புதைக்கப்படவில்லை… விதைக்கப்படுகிறார்கள்..!

புதைக்கப்படவில்லை… விதைக்கப்படுகிறார்கள்..!

Share it if you like it

தமிழ்நாட்டில் உள்ள நீலகிரி மாவட்டத்தில் இருக்கும், “வெலிங்டன் ராணுவ பயிற்சி” மையத்தில், பயிற்சி அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்காக, நமது நாட்டின் முதலாவது முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், டிசம்பர் மாதம் எட்டாம் தேதி, புதன்கிழமை காலை, கோயம்புத்தூர் விமான நிலையத்திற்கு வருகை புரிந்தார். அங்கு இருந்து, எம்.ஐ. -17 வி5 (MI-17 V5) ரக ஹெலிகாப்டரில், மனைவி மதுலிகா ராவத் மற்றும் 13 ராணுவ உயரதிகாரிகளான எல்.எஸ். லிடர், ஹர்ஜிந்தர் சிங், குருசேவக் சிங், ஜிதேந்திர குமார், விவேக் குமார், சாய் தேஜா, ஹவில்தார் சத்பால், பிரித்விராஜ் சௌஹான் தாஸ், பிரதீப் ஏ கே சிங், வருண் சிங் என 14 வீரர்கள் உடன் பயணித்த ஹெலிகாப்டர், எதிர்பாராத விதமாக விபத்துக்கு உள்ளானது.

நாடு முழுவதும் மிகுந்த துயரத்தை ஏற்படுத்திய இந்த சம்பவத்தால், இந்திய மக்கள் அனைவரும் பெரிதும் வருந்தினர். உலக நாடுகளின் பல தலைவர்கள் கூட,  இந்தியத் துயரத்தில் பங்கேற்பதாக, தங்களுடைய வருத்தத்தை தெரிவித்து இருந்தனர்.

மருத்துவமனையில், உயர் தரப்பட்ட சிகிச்சை அளிக்கப்பட்ட போதும்,  13 பேர் வீர மரணம் அடைந்தனர். குரூப் கேப்டன் வருண் சிங் மட்டும், 80 சதவீத தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு, அவருக்கு வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில்,  தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டது.

பதக்கங்கள் பல பெற்றவர்:

பிபின் ராவத்தின் முழுப்பெயர் பிபின் லக்ஷ்மன் ராவத்.  1958 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 16 ஆம் தேதி பிறந்தார். “இந்திய ராணுவ அகாடெமி” மற்றும் “தேசிய பாதுகாப்பு அகாடெமியில்” பயிற்சி பெற்ற பின், இந்திய ராணுவத்தில் 1978 ஆம் ஆண்டு சேர்ந்தார். அவருடைய தந்தையும், ராணுவ வீரர் ஆவார். ராணுவத்தில், திறமையாக செயல்பட்டதன் காரணமாக,  “பரம் விஷிஷ்ட சேவா பதக்கம்”, “உத்தம் யூத் சேவா பதக்கம்”, “அதி விஷிஷ்ட சேவா பதக்கம்”, “யூத் சேவா பதக்கம்”, “சேனா பதக்கம்” என 18 உயரிய பதக்கங்களைப் பெற்று உள்ளார்.

முப்படைகளையும் ஒருங்கிணைத்தார்:

40 ஆண்டு காலமாக, இராணுவத்தின் பல்வேறு படைப் பிரிவில், “தலைமை அதிகாரி”, “பிரிகேட் கமாண்டர்”, “ராணுவ நடவடிக்கை இயக்குனரக அதிகாரி”, “ராணுவ செயலகப் பிரிவில் ராணுவச் செயலர்” என நிறைய பொறுப்புகளை வகித்தார். அதனுடன், ஐக்கிய நாடுகள் சபையின், அமைதி காக்கும் படையின் ஒருங்கிணைந்த பகுதி உறுப்பினராகவும், காங்கோ படைகளுக்கு, தலைமை பொறுப்பும் வகித்து உள்ளார். அங்கு கிளர்ச்சி செய்த வன்முறையாளர்களை அடக்கியதுடன், அவர்கள் மீது தாக்குதல் நடத்தி, நிலைமையை கட்டுக்கோப்புக்குள் கொண்டு வந்தார். இதன் மூலம், காங்கோ மக்கள் நிம்மதியாக வாழ வழி வகுத்துத் தந்தார். அதனால், 2 சர்வதேச விருதுகளை, இந்திய ராணுவம் வென்றது. நேபாளத்தின் கௌரவ  ஜெனரலாக நியமிக்கப் பட்டார்.

1999 ஆம் ஆண்டு நடந்த கார்கில் யுத்தத்திற்குப் பிறகு, மூன்று படைகளையும் ஒருங்கிணைக்க, ஒரு தலைமை தளபதி வேண்டும் என்ற அவசியத்தை, இந்திய அரசு உணர்ந்தது. மோடி பிரதமராக பதவியேற்றப் பிறகு, 2019 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 15 ஆம் தேதி, சுதந்திர தினத்தன்று உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், மூன்று படைகளையும் ஒருங்கிணைக்க, ஒரு தலைமைத் தளபதி நியமனம் செய்வது தொடர்பாக, அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன் பிறகு, 2019 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம், அந்த பதவி, உருவாக்கப் பட்டு, அதிகாரப் பூர்வமாக அங்கீகரிக்கப் பட்டது. நமது நாட்டில் ராணுவப் படை, கப்பல் படை, விமானப் படை என முப்படைகளையும் ஒருங்கிணைக்க, முதல் தலைமை தளபதியாக, பிபின் ராவத் அவர்கள் நியமிக்கப் பட்டார்.

