முதல்வர் முதல் அமைச்சர்கள் வரை கழுவி ஊற்றிய தி.மு.க. மா.செ.!

முதல்வர் முதல் அமைச்சர்கள் வரை கழுவி ஊற்றிய தி.மு.க. மா.செ.!

Share it if you like it

தமிழக முதல்வர் ஸ்டாலின் குறித்தும், அமைச்சர்கள் நேரு, அன்பில் மகேஷ் குறித்தும் தி.மு.க. மாவட்டச் செயலாளர் விமர்சித்திருக்கும் ஆடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

கோவை மாநகர் மாவட்ட தி.மு.க. செயலாளராக இருப்பவர் நா.கார்த்திக். சிங்காநல்லூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வான இவரது மனைவி இளஞ்செல்வி, கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலைவராக இருக்கிறார். இந்த சூழலில், தி.மு.க. தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் குறித்து கார்த்திக் கடுமையாக விமர்சித்தாக கூறும் ஆடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அந்த ஆடியோவில், “ஜெயலலிதா இருக்கும்போது அவர்தான் முடிவெடுத்தனர். எந்த அறிவிப்பாக இருந்தாலும் ஜெயலலிதா பெயரில்தான் வெளியிடப்படும். அந்த வீட்டிற்குள் எல்லோரம் நுழைந்து விட முடியாது. ஆனால், இங்கே அப்படி இல்லை. அரசியலில் இவர்தான் முடிவெடுப்பவராக இருக்க வேண்டும். அண்ணா நகர் கார்த்திக் வீட்டில் காலையில் 200, 300 பேர் நிற்பார்கள். அவர் ஒரு மீட்டிங்கில் இருப்பதாக சொல்வார்கள். ஆனால் உடற்பயிற்சி செய்து கொண்டிருப்பார்.

திருச்சியில் அன்பில் மகேஷ் எங்கிருப்பார் என்று கட்சிக்காரர்களுக்கே தெரியாது. ஆனால், நேருவை எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம். இவற்றையெல்லாம் சரி செய்ய வேண்டும். கோவையில் தி.மு.க. வலிமையாக இருக்கிறது என்றால் எனக்கு பதவி வேண்டாம். அதேசமயம், புத்திசாலித்தனமாக இருந்திருந்தால் கோவையை ஆண் மேயரிடம் கொடுத்திருக்க வேண்டும். அப்போதுதான் கட்சி நிலையாக நிற்கும். கீழே உள்ள 100 கவுன்சிலரை வைத்து கொண்டு டெவலப் செய்ய இயலாது. இதனை ஆட்சிக்கு வந்த உடனேயே முதல்வர் ஒப்புக்கொண்டு விட்டார்.

மேயராக என் மனைவி வரவேண்டும் என்று இல்லை. யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனால், கோவை மாதிரி ஒரு ஊரில் பெண் மேயரை வைத்து கட்சியில் என்ன சாதித்திருக்க முடியும் என்று கேட்கிறேன். ஒரு பெண் மேயர் 10 எம்.எல்.ஏ.க்களுக்கு பதில் கொடுக்க வேண்டும். அவ்வாறு பதில் கொடுக்க முடியுமா? பணம் மட்டுமே குறிக்கோளாக இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் கட்சியை வளர்க்க முடியாது” என்று பேசுகிறார். இந்த ஆடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it