வெளிச்சத்திற்கு வரும் கிறிஸ்துவ மதமாற்றம்!

வெளிச்சத்திற்கு வரும் கிறிஸ்துவ மதமாற்றம்!

Share it if you like it

வெளிச்சத்திற்கு வரும் கிறிஸ்துவ மதமாற்றம்!

ஒவ்வொருவருக்கும் தாய் – தந்தை இருப்பது போலவே, மதமும் தனித்தனியாகவே இருக்கும். காலப் போக்கில் ஒருவர், தனக்கு பிடித்த மதத்தை ஏற்றுக் கொள்வது, அவரவருடைய தனிப்பட்ட உரிமை. ஆனால், கட்டாயப் படுத்தியோ, ஆசை வார்த்தை காட்டியோ, ஒருவரை ஒரு மதத்தில் இருந்து மற்றொரு மதத்திற்கு மாற்ற நினைப்பது என்பது, மிகவும் தவறான செயல்.

அவ்வாறு ஆசை வார்த்தை கூறி, கட்டாயமாக மதம் மாற்றுவது, பலவித சங்கடங்களை, சமுதாயத்தில் ஏற்படுத்துகின்றது. அதிலும் இளைய சமுதாயத்தினர் இடையே, பள்ளிகளில் பயிலும் மாணவ – மாணவியர்கள் மத்தியில், படிக்கும் பருவத்தில், இது போன்ற மத மாற்று செயல்களில், சிலர் ஈடுபடுவதன் மூலம், குழந்தைகளின் “பிஞ்சு மனதில் நஞ்சு விதைப்பதன் மூலம்”, தேவை இல்லாத சமூக பிரச்சனைகள் பல அரங்கேறி வருகின்றன.

அது போன்ற செய்திகள் பத்திரிகைகளிலும், தொலைக் காட்சிகளிலும் தொடர்ந்து வெளி வந்து, சிலரின் முகமூடியை, அம்பலப் படுத்தியும் வருகின்றன.

பள்ளிகளில் கட்டாய மதமாற்றம்! – வெளிவந்த உண்மைகள்!

தூய இருதய மேல் நிலைப் பள்ளி, மைக்கேல் பட்டி :

தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் மைக்கேல் பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த மாணவி, 2022 ஆம் ஆண்டில், கடந்த ஜனவரி மாதம் 9 ஆம் தேதி, பூச்சி மருந்து குடித்து, தற்கொலைக்கு முயன்றார்.

அதற்குக் காரணமாக பத்திரிகையில் வந்த செய்தி என்னவெனில், “மதம் மாறச் சொல்லி, பள்ளி நிர்வாகம் அந்த மாணவியை வற்புறுத்தியதாகவும், அதற்கு அவர் ஒப்புக் கொள்ளாமல் இருந்த நிலையில், விடுமுறையில் வீட்டுக்கு அனுப்பாமல் அங்கேயே தங்க வைக்கப் பட்டதாகவும், பள்ளியை சுத்தம் செய்தல், கழிவறையை சுத்தம் செய்தல், பாத்திரம் கழுவுதல், சமையல் செய்தல் போன்ற எல்லா வகையான வேலைகளையும் கட்டாயமாகச் செய்ய சொல்லி  கொடுமைப் படுத்தியதாக”, அந்த மாணவி தரப்பில் இருந்து குற்றம் சாட்டப் பட்டது.

