ஏற்கெனவே ஜம்மு காஷ்மீர் இல்லாத இந்திய வரைபடத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசிதரூர், மீண்டும் அப்படியொரு வரைபடத்தை வெளியிட்டு மறுபடியும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் சசிதரூர். சர்ச்சைகளுக்கு பேர்போனவர். மத்திய அமைச்சராக இருந்த இவருக்கு 3 மனைவிகள். ஏற்கெனவே 2 பேரை திருமணம் செய்து விவாகரத்து செய்து விட்டார். 3-வதாக பெண் தொழிலதிபரான சுனந்த புஷ்கரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனிடையே, பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பெண் நிருபர் மெகர் தரர் என்பவருடன் ரகசிய தொடர்பு இருப்பதாக மனைவியால் குற்றம்சாட்டப்பட்டு சர்ச்சையில் சிக்கினார். இச்சம்பவம் நடந்த 2 நாட்களுக்குப் பிறகு சுனந்தா புஷ்கர் மர்மமான முறையில் இறந்தார். சசிதரூர்தான் கொலை செய்து விட்டதாக சர்ச்சையில் சிக்கினார். 2020-ல் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்டம் நடந்தபோது, ஜம்மு காஷ்மீர் மாநிலம் இல்லாத இந்திய வரைபடத்தை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பினார்.
இந்த நிலையில், மீண்டும் ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்கள் இல்லாத இந்திய வரைபடத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். அதாவது, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு 22 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தல் நடக்கவிருக்கிறது. எதிர்வரும் 17-ம் தேதி நடக்கவிருக்கும் இத்தேர்தலில் திருவனந்தபுரம் எம்.பி.யான சசிதரூரும் போட்டியிடுகிறார். இதையொட்டி, தனது தேர்தல் விளம்பரங்களில் இந்திய வரைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். இந்த வரைபடத்தில்தான் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்கள் இடம்பெறவில்லை. இதுதான் மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையடுத்து, பா.ஜ.க.வினர் சமூக வலைத்தள பக்கங்களில் சசிதரூர் வெளியிட்ட தவறான இந்திய வரைப்படத்தை பகிர்ந்து கடும் கண்டனங்களை பகிர்ந்து வருகின்றனர். மேலும், ராகுல் காந்தி ‘பாரத் ஜோடோ’ என்கிற இந்திய ஒற்றுமை யாத்திரையை நடத்திவரும் நிலையில், காங்கிரஸ் கட்சியும், அதன் தலைவர்களும் இந்தியாவை பிரிக்கும் வேலையை செய்து வருவதாக விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர். இது மிகப்பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில், சசிதரூர் வரைபடத்தை மாற்றி விட்டார். மேலும், இது தொடர்பாக ட்விட்டரில் மன்னிப்புக் கோரி வெளியிட்டிருக்கும் விளக்கப் பதிவில், “இது உள்நோக்கத்துடன் செய்யப்பட்ட விஷயம் அல்ல. எங்கள் தொண்டர் குழுவின் தவறால் நிகழ்ந்தது. தவறு தெரிந்ததும் உடனே திருத்தப்பட்டு சரி செய்யப்பட்டது. இந்த தவறுக்கு நான் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோருகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.