அருணாச்சப் பிரதேச விவகாரம்: சீனாவுக்கு ஆப்பு வைத்த அமெரிக்கா!

அருணாச்சப் பிரதேச விவகாரம்: சீனாவுக்கு ஆப்பு வைத்த அமெரிக்கா!

Share it if you like it

அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. அப்பகுதியில் சீனா ஆக்கிரமிப்பு செய்வதை கண்டிக்கிறோம் என்று அமெரிக்க செனட் சபையில் அரிதான தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

இந்திய – சீன எல்லையில் கடந்த சில ஆண்டுகளாக சீனா அத்துமீறி வருகிறது. கடந்த 2020-ம் ஆண்டு லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் மீது சீன ராணுவ வீரர்கள் நேரடித் தாக்குதலில் ஈடுபட்டனர். இத்தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். சீன தரப்பில் 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்த நிலையில், உயிரிழப்பு பற்றி சீனா எந்த தகவலையும் வெளியிடவில்லை. அதேபோல அருணாச்சலப் பிரதேசத்தை ஒட்டிய எல்லையில் 2 கிராமங்களை உருவாக்கி இருக்கிறது. இந்த சூழலில்தான், இந்தியாவுக்கு ஆதரவாகவும், சீனாவுக்கு எதிராகவும் அமெரிக்க செனட் சபையில் தீர்மானம் நிறைவற்றப்பட்டிருக்கிறது.

அமெரிக்க செனட் சபை கூட்டம் நேற்று நடந்தது. அப்போது, ஜெஃப் மார்க்லே, பில் ஹாகர்டி, ஜான் கார்னின் ஆகிய 3 சக்திவாய்ந்த எம்.பி.க்கள், இந்தியாவுக்கு ஆதரவாகவும், சீனாவுக்கு எதிராகவும் ஒரு தீர்மானத்தை அறிமுகப்படுத்தினர். அத்தீர்மானத்தில், “அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. நாங்கள் இந்தியாவின் இறையாண்மை, பிராந்திய நேர்மையை மதிக்கிறோம். சீனா ராணுவ பலத்தை பயன்படுத்தி எல்லைப் பகுதியில் நடத்திவரும் அத்துமீறல்களைக் கண்டிக்கிறோம். சீன அத்துமீறல்கள், அச்சுறுத்தல்களை சமாளிக்க இந்தியா மேற்கொள்ளும் தற்காப்பு நடவடிக்கைகளைப் பாராட்டுகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்து சீனாவை கண்டித்து நிறைவேற்றப்பட்டிருக்கும் இத்தீர்மானம் அரிதானதாகக் கருதப்படுகிறது. இந்தியாவுடன் சர்வதேச பிரச்னைகளில் பல்முனை ஒத்துழைப்பு நல்குவோம் என்று குவாட் மாநாட்டின் மூலம் அமெரிக்கா உறுதியேற்றிருந்தது. இந்த சூழலில், மேற்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் இத்தீர்மானம் உலக நாடுகளின் கவனம் ஈர்த்திருக்கிறது என்றால் மிகையாகாது.


Share it if you like it