அந்த மாணவி, ஜனவரி மாதம் 19 ஆம் தேதி, 2022 அன்று மதியம் மூன்று முப்பது மணிக்கு இறைவனடி சேர்ந்தார். இதனால் பெரிதும் வருத்தம் அடைந்த அந்த மாணவியை சேர்ந்த உற்றார் -உறவினர்கள், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கக் கோரி, நீதிமன்றத்தில் முறையிட்டனர். சி.பி.ஐ. விசாரிக்க, ஜனவரி மாதம் 31 ஆம் தேதி, 2022 அன்று, மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு, தீர்ப்பு வழங்கியது.

https://www.indiatoday.in/india/story/tamil-nadu-girl-who-killed-self-over-conversion-cbi-takes-over-case-top-points-1906705-2022-01-31

கண்ணாட்டுவிளை அரசு மேல்நிலைப்பள்ளி, கன்னியாகுமரி :

கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்து உள்ள இரணியல் அருகே  இருக்கும் கண்ணாட்டுவிளை அரசு மேல்நிலைப் பள்ளியில், சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவ – மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

அந்தப் பள்ளியில் பணி புரிந்த தையல் வகுப்பு ஆசிரியை ஒருவர், ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவிகளிடம், “கிறிஸ்துவ மதம் சார்ந்த பிரார்த்தனைகளை சொல்லி, பிரார்த்தனை செய்ய கட்டாயப் படுத்தியதாகவும், இந்துக்கள் புனிதமாகக் கருதும் பகவத் கீதையை, மோசமானது” என ஆசிரியைக் கூறியதாக, அந்தப் பள்ளியில் படிக்கும் ஒரு ஆறாம் வகுப்பு மாணவி குற்றம் சாட்டி இருந்தார். இதனை அடுத்து, அந்த ஆசிரியை, அந்தப் பள்ளியில் இருந்து, இடைநீக்கம் செய்யப் பட்டு உள்ளார்.

https://www.indiatoday.in/india/story/government-teacher-religious-conversion-bible-kanyakumari-school-1937054-2022-04-13

திருப்பூர் அரசு பள்ளி :

திருப்பூரில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில், ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவி, மதமாற்றம் செய்ய முயற்சி செய்யப் பட்டதாக ஓரு காணொளி வெளியானது.

அந்தப் பள்ளியில் படிக்கும் ஆசிரியை ஒருவர், பெரும்பான்மையான இந்து மக்களால் வழிபடப் படும் சிவபெருமானை இழிவு படுத்தும் வகையில் பேசியதாகவும், மாணவ – மாணவியர்கள் தங்களது நெற்றியில் விபூதி வைப்பதையும், கழுத்தில் ருத்ராட்சம் அணிவதையும் கண்டு, ஆவேசமாக கத்தினார் எனவும், அந்த மாணவி, தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.

இதனை அடுத்து, அந்த மாணவியின் பெற்றோர், காவல் துறையினரிடம், இது குறித்து புகார் அளித்தனர்.

https://www.indiatoday.in/india/story/tamil-nadu-school-religious-conversion-attempt-tiruppur-teacher-1941755-2022-04-25

பொது வழியை மறித்த சர்ச் :

திருவண்ணாமலை அருகே இருக்கும் மருத்துவாம்பாடி என்ற கிராமத்தில், பட்டியல் இனத்தைச் சேர்ந்த மூன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள், அங்கு வசித்து வருகின்றனர். ஆர்.சி. என அழைக்கப் படும் “ரோமன் கத்தோலிக்க கிறிஸ்துவ தேவாலயம்” அங்கு உள்ளது. அந்த நிர்வாகத்தின் சார்பில், புனித அந்தோணியார் உயர்நிலைப் பள்ளி, அங்கு செயல் பட்டு வருகிறது.

அந்த நிர்வாகத்தை கவனித்துக் கொள்ளும் பாதிரியார் ஒருவர், அங்கு குடியிருக்கும் ஒரு பிரிவு மக்களை, மதம் மாற்ற வலியுறுத்தினார். ஆனால், அந்த ஊர் மக்கள் அதற்கு, அறவே மறுத்து விட்டனர். இதனால் கோபம் அடைந்த சர்ச் நிர்வாகத்தினர், நூறு ஆண்டுகளுக்கும் மேலாக, பொது மக்கள் பயன்படுத்தி வரும் பொது வழியை ஆக்கிரமித்து, திடீரென சுற்றுச் சுவர் ஒன்றை எழுப்பினர்.

