சீனாவில் பார், கழிவறைகளாக மாறும் மசூதிகள்!

சீனாவில் பார், கழிவறைகளாக மாறும் மசூதிகள்!

Share it if you like it

சீனாவில் மசூதிகள் இடிக்கப்பட்டு மதுபான பார்களாகவும், கழிவறைகளாகவும் மாறி வரும் அவலநிலை நீடித்து வருகிறது.

சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் குறிப்பிடத்தக்க அளவில் உய்க்குர் முஸ்லீம்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் மீது சீன கம்யூனிஸ்ட் அரசு பல்வேறு அடக்குமுறைகளை கையாண்டு வருகிறது. உதாரணமாக, உய்க்குர் முஸ்லீம்கள் அனைவரும் தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் இரண்டு குழந்தைகளுக்கு பெற்ற உய்க்குர் முஸ்லீம் பெண்கள் கட்டாய கருத்தடை ஆபரேஷன் செய்ய வைக்கப்படுகிறார்கள். அதேபோல, தினமும் கருத்தடை மாத்திரை உட்கொள்ள வைக்கப்படுகிறார்கள். இதனால், அவர்களுக்கு எதிர்பாராத நேரங்களில் மாதவிடாய் ஏற்படுவதாகவும், பலருக்கு மாதவிடாய் நின்று விட்டதாகவும் குற்றம்சாட்டுகிறார்கள்.

தவிர, இதையும் மீறி பெண்கள் கருத்தரித்தால், அக்கருவை கலைக்கும்படி சீன அரசு கட்டாயப்படுத்துகிறதாம். எல்லாவற்றுக்கும் மேலாக, உய்க்குர் முஸ்லீம்களின் குழந்தைகள் குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு பெற்றோரிடமிருந்து சீன கம்யூனிஸ்ட் அரசு வலுக்கட்டாயமாக பிரித்து விடுவதாகவும் புகார்கள் இருக்கின்றன. இவற்றை எல்லாம் சீன அரசு முதலில் மறுத்து வந்தது. ஆனால், விஷயம் வெளி உலகத்துக்கு தெரியவந்ததும், ஜின்ஜியாங் மாகாணத்தில் பயங்கரவாத தாக்குதல் நடந்ததால், பயங்கரவாதத்தை தடுக்கும் வகையில், தடுப்பு முகாம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக சப்பைக்கட்டு கட்டியது.

இது ஒருபுறம் இருக்க, உய்க்குர் முஸ்லீம்கள் வசிக்கும் பகுதிகளில் இருக்கும் மசூதிகளை எல்லாம், சீன கம்யூனிஸ்ட் அரசு இடித்து விட்டு, இஸ்லாமியர்களை இழிவுபடுத்து வகையில், அந்த இடங்களில் எல்லாம் மதுபான பார்களையும், கழிவறைகளையும் கட்டி வருகிறது. அந்த வகையில், கடந்த 2017-ம் ஆண்டு முதல் தற்போதுவரை 16,000 மசூதிகளை சீன கம்யூனிஸ்ட் அரசு இடித்து தரைமட்டமாக்கி இருப்பதாக ஆஸ்திரேலிய ஆய்வில் தெரியவந்திருக்கிறது. இந்த நிலையில்தான், சீனா ஆக்கிரமித்திருக்கும் துர்கிஸ்தானிலும் இத்தகைய அத்துமீறல்களில் சீன அரசு ஈடுபட்டிருக்கிறது. அந்த வகையில், 800 ஆண்டுகள் பழமையான மசூதியை சீன கம்யூனிஸ்ட் அரசு இடித்திருக்கிறது. இதன் மூலம், ஹன் பெரும்பான்மையினர் உய்க்குர் முஸ்லீம்களை ‘மறு கல்வி’ முகாம்களில் வைத்து, புதிய குரானை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது என்கிற குற்றச்சாட்டு நிலவுகிறது.


Share it if you like it