சீனாவில் உய்க்குர் முஸ்லீம்கள் ரம்ஜான் நோன்பு வைப்பதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்திருக்கிறது. மேலும், மீறி நோன்பு இருப்பவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதற்காக, அந்நாட்டு போலீஸார் உளவாளிகளை நியமித்திருக்கிறார்கள்.
வடமேற்கு சீனாவில் உள்ள ஜின்ஜியாங் தன்னாட்சி பகுதியில் உய்க்குர் முஸ்லிம்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இவர்களை சீன அரசு பல ஆண்டுகளாகவே ஒடுக்கி வருகிறது. கடந்த 2017-ம் ஆண்டு முதல் உய்க்குர் முஸ்லிம்கள் ரம்ஜான் நோன்பு இருக்க சீன அரசு தடை விதித்திருந்தது. தடையை மீறுவோர் முகாம்களில் அடைக்கப்பட்டனர். இதன் பிறகு, 2021 – 22-ல் தடை உத்தரவில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் ரம்ஜான் மாதத்தில் நோன்பு இருக்க அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், நிகழாண்டு மீண்டும் ரம்ஜான் நோன்பு இருப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, வயது மற்றும் பாலின வித்தியாசம் இன்றி உய்க்குர் முஸ்லீம்கள் ரம்ஜான் நோன்பு இருக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அதோடு, தடையை மீறி நோன்பு இருப்பவர்களை கண்டறிய ஒவ்வொரு கிராமத்துக்கும் 2 முதல் 3 உளவாளிகளை சீன போலீஸார் நியமித்திருக்கிறார்கள். போலீஸார் மற்றும் உய்க்குர் முஸ்லீம்களுக்குள்ளேயே இந்த உளவாளிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இவர்கள் கிராமங்களிலுள்ள குடும்பத்தினர் நோன்பு கடைப்பிடிக்கிறார்களா என்பதை கண்காணித்து போலீஸுக்கு தகவல் அளிக்கின்றனர். மேலும், உய்க்குர் முஸ்லீம்களின் வீடுகள், மசூதிகளில் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றன. ரோந்துப் பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. சீன அரசை பொறுத்தவரை, நோன்பு இருப்பது சட்டவிரோத செயலாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, தடையை மீறுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இது தொடர்பான செய்தியை பகிர்ந்து வரும் முஸ்லீம்கள், ஏன் பாரத பிரதமர் மோடியை கொண்டாட வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.