எம்.பி.யாக எனக்கு தகுதி இல்லையா? காங். மீது நடிகை நக்மா பாய்ச்சல்!

எம்.பி.யாக எனக்கு தகுதி இல்லையா? காங். மீது நடிகை நக்மா பாய்ச்சல்!

Share it if you like it

மாநிலங்களவை எம்.பி.யாக எனக்குத் தகுதி இல்லையா? என்று காங்கிரஸ் தலைமை மீது பாய்ந்திருக்கிறார் நடிகை நக்மா.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் நர்மதா சாதனா என்கிற நக்மா. இவர், நடிகை ஜோதிகாவின் சகோதரியாவர். தமிழில் ரஜினி நடித்த பாட்ஷா, பிரபுதேவா நடித்த காதலன் படத்தின் மூலம் பிரபலமானவர். தவிர, இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பெங்காளி, போஜ்பூரி, பஞ்சாபி, மராத்தி ஆகிய மொழி திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். நக்மா, 2003-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். தற்போது மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளராக இருந்து வருகிறார். கடந்த 18 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் இருந்துவரும் நக்மாவுக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி தரவில்லை. இதுதான் நக்மாவை கொந்தளிக்க வைத்திருக்கிறது.

அதாவது, மாநிலங்களவை எம்.பி.யாக இருந்த 57 பேரின் பதவிகாலம் நிறைவடைந்து விட்டது. இதையொட்டி, ஜூன் 10-ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. அந்த வகையில், காங்கிரஸ் கட்சிக்கு 16 எம்.பி. பதவி கிடைக்கும். இதையடுத்து, காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை கட்சித் தலைமை நேற்று வெளியிடப்பட்டது. இப்பட்டியலில். தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், கர்நாடகாவைச் சேர்ந்த ஜெய்ராம் ரமேஷ், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ரண்தீப் சிங் சுர்ஜேவாலா, முகுல் வாஸ்னிக், பிரமோத் திவாரி, மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த விவேக் தன்கா, சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ராஜீ சுக்லா, ரஞ்சித் ரஞ்சன், ஹாரியானா மாநிலத்தைச் சேர்ந்த அஜய் மாக்கன், மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இம்ரான் பிரதாப்கரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த பட்டியலை பார்த்துவிட்டுத்தான், காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலங்களை தேர்தலில் போட்டியிட தனக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை? எனக்கு அந்தத் தகுதி இல்லையா? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார் நடிகையும், மகிளா காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளருமான நக்மா. இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “நான் கடந்த 2003 – 04-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தபோது மாநிலங்களவை எம்.பி. வாய்ப்பு தரப்படும் என்று தலைவர் சோனியா காந்தி உறுதி அளித்திருந்தார். அப்போது காங்கிரஸ் ஆட்சியில் இல்லை. ஆனால், 18 வருடங்கள் கடந்த பிறகும் எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. அதேசமயம், இம்ரானுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. ஏன் எனக்கு மாநிலங்களவை உறுப்பினராகும் தகுதி இல்லையா?” என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். இவரது இந்த ட்விட்டர் பதிவுதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it