சட்டமன்றத் தேர்தலை மிஞ்சும் வகையில், உள்ளாட்சித் தேர்தலில் தமிழகம் முழுவதும் பணமும், பரிசுப் பொருட்களும் தாராளமாக வழங்கப்பட்டன.
பொதுவாக சட்டமன்றத் தேர்தலின்போதுதான் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படும். ஆனால், அந்தக்காலம் மலையேறி விட்டது. தற்போதெல்லாம் உள்ளாட்சித் தேர்தலுக்குத்தான் பணமும், பரிசுப் பொருட்களும் குவிகின்றன. அந்த வகையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பணமும், பரிசுப் பொருட்களும் வாக்காளர்களுக்கு தாராளமாக வழங்கப்பட்டன. பல இடங்களில் பரிசுப் பொருட்களைப் பார்த்து வாக்காளர்கள் திகைத்துப் போனார்கள்.
குறிப்பாக, கொங்கு மண்டலத்தில் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு திராவிடக் கட்சிகளும் பரிசு மழை பொழிந்ததோடு, ரொக்கப் பணமும் தாராளமாக வழங்கினார்கள். அந்த வகையில், தேர்தல் நாளானா இன்று கோவை மாநகராட்சி 63-வது வார்டில், காவல்நிலையம் அருகே உள்ள பிரபலமான சரஸ்வதி நடராஜா கல்யாண மண்பத்தில் தி.மு.க.வினர் காவல்துறை உதவியுடன் பொதுமக்களுக்கு ‘ஹாட் பாக்ஸ்’ மற்றும் ரூ.1000 ரொக்கம் விநியோகம் செய்தார்கள்.
இதையறிந்த அ.தி.மு.க.வினர் மற்றும் பா.ஜ.க.வினர் பணம், பரிசு விநியோகிப்பதை கண்டித்து கல்யாண மண்பத்தை பூட்டினார்கள். இதனால், கையும்களவுமாக மாட்டிக் கொண்ட தி.மு.க.வினர் மண்டபத்தின் பின்புறமாக பொதுமக்களை அனுப்பி வைத்தனர். பிறகு, அங்கிருந்த அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. கட்சியினருடன் தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.