கர்நாடகா கூட்டத்துக்கு சென்றால்… முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை எச்சரிக்கை!

கர்நாடகா கூட்டத்துக்கு சென்றால்… முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை எச்சரிக்கை!

Share it if you like it

தமிழகத்திற்கு தண்ணீர் தரமறுக்கும் காங்கிரஸ் கட்சி நடத்தும் கூட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் சென்றால் கோட்டையை முற்றுகையிடுவோம் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

மத்திய பா.ஜ.க. அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம், மாற்றத்திற்கான மாநாடு என்கிற பெயரில் கரூரில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசுகையில், “கர்நாடகாவில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி, தமிழகத்திற்கு காவிரி தண்ணீரை தரமுடியாது என்று கூறியிருக்கிறது. ஆகவே, கர்நாடகாவில் நடைபெறவுள்ள எதிர்க்கட்சிகள் கூட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் புறக்கணிக்க வேண்டும். அவ்வாறு புறக்கணித்தால் அவருடன் பா.ஜ.க. நிற்கும். அதேசமயம், அக்கூட்டத்தில் ஸ்டாலின் கலந்துகொண்டால் கோட்டையை முற்றுகையிடுவோம்.

மேலும், எதிர்வரும் பார்லிமென்ட் தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான ஊழலற்ற ஆட்சி 3-வது முறையாகத் தொடர்வதில், தமிழகத்தின் பங்கும் இருக்க வேண்டும். ஆகவே, தமிழகத்தில் இருந்து பா.ஜ.க. சார்பில் பெருமளவில் பார்லிமென்ட் உறுப்பினர்களை வெற்றிபெறச் செய்ய, தொண்டர்கள் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். கொலைக் குற்றவாளிகளை பிடிக்காமல், சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிடுபவர்களை காவல்துறை கைது செய்து வருகிறது. கல்விக் கடன் ரத்து, பகுதி நேர ஆசிரியர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் என ஏராளமான வாக்குறுதிகளை தி.மு.க. நிறைவேற்றவில்லை” என்று குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.


Share it if you like it