ஜம்மு காஷ்மீர் மாநில காங்கிரஸ் கட்சியின் பிரசாரக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்ட, அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், சில மணி நேரங்களிலேயே தனது பதவியை ராஜினாமா செய்திருக்கும் விவகாரம், அக்கட்சியினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் குலாம் நபி ஆசாத். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முதல்வர் மற்றும் மத்திய அமைச்சர் ஆகிய பதவிகளை வகித்தவர். மேலும், கட்சியின் அகில இந்திய அரசியல் விவகாரக் குழு உறுப்பினராகவும் பதவி வகித்து வந்தார். மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகித்து வந்த இவருக்கு, இந்த முறை ராஜ்யசபா எம்.பி. சீட் வழங்கவில்லை. இதனால், கடந்த ஓராண்டுகளுக்கும் மேலாகவே காங்கிரஸ் தலைமை மீது கடும் அதிருப்தியில் இருந்து வருகிறார். இதனை பலமுறை வெளிப்படையாகவும் அறிவித்திருக்கிறார். அதேபோல, காந்தி குடும்பத்தாரிடமிருந்து காங்கிரஸ் கட்சியின் தலைமை மாற்ற வேண்டும் என்று சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய காங்கிரஸ் தலைவர்களில் இவரும் ஒருவர்.
இந்த நிலையில், பா.ஜ.க.வின் போட்டியை சமாளிக்கும் வகையில், காங்கிரஸ் கட்சியில் சில மாற்றங்களை செய்ய முடிவு செய்தார் சோனியா காந்தி. அதன்படி, பிரசாரக் குழுவின் நேற்று சில மாற்றங்கள் செய்யப்பட்டது. இதில், மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத்தை ஜம்மு காஷ்மீர் மாநில பிரசாரக் குழுத் தலைவராக நியமித்தது காங்கிரஸ் தலைமை. இது தன்னை சிறுமைப்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி, ஆத்திரம் பிளஸ் அதிருப்தியடைந்த குலாம் நபி ஆசாத், அடுத்த சில மணி நேரங்களிலேயே தனது பிரசாரக் குழுத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அதோடு, அகில இந்திய அரசியல் விவகாரக் குழு உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்து விட்டார். இதுதான் கட்சியினர் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், சலசலப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.