துல்லிய தாக்குதலின் பிதாமகர் நிகழ்த்திய சாதனைகளில் சில:

உள் நாட்டிலேயே, இராணுவத் தளவாடங்களை தயாரிக்க வேண்டும் என ஊக்குவித்தார். வளர்ந்த நாடுகள் மட்டுமே, துல்லியத் தாக்குதல் (Surgical Strike) நடத்தி வந்த நிலையில், நமது இந்திய ராணுவ வீரர்களாலும், துல்லியத் தாக்குதல் நிகழ்த்த முடியும் என, உலகறியச் செய்தவர், பிபின் ராவத் அவர்கள். அவர் தலைமையில் செய்த சாதனைகளில் சில…

மியான்மரில் தாக்குதல்

மணிப்பூர் மாநிலத்தில், நாகாலாந்து தீவிரவாத அமைப்பானது, இந்திய ராணுவத்தினர் மீது, கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியது. அதில், பல ராணுவ வீரர்கள், வீர மரணம் எய்தினர். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள், மியான்மர் காடுகளில் பதுங்கினர். தவறு செய்தவர்களை வேட்டையாட, இந்திய ராணுவம் தீர்மானித்தது. 2015 ஆம் ஆண்டு, ஜூன் 9 ஆம் தேதி, இந்திய ராணுவத்தினர் தாக்குதல் நிகழ்த்தியதில், அப்போதைய லெப்டினன்ட் ஜெனரல் பிபின் ராவத், முக்கிய பங்கு வகித்தார்.

உரி தாக்குதல்

நமது நாட்டின் எல்லை பகுதியில், “உரி” (Uri) என்ற இடத்தில், நமது ராணுவ வீரர்கள் மீது, பாகிஸ்தானில் இருந்து செயல்படும் தீவிரவாத அமைப்பான “ஜெய்ஷ் இ முகமது”  அமைப்பினர், 2016 ஆம் ஆண்டில், தீவிரவாதத் தாக்குதல் நடத்தினர். அதில், நமது ராணுவ வீரர்கள் பலர், வீர மரணம் அடைந்தனர். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை கண்டுபிடித்து, அவர்களுக்கு சரியான பதிலடி தர வேண்டும் என, இந்திய மக்கள் அனைவரும், மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில், இந்திய ராணுவத்தின் துணைத் தளபதியாக இருந்த பிபின் ராவத் அவர்கள், எல்லை தாண்டிச் சென்று “சர்ஜிக்கல் ஸ்டிரைக்” (Surgical Strike) நடத்தியதில், முக்கியப் பங்கு வகித்தார். அதன் மூலமாக, பல தீவிரவாத குழுக்கள் அழிக்கப் பட்டதுடன், இந்தியாவிற்கு ஏற்பட இருந்த பெரிய ஆபத்தும் நீங்கியது.

பாலகோட் தாக்குதல்

பாகிஸ்தான் ராணுவம், இந்தியாவின் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த போது, பாகிஸ்தானுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டார். 2019 ஆம் ஆண்டு, பிப்ரவரி 14 ஆம் தேதி, காஷ்மீரில் உள்ள “புல்வாமா” என்ற இடத்தில், பாகிஸ்தானில் இருந்து செயல்படும் தீவிரவாதிகள், தாக்குதல் நடத்தினர். அதில், பல ராணுவ வீரர்கள் பலியாயினர். இதற்கு பதிலடி கொடுக்க, இந்திய அரசு தீர்மானித்தது. இந்திய விமானப்படை, 2019 ஆம் ஆண்டு, பிப்ரவரி 26 ஆம் தேதி, பாகிஸ்தானின் “பாலாகோட்” (Balakot) பகுதியில் அதிரடி தாக்குதலை நிகழ்த்தியதில், அப்போதைய இராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் அவர்கள், முக்கியப் பங்கு வகித்தார்.

மாவோயிஸ்ட் செயல்பாடுகளை கட்டுப்படுத்தினார்

வடகிழக்கு மாநிலங்களில், மாவோயிஸ்ட் செயல்பாடுகளை கட்டுப்படுத்துவதில், நிறைய முக்கியப் பணிகளை மேற்கொண்டார். அதன் மூலம் தீவிரவாத செயல்கள், வெகுவாக கட்டுப்படுத்தப் பட்டதுடன், வடகிழக்கு மாநிலங்கள் அமைதி நிலைக்கு திரும்பியது.

சீனாவின் அத்துமீறலை கட்டுப்படுத்தினார்

டோக்லாம் எல்லைப் பகுதியில், சீனாவின் அத்துமீறலை திறமையாக கையாண்டு, நமது ராணுவ வீரர்களுக்கு,  நம்பிக்கையையும், உத்வேகத்தையும் ஏற்படுத்தினார்.

பிபின் ராவத் அவர்களின் மரணம், இயற்கையானதா? அல்லது ஏதேனும் சதி நிகழ்ந்து உள்ளதா? என பல்வேறு கோணங்களில், மத்திய அரசு விசாரித்து வரும் இவ்வேளையில், அவர் விட்டுச் சென்ற பணிகளை, தொடர்ந்து செய்து, தீவிரவாதிகளை வேருடன் களைய வேண்டும் என்பதே, அனைத்து இந்திய மக்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகின்றது. அவருடன் சேர்ந்து, மரணம் எய்திய மற்ற ராணுவ வீரர்களுக்கு, நாம் செய்யும் அஞ்சலி, அதுவாகவே இருக்கும்.

வீரர்கள் மண்ணில் புதைக்கப் படவில்லை…

அவர்கள் விதைக்கப் படுகிறார்கள்…

  • அ. ஓம் பிரகாஷ், Centre for South Indian Studies Chennai


Share it if you like it