மனிதன் உலகில் எப்படி வாழ வேண்டும் என்பதை மக்களுள் ஒருவராக வாழ்ந்து உலகத்துக்கு உணர்த்திய அவதாரமே ஸ்ரீ ராமாவதாரம். ராமர் அவதாரம் எடுத்த நாளையே ராம நவமியாக இந்துக்கள் வழிபடுகின்றனர்.
இந்த ராம நவமியானது ‘சுக்ல பட்ச’ அல்லது வளர்பிறையில் இந்து சந்திர ஆண்டின் சித்திரை மாதத்தில் ஒன்பதாம் நாள் வரும் நவமியில் கொண்டாடப்படுகிறது. அதனால் இது சித்திரை மாத சுக்லபட்ச நவமி என்றும் அழைக்கப்படுகிறது.
மேலும் தென்னிந்தியாவில் இந்த ராம நவமி நாளானது இராமன், சீதை ஆகியோரின் திருமண நாளாகவும் கொண்டாடப்படுகிறது.
ராம நவமி பூஜை :-
ராம நவமி அன்று வீட்டில் பூஜை செய்வதற்கு ராமர் போரில் வெற்றி பெற்ற பிறகு பட்டாபிஷேகம் செய்யும் நிகழ்வின் படம் இருந்தால் மிகவும் நல்லது. ராமர், சீதை, லட்சுமண், அனுமன் இருக்கும் படமும் சிறப்பானது.
ராமரின் படத்தை துளசி மாலையினால் அலங்காரம் செய்து ராமருக்கு பிடித்த நெய் வேத்தியம் வைக்கலாம்.
பால் பாயாசம், சர்க்கரை பொங்கல், பானகம் தயாரித்து வழிபடுவது நல்லது. வடை மாலை, துளசி மாலை சாத்தலாம்.
காலையில் வழிபடும் போது ராமாயண புத்தகத்தில் பால காண்டம் படிப்பது நல்லது. குழந்தைக்காக விரதம் இருக்கும் நபர்கள் பால காண்டம், சுந்தர காண்டம் படிக்கலாம்.
மாலையில் ஆறு மணிக்கு மேல் நெய் விளக்கு ஏற்றி ராமரை வழிபட்டு விரதத்தை நிறைவு செய்தால் கை மேல் பலன்கள் கிடைக்கும்.
ராம நவமியை முன்னிட்டு பிரதமர் மோடி எக்ஸ் பதிவில், அயோத்தியில் பிரான் பிரதிஷ்டைக்குப் பிறகு முதல் ராம நவமி ஒரு தலைமுறை மைல்கல் ஆகும், இது நம்பிக்கை மற்றும் முன்னேற்றத்தின் புதிய சகாப்தத்துடன் பல நூற்றாண்டுகளின் பக்தியை ஒன்றிணைக்கிறது. கோடிக்கணக்கான இந்தியர்கள் காத்திருக்கும் நாள் இது. இந்த புனிதமான நோக்கத்திற்காக எண்ணற்ற மக்கள் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தனர்.
பிரபு ஸ்ரீராமின் ஆசீர்வாதம் எப்போதும் நம்மீது இருந்துகொண்டு, நம் வாழ்வில் ஞானத்துடனும் தைரியத்துடனும் ஒளியூட்டி, நீதி மற்றும் அமைதியை நோக்கி நமது பாதைகளை வழிநடத்தட்டும். இவ்வாறு பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
ராம நவமிக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா எக்ஸ் பதிவில்,
ஜெய் ஸ்ரீ ராம்!
அனைவருக்கும் ராமநவமி நல்வாழ்த்துக்கள்.
ஸ்ரீ ராமரின் வாழ்க்கை நீதி, பொது நலம் மற்றும் சுயமரியாதைக்கான போராட்டத்தின் சின்னம். பிரபு தனது வாழ்க்கையின் மூலம் உண்மை மற்றும் தர்மத்திற்கான சுய தியாகத்தின் மிக உயர்ந்த இலட்சியத்தை அமைத்து, யுகங்கள் முழுவதும் முழு உலகையும் வழிநடத்த பாடுபட்டார். 500 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு ராமர் பிறந்தநாளை அவர் பிறந்த மண்ணான கோயிலில் கொண்டாடுவது அனைத்து ராம பக்தர்களுக்கும் பெருமை சேர்க்கும் விஷயம். அனைவரின் நலனுக்காகவும் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ராம நவமியை முன்னிட்டு அண்ணாமலை எக்ஸ் பதிவில்,
ஒழுக்கம் மற்றும் கருணையின் உருவான ஶ்ரீராமபிரான் அவதார தினமான ஶ்ரீராம நவமி, நாடெங்கும் இன்று சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
பகவான் ஸ்ரீ ராமபிரான் அவதரித்த இந்த நன்னாளில், அனைவருக்கும் ஶ்ரீ ராமபிரானின் அருளும் ஆசியும் குறைவின்றி கிடைக்கவும், அனைவரின் வாழ்விலும் அமைதியும், மகிழ்ச்சியும், வளமும் கிடைக்கவும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.