கோவையில் 100 ஆண்டுகள் பழமையான சிவன் கோயில் இடிக்கப்பட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரு பக்கம் யாகம் நடத்திக் கொண்டு, இன்னொரு பக்கம் கோயில்களை இடித்துக் கொண்டிருக்கும் தி.மு.க. அரசைப் பார்த்து விளங்க முடியா விடியல் அரசு என்று கிண்டல் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. வெற்றிபெற்று ஆட்சி அமைத்த பிறகு, ஏராளமான ஹிந்து கோயில்கள் இடிக்கப்பட்டிருக்கின்றன. இதற்கு காரணமாக ஆக்கிரமிப்பு என்று கூறப்பட்டது. அதேசமயம், ஆக்கிரமிப்பில் இருக்கும் கிறிஸ்தவர்களின் சர்ச், இஸ்லாமியர்களின் மசூதி ஆகியவை இடிக்கப்படவில்லை. அவ்வளவு ஏன், திருப்பூரில் அனுமதி இன்றி கட்டப்பட்டதாகக் கூறி, மசூதிக்கு சீல் வைக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், தி.மு.க. அரசு கண்டுகொள்ளவில்லை. இதில், வேடிக்கை என்னவென்றால், மேற்படி மசூதிக்கு சீல் வைத்தால் இஸ்லாமியர்கள் மத்தியில் பதட்டமான சூழல் உருவாகும் என்று தி.மு.க. எம்.எல்.ஏ. செல்வராஜ், முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியதுதான்.
அந்த வகையில், கோவையில் மீண்டும் ஒரு ஹிந்து கோயிலை இடித்து ஹிந்துக்களின் சாபத்தை வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறது தி.மு.க. அரசு. அதாவது, கோவை டவுன் காளப்பட்டி 7-வது தெருவில் 100 ஆண்டுகள் பழமையான சிவன் கோயில் ஒன்று இருந்தது. இக்கோயிலில்தான் அப்பகுதி மக்கள் வழிபட்டு வந்தனர். இந்த சூழலில், இக்கோயிலுக்கு அருகேயுள்ள இடத்தை தி.மு.க. பிரமுகர் ஒருவர் வாங்கி நட்சத்திர விடுதி கட்டியிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த ஹோட்டலுக்கு பார்க்கிங் வசதி இல்லையாம். ஆகவே, மேற்படி கோயில் இருந்த இடம் அரசுக்குச் சொந்தமான நிலம். இதை ஆக்கிரமிப்பு செய்து கோயில் கட்டப்பட்டிருக்கிறது என்று சொல்லி, இன்று காலை கோயிலை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்திருக்கிறது தி.மு.க. மாடல் விடியல் அரசு.
தகவலறிந்த அப்பகுதி மக்கள் சம்பவ இடத்தில் குவிந்தனர். மேலும், கோயிலை இடிக்கும்போது, அங்கிருந்து பெண் பக்தர்கள் உட்பட அனைவரும் ஓம் நமச்சிவாயா, ஓம் நமச்சிவாயா என்று சிவனின் மந்திரத்தை உச்சரித்ததோடு, கோயிலை இடிக்கக் காரணமான அரசுக்கம், அரசு அதிகாரிகளுக்கும் சாபமும் விட்டனர். இதனிடையே, இத்தகவல் ஹிந்து முன்னணி, விஷ்வ ஹிந்து பரிஷத், பா.ஜ.க. உள்ளிட்ட ஹிந்து அமைப்புகளுக்குத் தெரியவந்தது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஹிந்து அமைப்பினர், கோயில் இடிக்கப்படுவதை தடுத்து நிறுத்தினர். இதைத் தொடர்ந்து, அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில், சட்டப்படி நீதிமன்றத்தை நாடி தீர்வு காண்பது என்று முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் சில மணி நேரம் சலசலப்பு ஏற்பட்டது.