கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருக்கும் இலங்கையை நோக்கி, சீனாவின் உளவுக் கப்பல் ஒன்று வந்து கொண்டிருக்கிறது. இந்தியாவின் கடலோர மற்றும் தென் மாநிலங்களான தமிழகம், ஆந்திரா, கேரளா ஆகியவற்றை உளவு பார்ப்பதற்காக இக்கப்பல் அனுப்பப்பட்டு இருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்திருக்கிறது. இதையடுத்து, மேற்கண்ட மாநிலங்கள் உஷாராக இருக்கும்படி மத்திய அரசு எச்சரித்திருக்கிறது.
இலங்கை நாடானது, ஒருபுறம் கடும் பொருளாதார நெருக்கடியிலும், இன்னொருபுறம் கடுமையான அரசியல் குழப்பத்திலும் சிக்கித் தவித்து வருகிறது. இந்த சூழலில்தான், சீனாவின் ‘யுவான் வாங்க் 5’ என்கிற உளவு போர்க் கப்பல், இலங்கையின் ஹம்பந்தோடா துறைமுகத்துக்கு வந்து கொண்டிருக்கிறது. ஆகஸ்ட் 11-ம் தேதி வந்தடையும் இக்கப்பல், 7 நாட்கள் அங்கு முகாமிட்டு இந்திய பெருங்கடல் பிராந்தியத்தின் வடமேற்கு பகுதியில் விண்வெளி கண்காணிப்பு, செயற்கைக்கோள் கட்டுப்பாடு மற்றும் ஆராய்ச்சி கண்காணிப்பு ஆகியவற்றை நடத்தும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதேசமயம், இக்கப்பலில் இருந்து 750 கி.மீ. பரப்பளவுவரை உளவு பார்க்க முடியும். அதன்படி, தமிழகத்தின் கல்பாக்கம், கூடங்குளம் உள்ளிட்ட அணு மின்சக்தி நிலையங்கள் மற்றும் அணு ஆய்வு மையங்களை வேவு பார்க்க முடியும். அதேபோல, கேரளா மற்றும் ஆந்திரா கடலோரப் பகுதிகளையும் உளவு பார்க்க முடியும். ஆக மொத்தத்தில், தென் மாநிலங்களில் உள்ள 6 முக்கிய துறைமுகங்களையும், சீன கப்பல் உளவு பார்க்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆகவே, தமிழகம், ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்கள் உஷார்படுத்தப்பட்டிருக்கின்றன. மேலும், சீனக் கப்பலின் இப்பயணம் தொடர்பாக, ‘ரா’ உளவு அமைப்பு, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ரகசிய அறிக்கை ஒன்றை அனுப்பி இருக்கிறது.
இதையடுத்து, இந்த விவகாரத்தில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தத் தொடங்கி இருக்கிறது. குறிப்பாக, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. சீன கப்பலின் நோக்கம் தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்படுவதுடன், இதனால் ஏற்படக் கூடிய தாக்கங்கள் குறித்தும் விவாதம் நடந்திருக்கிறது. இதன் தொடர்ச்சியாக, சீனாவின் முயற்சியை முறியடிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசு தயாராகி வருகிறது. அதேசமயம், இலங்கையில் அரசியல் குழப்பம் மற்றும் நிதி நெருக்கடி நிலவி வரும் நேரத்தில், சீன கப்பலின் பயணம் சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில், “இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களை பாதிக்கும் எந்தவொரு முன்னேற்றங்களையும் அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. ஆகவே, தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது” என்றார். மேலும், சீன கப்பல் வருகை தொடர்பாக, கொழும்பில் உள்ள இந்திய தூதர், இலங்கை வெளிவிவகாரத்துறை அமைச்சரிடம் வாய்மொழியாக எதிர்ப்புத் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த துறைமுகம் கடந்த 2017-ம் ஆண்டு இலங்கை அரசால் சீனாவுக்கு 99 வருட குத்தகைக்கு விடப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து, அத்துறைமுகத்தில் சீனாவின் உதவியுடன் புதிதாக துறைமுகம் கட்டப்பட்டது. இத்திட்டத்துக்கு மத்திய அரசு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.