ராகுல்காந்திக்கு பிரிவினைவாதத்தின் தலைவர் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை புதிய பெயர் சூட்டி இருப்பது வரவேற்பை பெற்றிருக்கிறது.
தமிழக முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினின் சுயசரிதையான ‘உங்களில் ஒருவன்’ புத்தக வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இவ்விழாவில் பங்கேற்க மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கேரள முதல்வர் பிணராயி விஜயன், அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. விழாவில் புத்தகத்தை வெளியிட்டு பேசிய ராகுல் காந்தி, தமிழகம் பற்றி நாடாளுமன்றத்தில் பலமுறை பேசியது குறித்து குறிப்பிட்டவர், டாக்டர் அம்பேத்கர் அளித்த விளக்கங்களுக்கு நேர்மாறாக, மாநிலங்கள் ஒன்றிணைந்து இந்தியாவை உருவாக்கியதாக கூறினார். மேலும், பிரதமர் நரேந்திர மோடி இங்கு வரும்போது, தனது கருத்தை தமிழக மக்கள் மீது திணிக்க முயற்சிக்கிறார் என்றும் குற்றம்சாட்டினார்.
ராகுல் காந்தியின் கருத்துக்களுக்கு பதிலளித்திருக்கும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, ராகுல் காந்தி கூறியதுபோல் மாநிலங்கள் ஒன்றிணைந்து இந்திய ஒன்றியத்தை உருவாக்கவில்லை. மாறாக, நிர்வாகக் காரணங்களுக்காக இந்தியாதான் மாநிலங்களை உருவாக்கியது என்று விளக்கம் அளித்திருக்கிறார். மேலும், தி.மு.க.வுடன் கூட்டணி வைத்திருக்கும் காங்கிரஸ் கட்சி, கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்தது முதல், இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதுவரை சுட்டிக்காட்டி, தமிழ் மக்களின் நலன்களுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி எவ்வாறெல்லாம் செயல்பட்டது என்பது தெளிவுபடுத்தி இருந்தார்.
மேலும், ராகுல் காந்தியை இந்தியாவின் பிரிவினைவாதத் தலைவர் என்று குறிப்பிட்டிருக்கும் அண்ணாமலை, காங்கிரஸ் தலைவர் குக்கரி ஷோவில் நேரத்தைச் செலவழித்திருக்க வேண்டும் என்றும் கிண்டல் செய்திருக்கிறார். தவிர, காங்கிரஸ் தலைவர் எதற்காவது தீர்வுகாண விரும்பினால், உட்கட்சிப் பூசலை தமிழக காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் தீர்த்து வைக்க முயற்சி செய்யலாம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.