கோவையில் குண்டும் குழியுமாக இருந்த சாலையால் ஒரு மூதாட்டியின் உயிர் பறிபோயிருக்கும் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கோவை குனியமுத்தூர் சக்தி நகரைச் சேர்ந்தவர் பாப்பாத்தி என்கிற நாகம்மாள். 70 வயதாகும் இவர், கணவர் இறந்து விட்டதால் தனது மகன் ராஜபாண்டியனுடன் வசித்து வந்தார். இந்த சூழலில், வீட்டிலிருந்த நாகம்மாளுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே, ராஜபாண்டி தாயை காரில் அழைத்துக் கொண்டு கோவை மருத்துவமனைக்கு புறப்பட்டார். சக்தி நகர் பகுதியில் கார் சென்றபோது, கோவையில் பெய்த மழை காரணமாக சாலை முழுவதும் சேறும், சகதியுமாக இருந்தது. இதனால், காருக்கு முன்னால் சென்று கொண்டிருந்த சரக்கு வேன், மோசமான பள்ளத்தில் சிக்கியது.
சாலை மிகவும் குறுகலாக இருந்ததால் ராஜபாண்டியால் காரை முன்னோக்கி நகர்த்த முடியவில்லை. அதோடு, பின்னால் வாகனங்கள் நின்றதால் காரை பின்னோக்கியம் எடுக்க முடியவில்லை. அதேசமயம், காருக்குள் இருந்த நாகம்மாள் நெஞ்சுவலியால் துடித்துக் கொண்டிருந்தார். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி, பொக்லைன் இயந்திரம் மூலம் வேன் மீட்கப்பட்டது. இதன் பிறகு, ராஜபாண்டியன் வேகவேகமாக தனது தாயை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால், வழியிலேயே நாகம்மாள் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இதையறிந்த ராஜபாண்டி கண்ணீர் விட்டு கதறி அழுதார். தகவலின் பேரில் போலீஸார் வந்து நாகம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கோவை நகரில் சாலை மோசமாக இருந்ததால் மருத்துவனைக்கு செல்ல முடியாமல் பெண் நோயாளி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திராவிட மாடல் ஆட்சியில் சட்டம் ஒழங்கு மட்டுமல்ல, சாலைகளும் படுமோசமாகத்தான் இருக்கின்றன.