ஆட்சி மோகத்தால் நாட்டை கூறு போட நினைக்கிறது காங்கிரஸ் – பிரதமர் மோடி குற்றச்சாட்டு !

ஆட்சி மோகத்தால் நாட்டை கூறு போட நினைக்கிறது காங்கிரஸ் – பிரதமர் மோடி குற்றச்சாட்டு !

Share it if you like it

ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். முதலில் நேற்று காலையில் தெலங்கானாவின் வாரங்கல் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அதன் பின்னர், அங்கிருந்து விமானம் மூலம் ரேணிகுண்டா விமான நிலையம் வந்த அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருப்பதியை அடுத்த அன்னமைய்யா மாவட்டம், கலிகிரி சென்றார். அங்கு பாஜக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், ராஜம்பேட்டை தொகுதி வேட்பாளரும் முன்னாள் ஆந்திர முதல்வருமான கிரண்குமார் ரெட்டி மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

திருப்பதி மற்றும் சித்தூரில் இருந்து வந்த அனைவருக்கும் நன்றி. இந்த மாவட்டத்தில் பல புண்ணிய திருத்தலங்கள், திறமை மிக்க மாணவர்கள் உள்ளனர். இப்பகுதியில் விவசாயம் செழிப்பாக இருந்தும், வேலை வாய்ப்புக்காக வேறு மாநிலங்களை தேடிச் செல்லும் நிலை உள்ளது. இதனால்தான் ஆந்திராவில் இரட்டை இன்ஜின் அரசு வர வேண்டும்.

கடந்த தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸுக்கு ஆதரவு அளித்தீர்கள். ஆனால், அவர்கள் மாநிலத்தை பின்னோக்கி அழைத்துச்சென்று விட்டனர். இங்குள்ள அமைச்சர்களே ரவுடிகள் போல் நடந்து கொள்கின்றனர்.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் அழிவு ஆரம்பம் ஆகி விட்டது. போலாவரம் அணை கட்டுவதை மணல் மாஃபியாக்கள் நிறுத்தி விட்டனர். பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் அனைத்து தரப்பினருக்கும் நல்ல திட்டங்கள் வீடு தேடி வரும்.

பகல், இரவு பாராமல் நான் பணியாற்றுகிறேன். ஆனால் காங்கிரஸ் ரிவர்ஸ் கியரில் பணியாற்றுகிறது. இதுபோன்ற கட்சியை நீங்கள் ஆதரிப்பீர்களா? இந்த மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டதற்கு காங்கிரஸ்தான் காரணம்.

காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற மோகத்தால் நாட்டை கூறு போட நினைக்கிறது. அதாவது வடக்கு, தெற்கு என பிரிவினை செய்ய காங்கிரஸ் நினைக்கிறது. இந்த சதித் திட்டத்தை நாம் முறியடிக்க வேண்டும்.

நந்தியாலம்-எர்ரகுண்டலா ரயில்வே பாதை நிறைவு செய்யப்பட்டது. கடப்பா-பெங்களூரு ரயில்வே பாதை அமைக்கப்படும். கடப்பா விமான நிலையம் கட்டப்படும். விரைவில் தென்னிந்தியாவில் புல்லட் ரயில் வரப்போகிறது. அதுவும் ஆந்திராவில் பயணிக்க போகிறது.

ராயலசீமாவில் விவசாயிகளின் நலன்மேம்படுத்தப்படும். இங்கு தக்காளி அதிகமாக பயிரிப்படுகிறது. புலிவேந்துலாவில் வாழை அதிகம் பயிரிடப்படுகிறது. இதனால் பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் இவை அனைத்தும் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


Share it if you like it