தனது ட்விட்டர் பக்கத்தில் ‘வடக்கன்ஸ்’ என்று பதிவிட்டது தொடர்பாக, காமெடி நடிகர் அம்பானி சங்கர் விளக்கம் அளித்திருக்கிறார்.
மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்தவர் சங்கர். நடிகர் அஜித் நடிப்பில் வெளியான ‘ஜி’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தவிர, ‘ஆறு’, ‘பேரரசு’, ‘வல்லவன்’, ‘கருப்பசாமி குத்தகைதாரர்’ உட்பட பல படங்களில் நடித்திருக்கிறார். காமெடி நடிகர் வடிவேலுவின் டீமிலும் நடித்திருக்கிறார். எனினும், நடிகர் கருணாஸ் நடித்த ‘அம்பாசமுத்திரம் அம்பானி’ படத்தின் மூலம்தான் பிரபலமானார். இதனால் தனது பெயரை `அம்பானி சங்கர்’ என்றும் மாற்றிக் கொண்டார். இவர், சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவு ஒன்று வைரலான நிலையில், சர்ச்சைகளுக்கும் உள்ளாகி இருக்கிறது. அதாவது, ட்விட்டரில் யாரோ ஒருவர் சங்கரை டேக் செய்து ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். இப்பதிவுக்கு பதில் அளித்திருந்த சங்கர், ‘வடக்கன்ஸ் நான் ஏதோ அம்பானி குடும்பத்தைச் சேர்ந்தவன்னு நினைச்சு என்னைய டேக் பண்றாங்க’ என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், தன்னை டேக் செய்தவரின் விபரத்தை தெரிவித்திருந்தார். இந்த ட்வீட் வைரலான நிலையில், வடக்கன்ஸ் என்று அவர் குறிப்பிட்டிருந்தது சர்ச்சைகளையும் கிளப்பியது.
இதுகுறித்து சங்கர் ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், ”மதுரையில் சாதாரண சங்கராக இருந்த என்னை, சென்னை அம்பானி சங்கராக மாற்றிவிட்டது. விக்கிபீடியாவிலும் எனது பெயரை அம்பானி சங்கர் என்று மாற்றியதில், ட்விட்டரிலும் ஒரிஜினல் ஐ.டி.க்கான டிக் கிடைத்து விட்டது. இதன் பிறகு, நான் ஏதோ அம்பானி டீமை சேர்ந்தவன்னு நினைச்சு, ட்விட்டிரில் என்னை டேக் பண்ணி விடுவது அடிக்கடி நடக்கிறது. நேற்று ரொம்ப ஹைலைட் ஆகிவிட்டசது. 6 மாத ஸ்டேட்மென்ட்ஸ், ரீபைன்ட் கிடைக்காதுனு என்னென்னமோ டீட்டெயில்ஸ் போட்டு எனக்கு டேக் போட்டு விட்டுட்டாங்க. அதனாலதான் அப்படியொரு ட்வீட் போட்டேன். ஒரு காமெடி ட்வீட்டா நினைச்சுதான் அந்த போஸ்ட்டை போட்டேன்.
ஆனா, அதுல ‘வடக்கன்ஸ்’னு சொன்னதை பலரும் ரொம்ப சீரீயஸா எடுத்துக்கிட்டாங்க. அதை தற்செயலா சொல்லிட்டேனே தவிர, மற்றபடி யாரையும் காயப்படுத்துற எண்ணத்துல சொல்லலை. இதுல சிலர் ‘இவன் அந்த கட்சி… இவன் இந்தக் கட்சின்னு வேற சொல்றாங்க. நான் சினிமா கட்சி. வேற எந்த கட்சியிலும் கிடையாது. இப்ப ‘இடிமுழக்கம்’, ‘நந்திவர்மன்’, ‘தீர்க்கதரிசி’ ஆகிய படங்கள் நடிச்சு முடிச்சிருக்கேன். இப்படங்கள் ரிலீஸுக்கு ரெடியா இருக்கு. இன்னொரு பக்கம் சிலர், ‘அம்பானிகிட்ட லோன் வாங்கிக் குடுங்க’னு ரெக்கமென்ட் லெட்டர் கேட்டு போன் பண்றாங்க. அவ்ளோ ஒர்த் இல்லீங்க நான்” என்று கூறியிருக்கிறார்.