியமான வாழ்வை தராது என்பதை குழந்தைகளை உணர செய்யுங்கள். முக்கியமான நேரங்களில் ஆலயம்- விழா -விசேஷம்- துக்க நிகழ்வுகளுக்கு குழந்தைகளை உடன் அழைத்து போவதை வழக்கமாக்குங்கள்.வீட்டில் எவ்வளவு தான் வசதி வாய்ப்புகள் இருந்தாலும் கூட குழந்தைகள் கேட்டதையெல்லாம் வாங்கித் தரும் வழக்கத்தை அறவே தவிருங்கள். குழந்தைகளின் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்வது நல்ல விஷயம் தான். அதே நேரத்தில் நாம் என்ன கேட்டாலும் கிடைத்து விடும் என்ற எண்ணத்தை மனதில் விதைக்காதீர்கள். அது குழந்தைகளை எதார்த்த வாழ்வில் கஷ்டங்களை உணராத சுகவாசியாக மாற்றிவிடும்.
எந்த மாதிரியான சூழலில் இருந்தாலும் குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே ஏமாற்றம் -பின்னடைவு- தோல்வி -அவமானம் என்று அனைத்தையும் ஏற்கவும், அதன் படிப்பினைகளை உணர்ந்து கடந்து போகவும் கற்றுக்கொடுங்கள். அது பின்னாளில் அவர்களை வாழ்வில் எந்த சூழ்நிலைகளையும், எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்து விடும். எது எப்படி இருந்தாலும், நமக்காக நம் குடும்பம் இருக்கிறது என்ற நம்பிக்கையை அவர்கள் மனதில் விதையுங்கள். அந்த நம்பிக்கை வளர்ந்து விட்டால் அவர்கள் ஏதேனும் தவறிழைத்தாலும் அதை மறைக்காமல் அவர்களாகவே நம்மிடம் சொல்லிவிடுவார்கள். அதே நேரத்தில் நாம் தவறிழைத்தால் மற்றவர்களுக்கு முன் முதலில் நம்மை கண்டிப்பவர்கள்- தண்டிப்பவர்கள் நம் பெற்றோராக தான் இருப்பார்கள் என்ற எண்ணத்தை குழந்தைகள் மனதில் விதைத்து விட்டால் நிச்சயம் அவர்கள் தவறிழைக்க மாட்டார்கள்.
பல்வேறு சூழலில் வளர்ந்த பல குழந்தைகள் ஓரிடத்தில் ஒன்று கூடும்போது குழந்தைகளுக்குள் சிறு சிறு சண்டைகளும் அதனால் பெற்றோருக்கும் சில சங்கடங்கள் எழத்தான் செய்யும். அதையெல்லாம் அவமானமாக கருதி குழந்தைகளை புண்படுத்தாமல் நல்லது- கெட்டது என்ற புரிதலை குழந்தைகளுக்கு பக்குவமாக எடுத்துரைத்து வழிகாட்டுங்கள். நம் மானமும் மரியாதையும் நம் நடத்தையில் நம் குழந்தைகள்”வளர்ப்பில், தான் இருக்கிறதே தவிர, மற்றவர்களின் அர்த்தமற்ற பேச்சில், விமர்சனத்தில் இல்லை என்பதை பெற்றோர் உணர வேண்டும்.
நம் குழந்தைகள் வெறும் மதிப்பெண் எடுக்கும் இயந்திரமோ, 100 சதம் ஒழுக்கம் காக்கும் யோகியாகவோ இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பெற்றோருக்கு வேண்டாம். நம்முடைய விருப்பங்கள் எதிர்பார்ப்புகளை குழந்தைகளின் மீது திணிப்பதும் வேண்டாம். தவறுகள் மனித இயல்பு அதை உணர்ந்து திருந்துவதே மனித பண்பு என்பதை பெற்றோர் -குழந்தை- சமூகம் என்ற முத்தரப்புமே உணர வேண்டும்.
மதிப்பெண் பட்டியலும் – தரவரிசை பட்டியலும் மட்டுமே குழந்தைகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்ற மாயையில் இருந்து முதலில் பெற்றோர்கள் வெளியே வந்தால் மட்டுமே, மருத்துவமும் பொறியியலும் மட்டுமே வாழ்க்கை இல்லை இங்கு ஆயிரக்கணக்கான துறைகள் இருக்கிறது . அதில் லட்சக்கணக்கான வாய்ப்புகள் இருக்கிறது. என்ற புரிதல் உங்களுக்கும் குழந்தைகளுக்கும் வரும். அது தான் தேர்வுக்கு அஞ்சாத மாணவர்களையும், ஒருவேளை தேர்வில் தோல்வியுற்றாலும், எதிர்பார்த்த துறைகள் கிடைக்கப் பெறாவிட்டாலும் கூட தனக்கு பொருத்தமான வேறொரு துறையை தேர்வு செய்து ,அதில் தன் திறமையை நிரூபித்து தன்னால் மிளிர முடியும். எதிர்காலத்தில் தன்னால் சாதித்துக் காட்ட முடியும் என்ற நம்பிக்கையும் உத்வேகமும் குழந்தைகளுக்குள் வளர்க்கும்.
எவ்வளவு பணிச்சுமை – நெருக்கடிகள் இருந்தாலும் குழந்தைகளை தவிர்க்கமல் நேரம் ஒதுக்கி, குழந்தேகளோடு மனம் விட்டு பேசுங்கள். அவர்கள் மனதில் தேவையற்ற குற்ற உணர்வுகளும், தாழ்வு மனப்பான்மையும் மறைந்து , நேர்மறை எண்ணங்களும் சிந்தனையும் மேலோங்கி நிற்கும்.பெண்களை சகோதரியாக- தாயாக மதித்து மரியாதை செய்யும் பண்புகளை வளர்த்து விடுங்கள். நன்னெறிகளை போதித்து வளருங்கள். நல்ல சகவாசத்தோடு வளர, ஒரு நல்ல தரமான கல்விக்கூடத்தில், ஆன்மிக நெறியோடு பண்பாடு -கலாச்சார வழியில், மாணவர்களை வழிநடத்தும் சூழலில் உங்கள் குழந்தை இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். அவர்களின் நிகழ்காலம் சரியான பாதையில் இருக்கும். அவர்களின் வருங்காலம் நிச்சயம் பாதுகாப்பாக இருக்கும்.
தாயைப் போல பிள்ளை நூலைப்போல சேலை என்பார்கள். அன்னையரே! நாம் சரியாக இருந்தால் எல்லாம் சரியாகவே இருக்கும் என்பதை உணர்ந்து குழந்தைகளை கையாளுங்கள்! .தாய் -சேய் – பாசமும், பற்றுதலும் தனக்கு மட்டுமல்ல. எல்லா குழந்தைக்கும் – தாய்க்கும் பொதுவான ஒன்றுதான்! என்பதை ஒவ்வொரு தாயும் உணர்ந்து அதை தங்கள் குழந்தைகளும் உணரும்படி செய்து விட்டால் எதிர்காலம் சுகமாகும்.