பிரதமர் நரேந்திர மோடியின் நச்சுப் பேச்சு கேவலமானது. தனது தோல்விகளால், மக்களிடம் எழுந்துள்ள கோபத்திற்கு அஞ்சி, மத உணர்வுகளைத் தூண்டிவிட்டு, வெறுப்பூட்டும் பேச்சை நாடியுள்ளார். வெறுப்பும் பாகுபாடும்தான் மோடியின் உண்மையான உத்தரவாதம். பிரதமர் மோடியின் அப்பட்டமான வெறுப்புப் பேச்சுக்கு காதை மூடிக்கொண்ட தேர்தல் ஆணையம், வெட்கமின்றி நடுநிலைமையை கைவிட்டுள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார். இதற்கு பதிலடி தரும் விதமாக பாஜக மாநில துணை தலைவர், அப்பட்டமான ஹிந்து மத வெறுப்பை நெஞ்சிலே சுமந்து கொண்டு, அரசியல் ஆதாயத்திற்காக வெட்கமின்றி போலி மதசார்பின்மை பேசும் மு.க.ஸ்டாலின் மோடியை விமர்சிப்பதா? என நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக நாராயணன் திருப்பதி எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :-
எது நச்சுப்பேச்சு? எது கேவலமான பேச்சு? எது நடுநிலைமை?
ஓட்டுக்காக, அது தரும் பதவிக்காக, அந்த பதவி தரும் சுகத்திற்காக, சிறுபான்மை மதத்தை சார்ந்தவர்களின் ஓட்டுக்களை பெறுவதற்காக, ஹிந்து என்றால் திருடன் என்று சொன்னவர்கள், ஹிந்து பெண்களை விபச்சாரிகள் என்று ஹிந்து மதம் சொல்கிறது என்று சொன்னவர்கள், சொல்லிக்கொண்டிருப்பவர்கள், குங்குமத்தை பார்த்து நெற்றியில் என்ன ரத்தம் என்று கேட்டவர்கள், கோவில்களில் அசிங்கமான பொம்மைகள் இருக்கின்றன என்றவர்களோடு கூட்டணி வைத்திருப்பவர்கள், ராமன் எந்த கல்லூரியில் படித்தான் என்று எகத்தாளம் செய்தவர்கள், சனாதன தர்மத்தை (ஹிந்து மதத்தை) அழிப்பேன் என்று கொக்கரித்தவர்கள், ரம்ஜானுக்கும், கிருஸ்துமஸுக்கும் வாழ்த்து சொல்லி புளகாங்கிதம் அடைந்து, தீபாவளிக்கு வாழ்த்து சொல்வதை வெறுப்பவர்கள், விநாயகரை கொண்டாட தடை விதிப்பவர்கள், ராமன் ஒரு கற்பனை கதாபாத்திரம் என்றவர்கள், பகவான் கிருஷ்ணரை கேவலமாக பேசியவர்களோடு கொஞ்சி குலாவுபவர்கள் என அப்பட்டமான ஹிந்து மத வெறுப்பை நெஞ்சிலே சுமந்து கொண்டு, அரசியல் ஆதாயத்திற்காக வெட்கமின்றி போலி மதசார்பின்மை பேசும் மதவாத, ஹிந்து விரோத மு.க.ஸ்டாலின்
நரேந்திர மோடியை விமர்சிப்பதா? இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.