100 ரூபாய்க்காக தி.மு.க.வை கொள்ளையடிக்கும் கட்சி என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மறைமுகமாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பொதுவாகவே, தி.மு.க. தலைவர்களை விஞ்ஞானப்பூர்வ ஊழல் செய்பவர்கள் என்று அரசியல்வாதிகள் முதல் பொதுமக்கள் வரை குறிப்பிடுவது வழக்கம். காரணம், தி.மு.க. ஆட்சியில் அந்தளவுக்கு ஊழல்கள் அரங்கேறும். ஆனால், ஊழல் நடந்ததுபோல தெரியாமல் மறைத்து விடுவார்கள். தி.மு.க. தலைவர்கள் பலரும் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருந்து தற்போது கோடீஸ்வரர்களாக மாறி இருப்பதே இதற்கு உதாரணம். இந்த சூழலில்தான், தி.மு.க. கொள்ளையடிக்கும் கட்சி என்று காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் மறைமுகமாகக் கூறியிருக்கிறார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளின் கூட்டம் கடந்த 1-ம் தேதி நடந்தது. இக்கூட்டத்தில் ப.சிதம்பரம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார். அப்போது, கூட்டத்தில் கலந்துகொண்ட நிர்வாகி ஒருவர் எழுந்து, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தி.மு.க. நிர்வாகிகளுக்கு தலா 1,000 ரூபாய் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, தற்போது எம்.பி.யாக இருக்கும் கார்த்தி சிதம்பரம், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்கு தலா 100 ரூபாயாவது கொடுத்திருக்கலாமே என்று கேள்வி எழுப்பினார். இதை சற்றும் எதிர்பாராத ப.சிதம்பரம் உடனே சுதாரித்துக் கொண்டு, கொள்ளையடித்தால் கொடுக்கலாம். அல்லது எம்.பி. நிதியில் செய்யப்படும் பணிகளை கான்ட்ராக்ட் எடுத்து, 10 சதவிகிதம் கமிஷன் வாங்கினால் கொடுக்கலாம். என்னையும் அப்படி செய்யச் சொல்கிறீர்களா? என்று பட்டென கேட்டிருக்கிறார்.
அதாவது, தி.மு.க.வினர் கொள்ளையடிக்கிறார்கள், கான்ட்ராக்டர்களிடம் கமிஷன் வாங்குகிறார்கள் என்று மறைமுகமாகக் குறிப்பிட்டிருக்கிறார் ப.சிதம்பரம். ஆனாலும், அசராத அந்த நிர்வாகி, பிறகு காங்கிரஸ் நிர்வாகிகளின் வறுமை எப்படிப் போகும் என்று மீண்டும் கேள்வி எழுப்ப, அப்படியானால் தப்புதான் செய்யணும் என்று மறுபடியும் தி.மு.க.வினரை போட்டு தாக்கி இருக்கிறார் ப.சிதம்பரம். அப்போது கூட்டத்திலிருந்த பெண் நிர்வாகி ஒருவர், உங்க அளவுக்கு கார்த்தி சிதம்பரத்துக்கு அனுபவம் போதவில்லை என்று கூறி, கூட்டத்தினர் அனைவரும் சிரிக்க, ப.சிதம்பரமும் சிரித்து சமாளித்தார். சிதம்பரம் இவ்வாறு பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதை பார்த்துவிட்டு தி.மு.க.வினர் திகைத்துப் போய் இருக்கிறார்கள்.