ஆம் ஆத்மியின் புகைப்படத்தை காங்கிரஸ் கட்சி எடுத்துக் கொண்டதாக அக்கட்சியை சேர்ந்த தொண்டர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தொடர் தோல்விகளை அடுத்து காங்கிரஸ் கட்சி மெல்ல மெல்ல இந்தியாவில் கரைந்து வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு எப்படியாவது கட்சியை மீட்க வேண்டும் என காங்கிரஸ் மேலிடம் தீவிரமாக முயன்று வருகிறது. அந்தவகையில், வருகிற செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை ‛பாரத் ஜோடோ யாத்திரை’ (இந்திய ஒற்றுமை நடைபயணம்) எனும் பெயரில் யாத்திரை செல்ல ராகுல் காந்தி முடிவு செய்து இருக்கிறார். அந்த வகையில், 150 நாட்களில் 3,500 கிலோ மீட்டர் தூரம் செல்ல இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
இதற்கான, ஆயத்த பணிகளை அக்கட்சியை சேர்ந்த மூத்த நிர்வாகிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில், யாத்திரைக்கான லோகோ, அடையாள முழக்கங்கள் மற்றும் தீம் பாடலை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் இன்று டெல்லியில் வெளியிட்டனர்.
இதுகுறித்தான, கூடுதல் விவரங்களை காங்கிரஸ் தனது அதிகாரப்பூர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறது. ‛எந்தக் குரலும் மவுனமாகாத, இளைஞர்கள் வேலைக்காக கை ஏந்தாத, பொருளாதாரம் சீர்குலைந்து போகாத, பன்முகத்தன்மை கொண்டாடப்படும், சமத்துவம் உறுதி செய்யப்படும் இந்தியாவை, நாங்கள் கனவு காண்கிறோம். இந்த யாத்திரையில் கலந்து கொள்ள வேண்டி அனைவருக்கும் காங்கிரஸ் அழைப்பு விடுத்து இருக்கிறது.
இந்த நிலையில் தான், காங்கிரஸ் கட்சி வெளியிட்டு இருக்கும் புகைப்படம் எங்களுடையது என ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த தொண்டர்கள் காங்கிரஸை சமூக வலைத்தளங்களில் வறுத்தெடுத்து வருகின்றனர்.