133 பயணிகளுடன் சென்ற சீனாவின் போயிங் விமானம் விபத்துக்குள்ளானது. இதில், பயணம் செய்த பயணிகளின் கதி என்ன என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது.
சீனாவின் குன்மிங் நகரிலிருந்து 133 பயணிகளுடன் ஹாங்காங்கின் குவாங்சூ நகருக்கு இன்று மதியம் 1 மணியளவில் புறப்பட்டுச் சென்றது சீனாவின் கிழக்கு ஏர்லைன்ஸைக்குச் சொந்தமான MU5735 என்ற போயிங் 737 விமானம். ஆனால், இந்த விமானம் திட்டமிட்டபடி குறிப்பிட்ட நேரத்தில் குவாங்சூ நகருக்குச் சென்றடையவில்லை. இதனிடையே, இந்த விமானம் தென்மேற்கு சீனாவின் குவாங்ஸி பகுதியிலுள்ள மலையில் மோதி பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்த காணொளிகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இதனால், பள்ளத்தாக்குப் பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, தீயணைப்பு மட்டும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்திருக்கிறார்கள். சுமார் 25 தீயணைப்பு வாகனங்களில் 117 தீயணைப்பு வீரர்கள் சென்றிருக்கிறார்கள். எனினும், விமானம் விழுந்த இடம் மலைப்பகுதி என்பதால் தீயணைப்பு வாகனங்கள் உள்ளே செல்ல முடியவில்லை. ஆகவே, தீயணைப்பு வீரர்கள் மட்டும் நடந்தே உள்ளே சென்றிருப்பதாகத் தெரிகிறது. இதனால், அந்த விமானத்தில் பயணித்த 133 பயணிகளின் கதி என்னவானது என்பது தெரியவில்லை. எனினும், விமானம் மலையில் மோதி தீப்பிடித்து விழுந்திருப்பதால், அதில் பயணித்த பயணிகள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
சீனாவின் விமானப் போக்குவரத்துத்துறைதான் உலகிலேயே பாதுகாப்பானதாக நம்பப்படுகிறது. சீன விமானம் கடைசியாக 2010-ல்தான் விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் பயணித்த 96 பேரில் 44 பேர் உயிரிழந்தனர். இதன் பிறகு, சீன விமான போக்குவரத்துத்துறை பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தியது. இதனால், விமான விபத்து என்பது அறவே இல்லாமல் போனது. இந்த நிலையில், இன்று துரதிருஷ்டவசமாக 133 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளாகி இருக்கிறது.