போட்டி வேட்பாளர்கள்; கதறும் கழகங்கள்: பா.ஜ.க. குஷி!

போட்டி வேட்பாளர்கள்; கதறும் கழகங்கள்: பா.ஜ.க. குஷி!

Share it if you like it

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு பிப்ரவரி 19-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், போட்டி வேட்பாளர்களைக் கண்டு தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரண்டு கழகங்களும் கதறுகின்றன. அதேசமயம், பா.ஜ.க.வோ ஏக குஷியில் இருக்கிறது.

தமிழகத்தில் 2011-ம் ஆண்டுக்குப் பிறகு உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை. 2016-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், தி.மு.க. தரப்பில் வழக்குத் தொடரப்பட்டதால், தேர்தல் நடக்கவில்லை. இதனால், உள்ளாட்சி அமைப்புகளில் அதிகாரிகள் வைத்ததுதான் சட்டமாக இருந்தது. லஞ்ச, லாவண்யங்களும், ஊழல்களும் தலைவிரித்தாடின. இதையடுத்து, உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டுமென பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, உள்ளாட்சித் தேர்தலை நடத்தும்படி கோர்ட் உத்தரவிட்டது.

அதன்படி, முதலில் ஊரகப் பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் 2019-ம் ஆண்டு இறுதியில் நடத்தப்பட்டது. இதிலும், புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தேர்தல் நடக்கவில்லை. பின்னர், விடுபட்ட 9 மாவட்டங்களிலும் வார்டு வரையறை, தொகுதி மறுசீரமைப்பு பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கடந்தாண்டு அக்டோபர் மாதம் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான பணிகள் தொடங்கின.

அந்த வகையில், ஜனவரி 28-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி பிப்ரவரி 4-ம் தேதியோடு நிறைவடைந்தது. இதில்தான், கழகங்களில் கலகம் பிறக்க ஆரம்பித்தது. அதாவது, தமிழகத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போதுதான் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதால், பதவிகளை கைப்பற்ற கழக கண்மணிகள் துடித்தனர். ஆனால், ஆசைப்படும் அனைவருக்கும் சீட் கொடுப்பது என்பது சாத்தியமல்லவே. எனவே, சிலருக்கு மட்டுமே சீட் கிடைத்தது. கவுன்சிலர், தலைவர் பதவி ஆசையில் இருந்தவர்களின் கனவில் மண் விழுந்து விட்டது.

இதையடுத்து, தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளிலும் சீட் கிடைக்காத கழக கண்மணிகள், சுயேட்சையாக போட்டியிட மனு தாக்கல் செய்தனர். இவர்களை சமாதானப்படுத்த இரு கழகங்களும் முயன்றும் பலனில்லை. இந்த நிலையில், வாக்குப்பதிவு வேறு நெருங்கி விட்டது. தற்போது போட்டி வேட்பாளர்களால் இரு கழகங்களும் தேர்தலில் சரிவை சந்திக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால், கழக கண்மணிகள் கலக்கத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். போட்டி வேட்பாளர்களை எப்படி சமாளிப்பது என்பது தெரியாமல், கதறி வருகிறார்கள்.

இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி போட்டி வேட்பாளர்கள் வெற்றிபெற்றால் அவர்களை வளைக்க பா.ஜ.க. தயாராகி வருகிறது. அவர்களின் மூலம் பேரூராட்சி, நகராட்சி தலைவர் பதவிகளையும், மாநகராட்சி மேயர் பதவியையும் கைப்பற்ற பா.ஜ.க. ஆயத்தமாகி வருகிறது. இதனால், பா.ஜ.க.வினர் ஏக குஷியில் இருக்கிறார்கள்.


Share it if you like it