அந்த சர்ச் நிர்வாகத்திடம், இது குறித்து, அந்த ஊர் மக்கள் கேட்ட போது, “அது எங்களுக்கு சொந்தமான இடம், அதனால் சுவர் எழுப்பி உள்ளோம்” என சர்ச் நிர்வாகம் தெரிவித்தது, அந்த கிராம மக்களை, அதிர்ச்சி அடையச் செய்தது. இதனால் அதிர்ச்சியும், கோபமும் அடைந்த அந்த ஊர் கிராம மக்கள், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து, இது சம்பந்தமாக புகார் அளித்து உள்ளனர்.

https://m.dinamalar.com/detail.php?id=3021351

அம்பலப் படுத்திய ஆங்கிலத் தொலைக்காட்சி :

பள்ளிக் கூடங்களில் பயிலும் மாணவ – மாணவியர்களை குறி வைத்து, கிறிஸ்தவ மதமாற்றம் எவ்வாறு நடைபெறுகிறது என்பதனை, சி.என்.என். நியூஸ் 18 ஆங்கிலத் தொலைக் காட்சி  செய்தி நிறுவனம் அம்பலப் படுத்தியது.

பொருளாதாரத்தைக் காரணமாக வைத்து மதம் மாற்றப் படுகிறார்கள் எனவும், மாணவ – மாணவியர்களின் மேற்படிப்புக்கு நிதி உதவி அளிக்கப் படுவதன் மூலமாக பலர் மதம் மாற்றம் செய்யப் படுகிறார்கள் எனவும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உதவி செய்வதாக ஆசை வார்த்தைக் கூறியும், ஓருவர் மேன்மை நிலையை அடைய கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால் தான் சாத்தியம் என மூளைச் சலவை செய்யப் பட்டும், பைபிள் மட்டுமே புனிதமானது, கீதை மோசமானது என பேசியும் மதம் மாற்றுகின்றனர் என, சி.என்.என். நியூஸ் 18 ஆங்கிலத் தொலைக் காட்சி செய்தி நிறுவனம் குற்றம் சுமத்தியது.

மேலும், மாதம் தோறும் பண உதவி செய்தும், தொலைபேசி அளிப்பதாக வாக்குறுதி அளித்தும், இளம் மாணவ – மாணவியர்களை கிறிஸ்துவ மத வழிபாடுகளுக்கு கட்டாயமாக வரவழைக்கப் பட்டும், மதம் மாற்றப் படுகிறார்கள் என குற்றம் சுமத்தி, அந்தத் தொலைக் காட்சி நிறுவனம் செய்தி வெளியிட்டது.

தனிப்பட்ட ஒருவர், எந்த மதத்தை விரும்பினாலும், அவர் மனம் விரும்பி, தனக்கு பிடித்த மதத்தை பின்பற்றலாம். அந்த உரிமையை, நமது அரசியல் அமைப்பு, ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் வழங்கி உள்ளது. ஆனால் அதனை முழுமையாக கடைபிடிக்காமல், ஆசை வார்த்தை கூறியோ அல்லது கட்டாயப் படுத்தியோ, மதம் மாற்றுவது என்பது, மன்னிக்க முடியாத செயல்.

மேலே குறிப்பிடப் பட்டுள்ள அனைத்து சம்பவங்களும், இந்த ஆண்டின் ஜனவரி மாதம்  முதல் ஏப்ரல் மாதம் வரை நடந்த நிகழ்வுகளே. வெளிச்சத்திற்கு வந்தவை மிகவும் குறைவானவையே. வெளிச்சத்திற்கு வராமல் நிறைய மதமாற்ற நிகழ்வுகள், திரைமறைவில் அரங்கேறி வருவது கண்டிக்க, தண்டிக்கப் வேண்டியது என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருந்து வருகின்றது.

  • . ஓம் பிரகாஷ், Centre for South Indian Studies, Chennai

Share it if you like it