நேற்று விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்தில் 5 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சிவகாசி அரசு மருத்துவமனை தீக்காய சிகிச்சை பிரிவில் போதிய வசதிகள் இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், கடந்த 9 வருடங்களாக தீக்காய சிகிச்சை பிரிவை மேம்படுத்துவதற்கு தமிழக சுகாதாரத்துறை 1 ரூபாய் கூட செலவிடவில்லை என, புதிய தலைமுறை சார்பில் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெற்ற தரவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும், சுமார் 1087 பட்டாசு ஆலைகளும், 2963 பட்டாசு கடைகளிலும், நூற்றுக்கும் மேற்பட்ட தீப்பெட்டி தொழிற்சாலைகளும் இயங்கி வருகிறது. இவ்வாறு இயங்கி வருபவற்றில் விதிமீறல்கள் காரணமாக, ஆண்டுதோறும் 5 முதல் 10 விபத்துகள் நடைபெறுவது வாடிக்கையாகிவிட்டது.
இத்தகைய சூழலில், சிவகாசி அரசு மருத்துவமனையில் உள்ள தீக்காய சிகிச்சை பிரிவில் போதிய வசதிகள் இல்லை எனவும், இதன்காரணமாகவே, விபத்துகளில் தீக்காயம் அடைபவர்கள் மதுரை அரசு மருத்துவமனை அல்லது தனியார் மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பப்படுகிறார்கள் எனவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம், வெளிவந்த தகவலின்படி, “கடந்த 2015 முதல் கடந்த மார்ச் 10 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில், சிவகாசி அரசு மருத்துவமனையில் தீக்காயத்தோடு சுமார் 206 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 45 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 36 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இக்காலக்கட்டத்தில், சிவகாசி அரசு மருத்துவமனை தீக்காய சிகிச்சை பிரிவை மேம்படுத்த எந்த நிதியும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை” என்று தெரியவந்துள்ளது.
சமீபத்தில் 2024 பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி சிவகாசி அருகே வெம்பக்கோட்டையில் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 10க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பட்டாசு ஆலை வெடி விபத்துகளில் சில :-
25 பிப்ரவரி 2021 சிவகாசி அடுத்த காளையர்குறிச்சி பகுதியில், தங்கராஜ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில், நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வந்த நிலையில், இன்று மாலை பட்டாசு உற்பத்தியின்போது ஏற்பட்ட உராய்வின் காரணமாக திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியான நிலையில், 14 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
5 ஏப்ரல் 2021 அன்று சிவகாசி-ஆலங்குளம் சாலையில் துரைசாமிபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையில் விபத்து ஏற்பட்டது. இந்த அலகு பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பால் உரிமம் பெற்றது. காலையில் வேலை செய்யும் கொட்டகையில் தொழிலாளர்கள் ரசாயனங்களை கலக்கிக் கொண்டிருந்த போது வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் தர்மலிங்கம் (40) என்ற தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த 2 தொழிலாளர்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
5 ஜனவரி 2022 விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள மஞ்சள் ஓடைபட்டி எனும் கிராமத்தில் தனியார் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஆலையில் தொழிலாளர்கள் வழக்கம் போல வெடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில், அதற்கான மருந்து தயாரிப்பின் போது உராய்வின் காரணமாக திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் மருந்து தயார் செய்ய பயன்படுத்தப்பட்ட கட்டிடம் தரைமட்டமாகியது.
மேலும், இந்த வெடி விபத்தில் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த 2 தொழிலாளர்கள் பலியாகியுள்ளதாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றன. படுகாயம் அடைந்துள்ள 7 தொழிலாளர்கள் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டது.
25 ஜூலை 2023 அன்று விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி பகுதியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்தனர்.
18 மே 2023 அன்று சிவகாசி அருகே ஊராம்பட்டி பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி மூன்று பேர் உயரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
17 அக்டோபர் 2023 அன்று விருதுநகர் மாவட்டம் ரெங்காபாளையம் கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 13 பேர் உயிரிழந்ததாக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்த நிலையில், காயம் அடைந்த 8 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதேபோல் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கிச்சநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் நண்பகல் வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி தொழிலாளர் ஒருவர் உயிரிழந்தார். வெடி தயாரிக்கும்போது உராய்வு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டதாக காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 2019 முதல் தற்போது வரை 64 முறை பட்டாசு ஆலை விபத்துக்கள் நடந்து இருப்பதாகவும் இதில் 131 பேர் உயிரிழந்து இருப்பதாகவும், 146 பேர் காயமடைந்து இருப்பதாகவும் விருதுநகர் மாவட்ட எஸ்.பி அறிக்கை சமர்ப்பித்தார். இதன்மூலம் விருதுநகர் மாவட்டத்தில் இத்தனை ஆண்டுகளில் எத்தனை பட்டாசு வெடி விபத்துக்கள் நடந்துள்ளது என தெரிய வந்துள்ளது.
சிவகாசியில் பட்டாசுக்கள் தயாரிப்பதுதான் அங்குள்ள மக்களின் பிரதான வேலை. அவ்வாறு இருக்கையில் அசம்பாவிதங்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. உண்மையில் பட்டாசு ஆலைகளில் வேலை செய்யும் மக்களின் மீது முதல்வர் ஸ்டாலினுக்கு அக்கறை இருந்தால் அன்றாடம் நிகழும் வெடி விபத்துகளை தடுக்கவும் தவிர்க்கவும் நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனால் மக்களை பற்றி நினைப்பதற்கெல்லாம் முதல்வர் ஸ்டாலினுக்கு நேரமில்லை. ஆனால் கொடைக்கானலில் ஓய்வெடுக்கவும் கோல்ப் மைதானத்தில் விளையாடவும் மட்டும் நேரம் இருக்கு. எத்தனை எத்தனை உயிர்கள் பரிதாபமாக பட்டாசு ஆலை விபத்தினால் பறிபோகி உள்ளது. கண்முன்னே இத்தனை விபத்துகளை பார்த்த பிறகும் எப்படி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்க முடிகிறது. இவ்வாறு சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் முதல்வர் ஸ்டாலினை வறுத்தெடுத்து வருகின்றனர்.