தி.மு.க ஆட்சியில் தொடரும் லாக்கப் மரணம் சமூக ஆர்வலர்கள் பகீர் குற்றச்சாட்டு.
திராவிட முன்னேற்ற கழகம் தமிழகத்தில் ஆட்சியை பிடித்த பின்பு லாக்கப் தொடர்பான மரணங்கள் தொடர்கதையாக உள்ளது. நாட்டு மக்களிடம் உண்மையை எடுத்துகூற வேண்டிய ஊடகங்கள், பத்திரிக்கைகள் வழக்கம் போல கப்சிப். காரணம் என்னவெனில், நடப்பது தி.மு.க ஆட்சி என்பதே யாரும் மறுக்க முடியாத உண்மை. அந்த வகையில், ராமநாதபுர மாவட்டத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியை சேர்ந்த மாணவர் மணிகண்டன் (வயது 21 ) தனது இருசக்கர வாகனத்தில் சென்று உள்ளார். அப்பொழுது, வாகன பரிசோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்த காவல்துறையினர் இவரது வண்டியை நிறுத்துமாறு கூறியுள்ளனர்.
இதையடுத்து, மாணவர் தனது பைக்கை சில மீட்டர் தூரம் தள்ளி நிறுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால், சினம் கொண்ட காவல்துறையினர் மாணவனை நடுரோட்டில் போட்டு அடித்து உதைத்து உள்ளனர். இதனை தொடர்ந்து, காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அங்கேயும் அவர் மீது மிருக தனமாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதன்பின்னர், மணிகண்டனின் பெற்றோரை காவல்துறையினர் தொடர்பு கொண்டு உங்கள் மகனை அழைத்து செல்லுமாறு கூறியுள்ளனர். இதையடுத்து, வீட்டிற்கு சென்ற மாணவன் மாலையில் ரத்த வாந்தி எடுத்து மரணம் அடைந்த சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
தனது மகன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரின் தாய், உறவினர்கள் மற்றும் ஊர் பொதுக்கள் காவல்துறையினர் மீது பகீர் குற்றச்சாட்டினை சுமத்தி இருந்தனர். மணிகண்டன் குடும்பத்திற்கு நீதி கிடைத்ததா என்பது மில்லியன் டாலர் கேள்வி.
இந்த நிலையில், கடந்த 18.4.2022-ம் தேதி இரவு 11.30 மணியளவில், சென்னை கெல்லீஸ் சந்திப்பில் தலைமைச் செயலக காலனி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புகழும் பெருமாள், காவலர் பொன்ராஜ், ஊர்காவல்படையைச் சேர்ந்த தீபக் ஆகியோர் வாகனச் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். அப்போது, அந்த வழியாக ஆட்டோவில் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சுரேஷ் (28), பட்டினம்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ் (25) வந்துள்ளனர். அவர்களின் ஆட்டோவை வழிமறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதையடுத்து, இருவரும் முன்னுக்குப் பின் முரணான பதில் அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து, அவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து காவல்நிலையம் அழைத்து சென்றுள்ளனர். மறுநாள் காலை 19.4.2022 இருவருக்கும் காவல்துறையினர் உணவு வழங்கியுள்ளனர்.
சிறிது நேரத்தில் விக்னேஷுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, உடனடியாக அவரை தனியார் மருத்துவமனைக்கு காவலர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். விக்னேஷை பரிசோதித்த டாக்டர்கள் இவரின் நாடி துடிப்பு குறைவாக உள்ளது. உடனே, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவனைக்கு அழைத்துச் செல்லும்படி அறிவுறுத்தியுள்ளனர். அந்த வகையில், அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியில் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். விக்னேஷை அடித்தே காவல்துறையினர் கொன்று விட்டதாக அவரின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அ.தி.மு.க ஆட்சியில் இருந்த சமயத்தில், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவர் காவல்துறையினர் விசாரணையில் உயிரிழந்தனர். அப்பொழுது, எடப்பாடி அரசை தி.மு.க எம்.பி கனிமொழி, உதயநிதி ஸ்டாலின், முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் மற்றும் அடிமை ஊடகங்கள், பத்திரிக்கைகள் எப்படியெல்லாம் விமர்சனம் செய்தன. இப்பொழுது, விக்னேஷ் மரணத்திற்கு மட்டும் ஏன்? வாய் திறக்கவில்லை. காரணம் தி.மு.க ஆட்சி என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.