வீரத்தின் அடையாளமாக விளங்கியவர் தீரன் சின்னமலை !

வீரத்தின் அடையாளமாக விளங்கியவர் தீரன் சின்னமலை !

Share it if you like it

சிலம்பாட்டம், தடிவரிசை, மல்யுத்தம், வில்வித்தை, வாள்வீச்சு என அத்தனை வீரவிளையாட்டுகளிலும் நிபுணத்துவம் பெற்றிருந்தார் அந்த இளைஞன். தனது வீரத்தாலும், அசாத்திய திறமைகளாலும் தன் சொந்த ஊரான மேலப்பாளையத்தையும் தாண்டி அவரது பெயர் பரவத்தொடங்கியது. ஈரோடு, காங்கேயம், சென்னிமலை, சங்ககிரி என கொங்கு மண்டலத்தில் ஒலிக்கத் தொடங்கிய அந்த வீரக்குரல், ஒருகட்டத்தில் இந்தியாவையே கட்டியாண்ட ஆங்கிலேயரையே அதிரச் செய்தது. அந்த விடுதலை வீரரின் பெயர் தீரன் சின்னமலை.

தீரன் சின்னமலை, இந்திய சுதந்திர போராட்ட வீரர். தமிழகத்தில் பிரிட்டிஷ்காரரை எதிர்த்து, கருப்ப சேர்வையுடன் இணைந்து போரிட்டவர்களுள் ஒருவர். இவர் இன்றைய திருப்பூர் மாவட்டம் காங்கயம் வட்டம் சென்னிமலை அருகே உள்ள செ.மேலப்பாளையம் எனும் ஊரில் 1756ம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி பிறந்தவர். இவரது தந்தை ரத்னசாமி கவுண்டர், தாய் பெரியாத்தா ஆவர். தீரன் சின்னமலையின் உண்மையான பெயர் தீர்த்தகிரி கவுண்டர் என்பதாகும்.

‘தீர்த்தகிரி’ என்ற இவரது இயற்பெயர் ‘சின்னமலை’ என மாற்றம் அடைந்ததற்கு சில வரலாறுகள் கூறப்படுகின்றன. கொங்கு மண்டலம் முழுவதும் மைசூர் பேரரசின் ஆளுமைக்குள் இருந்த நேரம். மைசூர் அரசால், மக்களிடம் இருந்து வசூலிக்கப்படும் வரிப்பணம் சங்ககிரி வழியாக கொண்டு செல்லப்பட்டது. அப்போது, வேட்டையில் ஈடுபட்டிருந்த தீர்த்தகிரி, அப்பணத்தை பறித்து ஏழை மக்களுக்கு கொடுத்தாராம். வரிப்பணத்தைக் கொண்டு சென்ற தண்டல்காரனிடம், ‘சென்னிமலைக்கும், சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்ததாகச் சொல்’, எனக் கூறினாராம். அன்றிலிருந்து, தீர்த்தகிரி ‘சின்னமலை’ என அழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதை அடுத்து 1801 ஆம் ஆண்டு பவானி ஆற்றங்கரையில் நடைபெற்ற போரில் ஆங்கிலேய படைகளை வெற்றி கொண்டது தீரன் சின்னமலையின் கொங்கு படைகள். 1802 ஆம் ஆண்டு சென்னிமலை, சிவன்மலை போரிலும், 1804 அரச்சலூரில் உள்ள ஆங்கிலேய படையையும் வென்று வெற்றி வாகை சூடினார் தீரன் சின்னமலை.

திப்பு சுல்தானின் பீரங்கி படைகளோடு இணைந்து ஆங்கிலேய படைகளை கலங்கடித்த தீரன் சின்னமலையை பார்த்து பயந்த ஆங்கிலேய படைகள் சூழ்ச்சி செய்து தீரன் சின்னமலையும் அவரது சகோதரரையும் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து சங்ககிரியில் வைத்து ஆங்கிலேய படைகளால் ஆகஸ்ட் 3ஆம் தேதி தூக்கில் ஏற்றப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

இவரின் வீரத்தை பாராட்டி தமிழக அரசு இவருக்கு சென்னையில் ஒரு சிலையும், ஈரோடு, கோவை உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு அரசு கட்டிடங்கள் மற்றும் பகுதிகளும் இவர் பெயரும் சூட்டப்பட்டுள்ளது. இவரது ஓடாநிலை கோட்டை மற்றும் இவர் கொல்லப்பட்ட சங்ககிரி ஆகிய இடங்களில் அரசு சார்பில் இவருக்கு நினைவு மண்டபம் கட்டி நிர்வகித்து வருகிறது. இந்திய அரசு இவரின் தபால் தலையை வெளியிட்டு இவரை கௌரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it