சி.எஸ்.ஐ. திருமண்டல பேராயர் மற்றும் பிரதம பேராயரை நிர்வாகிகளும், திருச்சபையைச் சார்ந்த மக்களும் விரட்டியடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சர்ச் ஆஃப் சவுத் இந்தியா (சி.எஸ்.ஐ.) எனப்படும் தென்னிந்திய திருச்சபை 24 திருமண்டலங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது. இது தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் இலங்கையில் யாழ்பாணம் ஆகிய மாநிலங்களை உள்ளடிக்கியது. ஒவ்வொரு திருமண்டலத்திலும் 100-க்கும் மேற்பட்ட சி.எஸ்.ஐ. ஆலயங்கள், பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் அந்தந்த திருமண்டல பேராயரின் கட்டுப்பாட்டில் இருக்கும். இவை அனைத்தையும் நிர்வகிக்க இந்த 24 திருமண்டலங்களுக்கும் தனித்தனி பேராயர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் தலைமைப் பேராயராக ஒருவர் இருக்கிறார். அவர், பிரதம பேராயர் என்று அழைக்கப்படுகிறார். தற்போது பிரதம பேராயராக இருப்பவர் திருவனந்தபுரம் திருமண்டலத்தைச் சேர்ந்த பேராயர் தர்மராஜ் ரசலம் இருந்து வருகிறார்.
இது ஒருபுறம் இருக்க, இப்பேராயர்களின் ஓய்வுபெறும் வயது 67-ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதை 70-ஆக உயர்த்த வேண்டும் என்று பேராயர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து, 24 திருமண்டலங்களையும் சார்ந்த பேராயர்களின் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டிருக்கிறது. இதில், ஓய்வுபெறும் வயதை 67-ல் இருந்து 70-ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. எனினும், 24 திருமண்டலங்களில் பெரும்பான்மையை நிரூபிக்க குறைந்தது 15 திருமண்டலங்களில் ஆதரவுத் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். ஆகவே, ஒவ்வொரு திருமண்டலங்களிலும் நிர்வாகக் குழுவினரை வரவழைத்து ஆலோசனைக் கூட்டங்கள் நடந்து வருகின்றன. ஆனால், பேராயர்களின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவதற்கு பெரும்பாலான திருமண்டலங்களின் பெருமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில்தான், தூத்துக்குடி – நாசரேத் திருமண்டலத்தின் நிர்வாகக் குழுவினருடனான ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி சண்முகபுரத்தில் உள்ள தூய பேதுரு ஆலயத்தில் நேற்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதம பேராயர் தர்மராஜ் ரசலம் மற்றும் கோவை திருமண்டலத்தின் பேராயரும், தூத்துக்குடி – நாசரேத் திருமண்டலத்தின் பேராயராக பொறுப்பு வகித்து வரும் ரவீந்திரனும் காரில் வந்திருக்கிறார்கள். இதையறிந்த திருமண்டல நிர்வாகிகள் மற்றும் திருமண்டலத்தைச் சேர்ந்த மக்கள் ஒன்று திரண்டு, பேராயரையும், பிரதம பேராயரும் வந்த காரை மறித்து, ஆலயத்துக்குள் வர விடாமல் தடுத்து, திருப்பி அனுப்பி இருக்கிறார்கள். இருவரையும் காரை விட்டுக்கூட இறங்கவிடவில்லை. நிர்வாகிகளின் கடும் எதிர்ப்பைக் கண்டு மிரண்டுபோன பேராயரும், பிரதம பேராயரும் காரை விட்டு இறங்காமலேயே திரும்பிச் சென்றனர். இதனால், ஆலோசனைக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.
தற்போது பிரதம பேராயராக இருக்கும் தர்மராஜ் ரசல், இன்னும் ஒரு மாதத்தில் ஓய்வுபெற இருக்கிறார். ஆகவே, தனது ஓய்வுக்கு முன்பு வயதை உயர்த்தி தீர்மானம் நிறைவேற்ற முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. பேராயர், பிரதம பேராயர் விரட்டி அடிக்கப்பட்ட சம்பவம் திருமண்டல சி.எஸ்.ஐ. கிறிஸ்தவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.