பாரத பிரதமர் மோடி முரட்டுத்தனமானவர் என்று நினைத்தேன். ஆனால், அவர் மனிதநேயமிக்கவர் என்று காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் நெகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா்களில் குறிப்பிடத்தக்கவர் குலாம் நபி ஆசாத். தலைவர் சோனியா காந்திக்கு ஆலோசனை வழங்குவது, கட்சிப் பிரச்னைகளை தீர்ப்பது என மிகவும் பக்கபலமாக இருந்த இவர், திடீரென காங்கிரஸ் தலைமை மீது மிகவும் அதிருப்தியடைந்தார். காந்தி குடும்பத்திடமிருந்து கட்சியின் தலைமை பதவியை மாற்ற வேண்டும் என்று குரல் கொடுத்தார். இதன் காரணமாக, காங்கிரஸ் தலைமையால் ஓரம்கட்டப்பட்டார். இந்த சூழலில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு திடீரென கட்சியின் அடிப்படை உறுப்பினா் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார். இது தொடா்பாக, கட்சியின் தலைவா் சோனியா காந்திக்கும் கடிதம் எழுதினார். அக்கடிதத்தில், ராகுல் காந்தி மீது ஏராளமான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தவர், கட்சியின் கட்டமைப்பை ராகுல் காந்திதான் சீா்குலைத்து விட்டதாக பகிரங்கமாக குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், டெல்லியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த குலாம் நபி ஆசாத், “காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேற மோடியை காரணமாகக் கூறுவது சாக்குபோக்கு. காங்கிரஸ் தலைமை குறித்து ஜி-23 கடிதம் எழுதப்பட்டதில் இருந்தே, தலைமைக்கும் என்னிடம் பிரச்னை இருந்து வந்தது. காரணம், சோனியா குடும்பத்தை பற்றி யாரும் கடிதம் எழுதுவதையோ, கேள்வி எழுப்புவதையோ, அவர்கள் எப்போதும் விரும்பவில்லை. இதுவரை பல காங்கிரஸ் கூட்டங்கள் நடந்தன. ஆனால், ஒரு முடிவுகூட எடுக்கப்படவில்லை. தவிர, காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேற வேண்டிய கட்டாயத்துக்கு உட்படுத்தினார்கள். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எனது நண்பர்கள் சிலரே என்னைப் பற்றிய குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியில் விரோதிகள் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். 30 ஆண்டுகளுக்கு முன்பு சோனியா காந்தி மீது எனக்கு இருந்த மரியாதை, ராகுல் காந்தி மீதான மரியாதை இன்னும் அப்படியே இருக்கிறது.
தனிப்பட்ட முறையில் ராகுல் காந்தியின் நீண்ட ஆயுளுக்காக நான் பிரார்த்திக்கிறேன். ராகுலை வெற்றிகரமான தலைவராக உருவாக்க முயற்சித்தோம். ஆனால், அவருக்கு ஆர்வம் இல்லை. பா.ஜ.க.வில் இணையப் போவதில்லை. இன்னும் 10 நாள்களில் புதிய கட்சி தொடங்கப் போகிறேன். பிரதமர் மோடியை முரட்டுத்தனமானர் என்றுதான் நினைத்தேன். ஆனால் அவர் மிகவும் மனிதநேயம் மிக்கவர். நான் ஜம்மு காஷ்மீர் முதல்வராக இருந்தபோது, சுற்றுலா வந்த குஜராத் பயணிகள் மீது பயங்கரவாத தாக்குதல் நடந்தது. அப்போது, குஜராத் முதல்வராக இருந்த மோடி என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். அந்த கொடூர தாக்குதலை எண்ணி நான் கண்கலங்கியதை அவர் உணர்ந்து கொண்டார். நான் அதுவரை மோடியை முரட்டுத்தனமானவர் என்றுதான் நினைத்திருந்தேன்.
ஆனால், உயிரிழந்தவர்கள் மீது அவர் காட்டிய கரிசனத்தைப் பார்த்துத்தான் அவரது மனிதநேயத்தை தெரிந்து கொண்டேன். மாநிலங்களவை பிரிவுபசார விழாவின்போது இதை நினைத்துத்தான் மோடி கண்கலங்கினார். மற்றபடி எனது பதவி முடிவடைகிறதே என்பதற்காக அல்ல. தவிர, நாடாளுமன்றத்தில் மோடியை கட்டித்தழுவியது ராகுல் காந்திதானே தவிர, நானல்ல” என்று கூறியிருக்கிறார். பாரத பிரதமர் மோடியைப் பற்றி குலாம் நபி ஆசாத் பெருமையாகப் பேசியிருக்கும் விவகாரம் நாட்டு மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது.