டெல்லி துணை முதல்வருக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

டெல்லி துணை முதல்வருக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

Share it if you like it

மதுபானக் கொள்கை முறைகேடு புகாரில் டெல்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியா மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்திருக்கும் நிலையில், அவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக பதவி வகித்து வருகிறார். துணை முதல்வராக மனீஷ் சிசோடியா பதவி வகித்து வருகிறார். இந்த சூழலில், ஆம் ஆத்மி அரசு, 2021 – 22-ம் ஆண்டு புதிய மதுக் கொள்கையைக் கொண்டு வந்தது. அதாவது, மதுபானங்களை சில்லறை விற்னை செய்து கொள்ளவும், வீட்டிற்கே டெலிவரி செய்யவும் அனுமதி வழங்கப்பட்டது. சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்பட்ட இந்த புதிய கொள்கை, நிகழாண்டு ஜூலை 31-ம் தேதியுடன் நிறைவடைந்து விட்டது. இதையடுத்து, இக்கொள்கையை ஆம் ஆத்மி அரசு வாபஸ் பெற்று விட்டது.

இந்த புதிய மதுபானக் கொள்கை அமல்படுத்தியதில்தான் ஆம் ஆத்மி அரசு மிகப்பெரிய ஊழல் செய்திருப்பதாக டெல்லி துணை நிலை ஆளுநர் வினய் குமார் குற்றம்சாட்டி, சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று பரிந்துரை செய்தார். இதைத் தொடர்ந்து, மதுபான நிறுவனங்கள், பார்களுக்கு அனுமதி வழங்கிய டென்டரில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி டெல்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியா வீடு உள்ளிட்ட அவருக்குச் சொந்தமான இடங்களில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சி.பி.ஐ. சோதனை நடத்தியது. இதன் தொடர்ச்சியாக, தற்போது மனீஷ் சிசோடியாவுக்கு சி.பி.ஐ. லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. சமீபத்தில்தான் சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் டெல்லி சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த சத்யேந்திர ஜெயின் கைது செய்யப்பட்டார். தற்போது மனீஷ் சிசோடியாவும் கைது செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த நிலையில், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், “மதுபானக் கடை உரிமை கொள்கையில் தவறில்லை என்றால், அதை ஏன் திரும்பப் பெற வேண்டும். தவிர, சாராய வியாபாரிகள் மீது உங்களுக்கு என்ன கரிசனம். நீங்கள் குற்றமற்றவர்கள் என்றால் 24 மணி நேரத்துக்குள் அரவிந்த் கெஜ்ரிவால் நாட்டு மக்களுக்கு பதிலளிக்க வேண்டும். மதுபானக் கடைகளுக்கு உரிமம் வழங்கிய ஊழலில், டெல்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியாதான் முதல் குற்றவாளி. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கொள்ளைக் கும்பல் தலைவர். மனீஷ் சிசோடியா மவுனமாக இருப்பதால் இனிமேல் அவரை ‘Money Shh’ என்றுதான் சொல்ல வேண்டும்” என்று கூறி, அதுதொடர்பான பதாகை ஒன்றையும் காட்டினார்.


Share it if you like it